அறிவின் விரிவு – 4: செயற்கை நுண்ணறிவுக்கு நோபல் பரிசு!
பிஞ்சுகளே,
கடந்த வாரம் சாட் ஜி பி டி (Chat GPT) பற்றிப் பார்த்தோம் அல்லவா? அதன் தொடர்ச்சியைத் தான் இந்த வாரம் எழுதலாம் என்Wறிருந்தேன். ஆனால் அதற்குள் செயற்கை நுண்ணறிவுத் துறைக்கு மிகப்பெரிய ஓர் இன்ப அதிர்ச்சியுடன், வியக்கும்படியான உலகப் பரிசு ஒன்று கிடைத்திருக்கிறது. அது செயற்கை நுண்ணறிவுத் துறையில் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, கணினித் துறையில் இருப்பவர்களுக்கும் தான்.
ஆமாம்! 2024 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசுகளை செயற்கை நுண்ணறிவுத் துறையில் ஆய்வு செய்பவர்களுக்குக் கொடுத்திருக்கிறார்கள். அதுவும் ஒன்றல்ல, இரண்டு! இதுவரை கணினித் துறையில் இருப்பவர்களுக்கு நோபல் பரிசு கிடைத்ததில்லை. கணினித் துறையில் ஆய்வுகள் செய்பவர்களுக்கு பேரறிஞர் ஆலன் ட்யூரிங் பெயரில் உருவாக்கி வைத்திருக்கும் ட்யூரிங் விருது தான் நோபல் பரிசுக்கு நிகரான விருது. ஆனால் நேரடி நோபல் பரிசு கணினித் துறைக்கு இதுவரை கொடுக்கப்பட்டதில்லை.
2024 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு செயற்கை நுண்ணறிவுத் துறையில் ஒரு பகுதியான செயற்கை நரம்பியல் வலைப்பின்னல்கள் (Artificial Neural Network) உருவாக்கக் காரணமாக இருந்த ஜான் ஹாஃபீல்ட் மற்றும் ஜெஃப்ரி ஹிண்டன் ஆகியோருக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஜெஃப்ரி ஹிண்டனை `செயற்கை நுண்ணறிவின் தந்தை’ என அழைப்பார்கள். இன்னொரு சுவையூட்டும் தகவலையும் சொல்கிறேன். ஜெஃப்ரி ஹிண்டனின் முழுப் பெயர் ஜெஃப்ரி எவரெஸ்ட் ஹிண்டன். இந்த எவரெஸ்ட் என்னும் பெயரைக் கேள்விப்பட்டிருப்பீர்களே? ஆமாம், ஜெஃப்ரி ஹிண்டனின் தாத்தாவுடைய அப்பா இந்தியாவில் பணிபுரிந்தபோது இமையமலைத் தொடரிலுள்ள உள்ள சிகரங்களின் அளவைக் கணக்கிட்டவர். அவரது நினைவாகத்தான் இமயமலையில் உள்ள ஒரு சிகரத்திற்கு எவரெஸ்ட் சிகரம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இயற்பியலுக்கான நோபல் பரிசு கணினித் துறைக்கு அதுவும் செயற்கை நுண்ணறிவுத் துறையின் ஆய்வுக்கு என்பதில் கொஞ்சம் குழப்பமாக இருக்கும். இன்று உலகை ஆண்டு கொண்டிருக்கும் செயற்கை நுண்ணறிவுத் துறையின் பிரிவான டீப் லேர்னிங் (Deep Learning) அல்காரிதங்கள் உருவாக மிக முக்கியமான காரணம் ஜான் ஹாஃபீல்ட் மேற்கொண்ட இயற்பியல் துறை ஆய்வுகள்தான். இயற்பியல் விதிகள் அடிப்படையில் அவர் உருவாக்கிய ஹாஃபீல்ட் நெட்வொர்க் எனும் முன்மாதிரியை அடிப்படையாகக் கொண்டுதான் ஜெஃப்ரி ஹிண்டன் அல்காரிதங்களை உருவாக்கினார்.
இந்த டீப் லேர்னிங் அல்காரிதங்கள் இன்று அனைத்து துறைகளிலும் பல்வேறு சிக்கல்களைத் தீர்க்க உதவியாக இருக்கின்றன. இயற்பியல் துறையில் வெறும் கோட்பாடாக இருந்த ஹாஃபீல்ட் நெட்வொர்க்கை அடிப்படையாகக் கொண்டு ஹிண்டன், சமூகத்தில் இருக்கும் பல்வேறு துறைகளில் மாதிரிகளை டீப் லேர்னிங் அல்காரிதம் கொண்டு உருவாக்கினார். அறிவியல் ஆய்வின் ஒரு கோட்பாடு அதற்கு நிகராக மாதிரிகளை உருவாக்கி, சமூகத்தில் உள்ள பல சிக்கல்களுக்குத் தீர்வு கொடுக்கும் போது அதை நோபல் குழு அங்கீகரிக்கிறது. அப்படியாகத் தான் முதன்முறையாக செயற்கை நுண்ணறிவு பற்றிய ஆய்வுகளுக்கு இயற்பியல் துறையின் அடிப்படையில் நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
கணினித் துறை ஆய்வாளர்களும் செயற்கை நுண்ணறிவுத் துறையினரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்கும் இந்நேரத்தில் அடுத்து இன்னொரு பெரு மகிழ்ச்சி கொடுக்கக் கூடிய செய்தி வந்தது. வேதியியக்கான நோபல் பரிசும் மீண்டும் செயற்கை நுண்ணறிவு ஆய்வுகளுக்குக் கொடுக்கப்பட்டது. அதைப்பற்றி நாம் வரும் இதழில் மிக விரிவாகப் பார்க்கலாம்.
(தொடரும்)