திறமை: அரசுப் பள்ளியில் கலைத் திருவிழாக்கள்
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பரிந்துரைப்படி அனைத்து தொடக்க பள்ளிகளிலும் கலை திருவிழா நடத்துமாறு கூறிய அறிவிக்கை கடிதம் எங்கள் பள்ளிக்கும் வந்தது. அந்தக் கடிதத்தை எனது பள்ளி வகுப்பாசிரியர் எங்களிடம் படித்துக் காண்பித்தார். அதைக் கேட்டதும் நானும் எனது தோழிகளும் துள்ளிக் குதித்தோம். கலைத் திருவிழாவில் ஓவியம் வரைதல், பாட்டுப் போட்டி, பரதநாட்டியம், நாட்டுப்புற நடனம், பல குரல், களிமண் பொம்மைகள் செய்தல் மற்றும் பேச்சுப் போட்டி அறிவிப்பு இருந்தது. இந்தப் போட்டிக்குத் தலைப்பு “சுற்றுச் சூழல் பாதுகாப்பு அனைவரின் பொறுப்பு” 4.9.2024 நடைபெறுவதாக இருந்தது. நான் பரதநாட்டியம் மற்றும் பேச்சு போட்டியில் கலந்து கொண்டேன்.
நான் பேச்சுப் போட்டியில் “சுற்றுச் சூழல் பாதுகாப்பு அனைவரின் பொறுப்பு” என்ற தலைப்பில் நம் வீடு மட்டும் தூய்மையாய் இருந்தால் போதாது. சுற்றுச் சூழல் தூய்மையும் இன்றியமையாதது ஆகும்.
நாம் வாழும் பூமி பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவானதாகும். இப்பூமி நீர், நிலம், காற்று, ஆகாயம், நெருப்பு எனும் இவற்றால் ஆனது. இப்படிப்பட்ட இயற்கைச் சூழல் மாசடைவது நமக்கு நாமே வைத்துக் கொள்ளும் தீக்கொள்ளியாகும். தற்போது பருவ காலங்கள் மாறிக்கொண்டே வருகின்றன. ஆனால், இப்போது மழை பெய்தால் அதிகமாகப் பெய்து விடுகிறது. வெய்யில் அடித்தால் வெளியில் கூட போக முடியாத அளவிற்கு வெய்யில் அடிக்கிறது. காரணம், காலநிலை மாற்றம் (Climate Change)இதனால் புவி வெப்பமடைந்து, பல நோய்கள், உயிர் இழப்பு, பருவம் தவறிய மழை போன்றவை ஏற்படுகின்றன. அது மட்டுமா? தொழிற்சாலைகளின் புகை, வாகனங்களின் புகை, மற்றும் குப்பைக்கழிவு எரிபொருளின் விளைவால் காற்று மாசு ஏற்படுகிறது.
அடுத்து எங்கும் காணும் பிளாஸ்டிக். முதலில் பிளாஸ்டிக்கை கடைகளில் பார்த்தோம். பின் நம் வீடுகளில் பார்த்தோம். இப்போது குப்பை மேடுகளிலும் மாட்டுச் சாணத்திலும் கலந்திருப்பதைச் காண்கிறோம். தற்போது பிளாஸ்டிக் மற்றொரு பரிணாமத்தை எடுத்துள்ளது. அதுதான் மைக்ரோ பிளாஸ்டிக். அது மனிதன் குடிக்கும் குடிநீர், நிலத்தடி நீர், மனித ரத்தம் தொடங்கி தாய்ப் பாலிலும் கலந்துவிட்டது. மாசடைந்த நீர், நிலம், காற்று மற்றும் உணவையா நம் எதிர்காலத் தலைமுறைக்குக் கொடுக்கப் போகிறோம்? ஆனால், இது பற்றிச் சிந்திக்காத ஒவ்வொரு மனிதனின் அலட்சியத்தினாலும் தான் காற்று மாசினால் மட்டும் சுமார் 1.67 மில்லியன் இறப்பு இந்தியாவில் பதிவாகியுள்ளது. 1984இல் போபால் வாயுக் கசிவு, 2020இல் விசாகப்பட்டினம் வாயுக் கசிவு அண்மையில் எண்ணூர் வாயு கசிவு போன்றவற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் பலர். இந்தியாவில் பிறக்கும் 33இல் ஒரு குழந்தை சுற்றுச் சூழல் மாசால் பிறவிக் குறைபாட்டுடன் பிறக்கிறது. இந்தியாவில் 163 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களுக்குப் பாதுகாப்பான குடிநீர் வசதி இல்லை. இவ்வாறு சொல்லிக் கொண்டே போகலாம்.
ஆனால், எப்படி இந்த நிலையை மாற்றுவது? மாணவர்களுக்குச் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்த மிஷன் இயற்கைத் திட்டம், பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்க மீண்டும் மஞ்சப்பை திட்டம், மழைநீர் சேகரிப்பு திட்டம், பசுமைத் தமிழ்நாடு இயக்கம், தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கம் எனப் பல முயற்சிகளை அரசு மேற் கொள்கிறது. அரசாங்கம் மட்டும் நினைத்தால் மாற்றக்கூடிய செயல் அல்ல. இது நம் சிந்தனை மாற்றம், செயல் மாற்றம் சேர்ந்து சமூகத்தின் மாற்றமாக வேண்டும். வரும் தலைமுறைக்குச் சுற்றுச் சூழல் முக்கியத்துவத்தை உணர்த்துவது போன்ற சிறு சிறு மாற்றங்களை மேற்கொண்டாலேயே மாசில்லாச் சூழலை உருவாக்கலாம். ‘மணி நீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடையது’ தான் நம் நாட்டிற்கு அரண் என்று பேசினேன். போன்று அரசுப் பள்ளிகளில் கலைத் திருவிழா நடத்துவது மூலம் நமது திராவிடப் பண்பாட்டையும் கலையையும் மீட்டு உருவாக்க முடியும். நாங்கள் இந்தச் சிறுவயதில் இந்தக் கலைகளைக் கற்றுக் கொள்வது வருங்காலத்தில் எங்கள் முன்னேற்றத்திற்கு உதவும்.
– சு.ஆ. தமிழ் பிரபாகரனி,
ஆவடி மாநகராட்சி தொடக்கப்பள்ளி,
கோயில் பதாகை.