அறிவியல் சிறுகதை : காத்தாடி விதை
கயலுக்கு மலை ஏற்றம் என்றால் மிகவும் பிடிக்கும். விடுமுறை நாட்களில் பெரும்பாலும் வனத்துக்குள் தான் இருப்பாள். இதற்காகவே எப்போது விடுமுறை வரும் என்று காத்துக் கொண்டிருப்பாள்.
வனத்துறை அதிகாரிகளுடன் இணைந்து விதைகள் சேகரிக்க உதவுவாள். அரிய வகையான நாட்டு மரங்களின் விதைகளைச் சேகரிப்பதில் கயலுக்கு ஆர்வம் அதிகம்.
விதைக்குள் இருக்கும் அறிவியலை எப்போதும் அவள் வியப்பாகப் பார்ப்பாள். ஒரு சிறு விதைக்குள் எவ்வளவு பெரிய `விருட்சம்’ உள்ளது என்பதை எண்ணி வியப்பாள். ஒரு விதை வளரவேண்டும் என்றால் அதற்கேற்ற தட்பவெட்பச் சூழல் எவ்வளவு சாதகமாக இருக்க வேண்டும் என்பதை அவள் நன்கு அறிந்திருந்தாள். அப்படிப்பட்ட விதைகள் மீது அவளுக்கு எப்போதும் அளப்பரிய பிரியம் உண்டு.
ஒரு முறை விதைகளைச் சேகரிக்கும் போது ஏதோ ஒன்று பறந்து வந்து அவள்மேல் விழுந்தது. அதைக் கையில் எடுத்துப் பார்த்த அவளுக்கு அவ்வளவு ஆச்சரியம். தான் சிறு வயது முதலே அதிகம் கேள்விப்பட்ட “காத்தாடி விதை”. அப்போதுதான் அதை முதன்முதலாய்ப் பார்க்கிறாள். அதுவும் ஒரு மரம் தன்னியல்பாக மலர்களைத் தூவுவது போல, அவ்வளவு மென்மையாக அவள்மேல் வந்து விழுந்தது அந்தக் காத்தாடி விதை.
அந்த விதையைப் பார்ப்பதற்கு இறகு முளைத்த பந்து போல் இருந்தது. விதையின் இரண்டு பக்கங்களிலும் இரு நீண்ட இறக்கை போல் இருக்கும். அந்த இறக்கையின் உதவியால் காற்றில் பறந்து கொண்டே அந்த விதை நீண்ட தூரம் பயணம் செய்யும். ஓர் இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு விதையினைக் கடத்தும் அற்புதத் தொழில் நுட்ப அமைவு தான் அந்த இறக்கைகள்.
தன் மீது விழுந்த காத்தாடி விதையை மேலே வீசி வீசி விளையாடினாள். அது பறந்து வந்து மீண்டும் அவள் மேல் விழுந்தது. விதைகளைக் காடு முழுவதும் விதைக்க இயற்கையாகவே அவற்றுக்கு இறகுகள் இருப்பதை எண்ணி வியந்தாள்.
மேலும் இதன் மரத்தைத்தான் நமது முன்னோர்கள் ஆற்றில் செல்ல மிதவையாகப் பயன்படுத்தினார்கள் என்றார் அங்கிருந்த இனியன்.
கயல் மற்றும் அவளது குழுவினர் தாங்கள் சேகரித்த விதைகளை அங்குள்ள ஒரு குளத்தின் அருகில் கொண்டு வந்து வைத்து, செம்மண்ணால் சிறு சிறு உருண்டைகள் செய்து, அதனுள் விதைகளை வைத்து விதைப் பந்துகளை உருவாக்குவார்கள்.
அப்படிச் செய்யப்பட்ட விதைப் பந்துகளை மழைக்காலம் தொடங்கியதும் மீண்டும் வனத்தில் விதைப்பார்கள். இப்படி ஆயிரக்கணக்கான விதைகளை அந்தக் குழுவினர் வனப்பகுதி முழுவதும் விதைத்துள்ளார்கள்.
ஏற்கனவே விதைத்த விதைகள் இப்போது செடிகளாக வளர்ந்திருப்பதைப் பார்க்கும் போது கயலுக்கு அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். அந்தச் செடிகள் காற்றில் அசைந்து தலையை ஆட்டுவது கயலுக்கு நன்றி சொல்வது போல் இருக்கும்.
நண்பகல் நேரம் வெய்யிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. நடந்து கொண்டே வனத்தின் மய்யப்பகுதிக்குக் கயலும் அவளது குழுவினரும் வந்தடைந்தார்கள். அங்கிருந்த அத்தி மரத்தடியில் அமர்ந்து ஓய்வெடுத்தனர். வெய்யிலுக்கு அத்தி மரத்தின் நிழல் அவ்வளவு குளுமையாக இருந்தது.
ஆண்டுக்கு எண்ணற்ற விதைகளை அத்தி மரம் இந்த மண்ணில் தூவுகின்றது. அத்திப் பழத்தில் சிறு துளை போல் உள்ள வாசல் வழியாகச் செல்லும் பெண் அத்திக்குளவி அதனுள் மகரந்தச் சேர்க்கை செய்கிறது. அப்போது இயற்கையாகவே அத்திக் குளவியின் சிறகுகளும், கொடுக்கும் அதனுள் உதிர்ந்து விடுகின்றன.
அத்திக் குளவிகள் அந்தப் பழத்திற்குள் முட்டை இடுகின்றன. அந்த முட்டையிலிருந்து வெளிவரும் சிறு குளவிகள் அந்த விதைகளையே உண்கின்றன. அப்படி உருவாகும் அத்திக் குளவிகள் பெரும்பாலும் பெண் குளவிகளாகவே இருக்கின்றன. விதைகளை எல்லாம் தின்றபிறகு அதிலிருந்து ஒன்று, இரண்டு பெண் அத்திக் குளவிகள் மட்டுமே பழத்தினுள் இருந்து வெளியே வருகின்றன” என்று சூழலியலாளர் கோவை சதாசிவம் அவர்கள் ஒரு முறை சொன்னதை தனது குழுவிற்குக் கதையாகச் சொன்னாள் கயல்.
ஒரு மரத்தினுள் இவ்வளவு செய்திகள் அடங்கி இருப்பதை எண்ணி, குழுவினர் அனைவரும் ஆச்சரியமடைந்தார்கள். மேலும் மரத்தின் வேர்கள் மண்ணை இறுக்கப் பற்றி இருப்பதால் மண்ணரிப்பு ஏற்படுவது தடுக்கப்படுகிறது என்பதையும் விளக்கினார்கள். நிழல் மட்டும் தான் மரத்தின் பயன் என்றிருந்தவர்களுக்கு இந்தச் செய்திகள் புதிய பார்வையை உண்டாக்கின.
பருவநிலை மாற்றத்தால் உரிய காலத்தில் மரங்கள் பூக்காமலும், காய்க்காமலும் இருப்பதால் பறவை உள்ளிட்ட உயிரினங்கள் எவ்வளவு பாதிக்கப்படுகின்றன என்பதையும், இதனால் உணவுச் சங்கிலியில் ஏற்படப்போகும் பாதிப்புகள் குறித்தும் வனத்துறை அதிகாரிகள் விளக்கினார்கள்.
எண்ணற்ற விதைகளைச் சேகரித்து மீண்டும் காடுகளை உருவாக்கும் புதிய முயற்சியோடு அக்குழுவினர் மாலை வீடு திரும்பினர்.
இப்போது காடுகளைப் பற்றியும், விதைகளைப் பற்றியும், மரத்தின் எண்ணற்ற பயன்கள் பற்றியும் அவர்கள் நன்கு அறிந்து கொண்டார்கள்.<