அடேயப்பா…! – 8 : டைனோசர் கால்தடம்
பொலிவியா, வரலாற்றுக்கு முந்தைய உலகம் பற்றிய பார்வையை உலகுக்கு வழங்கும் டைனோசர் கால்தடங்கள் சேகரிப்புக்குத் தாயகமாக உள்ளது. அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிதறிக் காணக் கிடக்கும் இந்தக் கால்தடங்கள், சுமார் 68 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, டைனோசர்கள் பூமியில் சுற்றித் திரிந்த கிரெட்டேசியஸ் காலத்தைச் சேர்ந்தவை.
இந்த குறிப்பிடத்தக்க இடங்களில் சுக்ரேயில் பகுதியில் கால் ஓர்க்கோ எனும் அகன்ற பெரும் பாறைப்பகுதி உள்ளது, அங்கு பார்க் கிரெட்டாசிகோ அமைந்துள்ளது. இந்த செங்குத்தான குன்றின் முகம் ஏறத்தாழ எட்டு வெவ்வேறு டைனோசர்கா இனங்களின் 5,000 ல்தடங்களைக் காட்டுகிறது, இதில் தெரோபாட்கள், சாரோபாட்கள் மற்றும் ஆர்னிதோபாட்கள் ஆகியன அடங்கும்.
குன்றின் மீது பாதுகாக்கப்பட்ட கால்தடங்கள் பண்டைய உயிரினத் தொடக்க காலத்துடன் நேரடி இணைப்பை வழங்குகின்றன. இது ஒரு காலத்தில் அப்பகுதியில் வாழ்ந்து வந்த டைனோசர்களின் பண்புகள், நடவடிக்கைகள் மற்றும் இயக்கம் பற்றிய தெளிவை நமக்கு வழங்குகிறது.
ஒரு செங்குத்துச் சுவரில் கால்தடங்கள் பதிந்துள்ள இப்பகுதி மில்லியன் கணக்கான ஆண்டுகளாக பொலிவியாவில் நிலைத்துள்ளது. இந்தத் தளம் ஒரு குறிப்பிடத்தக்க பழங்காலத் தொல்பொருள் ஆய்வுப் பெட்டகமாகத் திகழ்கிறது. இந்தக் கம்பீரமான உயிரினங்களின் பண்டைய முத்திரைகளை நேரில் கண்டு வியக்கும் வண்ணம் உலகம் முழுவதிலுமிருந்து பார்வையாளர்களை ஈர்க்கிறது.
(இன்னும் ஏராளம் இருக்கு…)