தொடர் கதை : காட்டுவாசி – 3 : எங்க அந்தப் பசங்க?
குழந்தைகளைத் துரத்தி வந்த மாசியும், மலையாண்டியும் அச்சத்தில் அந்த இடத்தை விட்டு ஓடினர் பிறகு அமுதாவும், மாணிக்கமும் ஒளிந்திருந்த பாறைக்குப் பின்புறமிருந்த, பெரிய மரத்தின் பின்னால் இருந்து காட்டுவாசி வந்தார்.
ரங்குவும் மரத்தின் மேலிருந்து ‘தடால்’ எனக் குதித்து காட்டுவாசி அருகில் போய் நின்றான். ‘‘குழந்தைகளே… வெளியே வாங்க! உங்களைத் துரத்திக் கிட்டு வந்த ரெண்டு பேரும் பயந்து ஓடிப் போயிட்டாங்க. பயப்படாம வாங்க… வாங்க”… உங்களைக் காப்பத்தத்தான் நாங்க வந்திருக்கோம்! என்றார் காட்டுவாசி.
புதருக்குள்ளிருந்து மெல்லத் தலையை நீட்டியபடி வெளியே வந்தனர். அமுதாவும் மாணிக்கமும். காட்டுவாசியின் வித்தியாசமான தோற்றத்தைப் பார்த்து மிரண்டபடியே பாறையின் முன் பக்கம் வந்து நின்றனர்.
‘‘டேய்! ரங்கு… சரியான நேரத்திலே இந்த இடத்துக்கு வந்து… இவங்களைக் காப்பாத்திட்டோம். நான் சொன்ன மாதிரியே மரத்து மேலே ஏறி அந்த ஆளு தலையிலே எலும்புத் துண்டுகளைப் போட்டே… இல்லேன்னா… அந்த ஆளு இவங்க தலையிலேயே கட்டையாலேயே ஓங்கி அடிச்சிருப்பான். உன் உதவிக்கு ரொம்ப நன்றி.”
காட்டுவாசி சொன்னதை ஏற்றுக் கொண்டதைப் போல் தலையை ஆட்டி ‘கிரீச்… கிரீச்… கிரீச்…’ என்றான் ரங்கு.
‘‘ஓ… எங்களை விரட்டிக்கிட்டு வந்த மாசியும், மலையாண்டியும் ஓடிப்போனதுக்கு நீங்கதான் காரணமா?” என்று தயங்கித் தயங்கிப் பேசினாள் அமுதா.
‘‘அப்ப… சத்தமா பேசின வன தேவதை எங்க இருக்கு?” என்று சுற்று முற்றும் பார்த்தபடி கேட்டான் மாணிக்கம்.
பலமாகச் சிரித்த காட்டுவாசி… “இங்கு நின்னு நிழல் கொடுக்கிற மரம், செடி, கொடிகளும், ஓடி… ஓடி… பறந்து பறந்து இரை தேடுற மிருகங்களும் பறவைகளும் தவிர… நானும் ரங்குவும் தான் இருக்குறோம். வனதேவதை யெல்லாம் இல்லை” என்றார்.
‘‘அப்புறம் எப்படி வனதேவதை பேசுச்சு?” என வியப்போடுக் கேட்டார் மாணிக்கம்.
‘‘அடேய்! நான்தான் வனதேவதை… இந்த இடத்தை விட்டுப் போயிடு… இல்லே… உன்னைப் புடுச்சுக் கடிச்சு ரத்தத்தைக் குடிச்சிடுவேன். ஹ… ஹ… ஹா” என குரலை மாற்றிக் குரல் கொடுத்தார் காட்டுவாசி.
மிரள மிரள விழித்தபடி… காட்டுவாசி பேசியதைக் கேட்ட அமுதா… ‘‘ஆக… இங்கே வன தேவதை இல்லவே இல்லை… அப்படித்தானே?” என்றாள் அமுதா.
‘‘ஆமாம்! வனதேவதை எல்லாம் எங்கேயும் இல்லை அது கற்பனைக் கதாபாத்திரம்” என்று காட்டுவாசி சொல்லி முடிப்பதற்குள்…
‘‘அட… இல்லாத வன தேவதையை இருக்குன்னு நம்பி… அது வந்து கடிச்சு ரத்தத்தைக் குடிச்சிடும்னு பயந்துதான் அந்த ரெண்டு பேரும் ஓடிட்டாங்களா?”… எனக் கேட்டான் மாணிக்கம்.
‘‘ஆமா! ஆமா! இல்லாததை இருக்குன்னு நம்பிக் கிட்டுதானே நிறைய பேரு… அது பின்னாடி ஓடுறாங்க! இல்லேன்னா… அது துரத்துதுன்னு பயந்து ஓடுறாங்க. அப்படி அச்சப்படுற மக்கள் இருக்கிற வரைக்கும்… மூடநம்பிக்கை வியாபாரிகளுக்கு நல்ல லாபம் சரி… சரி, இந்த மாதிரி குருட்டு நம்பிக்கையப் பத்தி பேசிக்கிட்டிருந்தா… இருட்டியே போயிடும். வாங்க நான் தங்கி இருக்கிற இடத்துக்குப் பேசிக்கிட்டே போவோம்.” என்று முன்னால் நடந்தார் காட்டுவாசி.
அவரது நம்பிக்கை யூட்டும் சொற்கள் அமுதாவுக்கும், மாணிக்கத்திற்கும் ஆறுதலாய் இருந்ததால் அவரைப் பின் தொடர்ந்து நடந்தனர். அவர்களுக்குப் பின்னால் ரங்குவும் ஆடி அசைந்து நடந்தான்.
காட்டுவாசியும், ரங்குவும் பாட்டுப் பாடி ஆட்டம் போட்ட இடத்திற்கு வந்து சேர்ந்தனர் நால்வரும்.
‘‘இதுதான் நம்ம இடம். அதோ… பாருங்க… அங்க அருவித் தண்ணீர் ஓடை மாதிரி ஓடுது… இங்க பாருங்க… மரத்து மேலே பரண்”.
அமுதா அந்த அழகான இயற்கைச் சூழலைப் பார்த்துக் கொண்டே “ஏங்க! காட்டுவாசி! நீங்க இங்கதான் குடியிருக்கீங்களா?” என்றாள்.
‘‘ஆமா!”
‘‘சாப்பாட்டுக்கு என்ன செய்வீங்க? ‘‘என அடுத்த கேள்வி கேட்டாள் அமுதா.
‘‘அடடா! பேசிக்கிட்டே வந்ததுலே நான் அதையே மறந்துட்டேன்.
ரங்கு!… மேலே பரண்ல உரிச்சு வச்ச பலாப்பழம், உரிக்காத வாழைப்பழம் எல்லாம் இருக்கு. அதைக் கொண்டு வந்து இவங்களுக்கு கொடு. போ… போ…”
ரங்கு தாவிக் குதித்து ஓடினான்.
‘‘நாங்க சாப்பிட்டே ஒரு நாள் ஆகுது. நான் நேத்து மதியம் சாப்பிட்டேன். அதுக்கு அப்புறம் தண்ணி கூட குடிக்கலே” என்றான் மாணிக்கம்.
‘‘நானும்தான்” என்றாள் அமுதா. ‘‘கவலைப்படாதீங்க; பழத்தைத் தின்னு பசி ஆறிட்டு அப்புறம் மத்தக் கதையப் பேசுவோம்.”
ரங்கு தன் தோளில் வாழைப்பழத் தாரையும், கையில் ஒரு பிரம்புத் தட்டில் பலாச் சுளைகளையும் எடுத்து வந்தான்.
ரங்கு பழங்கள் எடுத்து வருவதைப் பார்த்தும் மாணிக்கம் “ராமா… ராமா… முதல்ல எனக்கு ரெண்டு வாழைப்பழத்தைக் குடு… ரொம்பப் பசிக்குது…!” என்றான்.
காட்டுவாசி மாணிக்கத்தைப் பார்த்து சிரித்தபடி “தம்பி உங்க பேர் என்ன?” என்றார்.
‘‘என் பேரு மாணிக்கம்”…
“இந்தக் குரங்கு பேரு ராமன்னு யார் சொன்னது?”
“எங்க ஊர்லயெல்லாம் குரங்கை அப்படித்தான் கூப்பிடுவோம்”
‘‘அப்படியா… அப்ப ராமரை எப்படிக் கூப்பிடுவிங்க” எனக் கேள்வி எழுப்பினார் காட்டுவாசி. விழித்தான் மாணிக்கம்.
‘‘ஆமா… குரங்கை ராமன்னு கூப்பிட்டா… ராமரை எப்படிக் கூப்பிடுறது?” என்றாள் அமுதா.
“அந்தக் கவலை இப்ப எதுக்கு? வரும்போது பாத்துக்குவோம். இப்பப் பசிக்குது… குரங்கு நண்பனை எப்படிக் கூப்பிடுறது?” எனக் கேட்டான் மாணிக்கம்.
‘‘அதுக்கு நான் வச்ச பேரு… ரங்கு”… என்றார் காட்டுவாசி.
‘‘நல்லா இருக்கே… குரங்கு என்கிறதுல முதல் எழுத்து `கு’வை எடுத்துட்டுக் கூப்பிடணுமா?”
“சரி… ரங்கு… எனக்கு ரெண்டு பழம் குடு…” என்று ரங்கு தோளில் இருந்த வாழைத் தாரிலிருந்து பழங்களைப் பறித்து தின்னத் தொடங்கினான் மாணிக்கம்.
ரங்கு வாழைத் தாரையும், பலாச்சுளைத் தட்டையும் பக்கத்தில் இருந்த திண்ணை போன்ற பாறை மீது வைத்து விட்டு எங்கோ ஓடினான்.
அமுதா பலாச் சுளைகளை எடுத்துச் சாப்பிட்டாள்.
காட்டுவாசியோ, அவர்கள் பசியில் பழங்களை வேக வேகமாகச் சாப்பிடுவதைப் பார்த்து ரசித்தபடி… அமுதாவின் பக்கம் திரும்பி…
‘‘பாப்பா… உங்க பேரு என்ன?”
‘‘என் பேரு அமுதா”…
‘‘ஆமா, உங்க ரெண்டு பேரையும் எதுக்காக அவனுங்க ரெண்டு பேரும் துரத்திக்கிட்டு வந்தாங்க? நீங்க எந்த ஊரு… அதெல்லாம் நான் தெரிஞ்சுக்கலாமா?” என்று ஆவலாய்க் கேட்டார்.
அதற்குள் ரங்கு ஒரு சுரைக் குடுக்கையில் தண்ணீர் கொண்டு வந்து வைத்தான்.
மாணிக்கம் வாழைப்பழம், பலாச்சுளை என சாப்பிட்டு முடித்து சுரைக்குடுக்கையில் இருந்த தண்ணீரை எடுத்துக் குடித்துவிட்டு…
‘‘எனக்கு அமுதாவைத் தெரியாது. அமுதாவுக்கும் என்னைத் தெரியாது.”
‘‘எங்களை அந்த மாசியும், மலையாண்டியும் கடத்திக் கொண்டு வந்துட்டாங்க”
‘‘ஆமா! நான் வீட்டுல கோவிச்சுக்கிட்டு… பீச்சுக்கு வந்தேன். அங்கேதான் என்னைக் கார்ல ஏத்திக் கடத்துனாங்க”… என்றாள் அமுதா.
‘‘நானும் வீட்டுல கோவிச்சுக்கிட்டுதான் பீச்சுக்கு வந்தேன். என்னையும் கார்ல தூக்கிப் போட்டு கடத்திக்கிட்டு வந்துட்டாங்க.” என்றான் மாணிக்கம்.
‘‘இந்தக் காட்டுப் பக்கமா வரும் போது கார் டயர் பஞ்சராயிடுச்சு. அவங்க ரெண்டு பேரும் கார்லே இருந்து இறங்கி கார் டயரை மாத்தும் போது நானும் மாணிக்கமும் நைசாத் தப்பிச்சு காட்டுக்குள்ள ஓடி வந்துட்டோம்” என்றாள் அமுதா.
‘‘ஏன் நீங்க வீட்ல கோவிச்சுக்கிட்டீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா?” ஆவலாய்க் கேட்டார் காட்டுவாசி.
(தொடரும்)