பறவைகள் அறிவோம் – 9: பூநாரை
இந்தியாவில் பூநாரை அல்லது செங்கால் நாரை என்று அழைக்கப்படும் நாரை வகையைச் சேர்ந்த இப்பறவை ஆங்கிலத்தில் கிரேட்டர் ஃபிளமிங்கோ (GREATER FLAMINGOS) என்று அழைக்கப்பட்டாலும் ஃபிளமிங்கோ எனும் சொல் இலத்தின் மொழியிலிருந்து வந்தது. இவற்றில் நான்கு வகையான நாரைகள் அமெரிக்கா மற்றும் அய்ரோப்பிய நாடுகளிலும், இரண்டு வகையான நாரைகள் யுரேசியா பகுதியிலும் காணப்படுகின்றன. இது நீர் நிலைகளை நம்பியே வாழும் பறவை. உப்புத் தன்மை உள்ள ஏரிகளிலும், சகதி நிறைந்த குளங்களிலும் நாம் இவற்றைக் காணலாம்.
நீண்டு வளைந்த கழுத்தும், குறுகிய வளைந்த அலகும், நீண்ட முடியற்ற இளஞ்சிவப்பு நிறத்தைக் கொண்ட கால்களும் கொண்டிருக்கும் இருக்கும் வாத்துக்கு கால் விரல்கள் போல இதன் மூன்று விரல்கள் இடையே சவ்வு போன்ற தோலால் இணைக்கப்பட்டிருக்கும். ஃபிளமிங்கோவின் இறக்கை மிக நீளமாக இருக்கும்.
இந்தப் பறவை என்னதான் சேறு, சகதிகளில் தனக்கான உணவைத் தேடிக் கொண்டாலும் இதன் இறகுகளில் படியும் கறையையும், சேற்றையும் தன் உடலில் உற்பத்தியாகும் ஒரு வகையான சிறப்பு எண்ணெய்யை அதன் அலகுகளின் உதவியுடன் இறகுகள் மீது பரவச் செய்து தன்னைத்தானே சுத்தப்படுத்துகிறது. ஒரு நாளில் தங்கள் இறகுகளைச் சுத்தம் செய்வதில் சுமார் 15 இல் இருந்து 30 சதவிகித நேரத்தைச் செலவிடுகின்றது. இச் செயலால் எப்பொழுதும் ஃபிளமிங்கோ சுத்தமாக இருக்கும்.
இப்பறவை இனம் இரை தேடுவதற்கோ அல்லது வலசைக்குச் செல்லும்போதோ கூட்டம், கூட்டமாகத் தங்களது இளஞ்சிவப்பு நிறக் கால்களைப் பின்னோக்கி நீட்டியும் நீண்ட கழுத்தை முன்னோக்கி நீட்டியும் பறந்து செல்வதைக் காணலாம். இது 1 மணி நேரத்திற்கு 60கி.மீ. வேகத்தில் ஒரு நாளைக்கு 600 கிலோ மீட்டர் தொலைவு பறந்து செல்லும் ஆற்றல் கொண்டது.
பூநாரை எளிதில் நீண்ட தூரம் நீந்திச் செல்லும் ஆற்றலும் கொண்டது. சற்றே ஆழமான பகுதிகளில் இரையைத் தேடும்போது இதன் வால்பகுதி மட்டும் தண்ணீரின் வெளியேயும் உடல் முழுவதும் நீருக்குள் இருக்கும் படி முக்குளித்த நிலையிலேயே புழுக்களை அரித்து உண்ணும். ஃபிளமிங்கோ ஓய்வெடுக்கும் போது கொக்கு நிற்பது போல ஒற்றைக் காலிலே நிற்கும். ஆனால் பறக்கும் போது வாத்து பறப்பது போன்ற அமைப்பில் சிறகுகளை விரித்துப் ‘பட பட’ என அடித்துப் பறந்து செல்லும். சில சமயங்களில் வாத்தைப் போல ஒலி எழுப்பும். ஆழமற்ற நீரில் இறங்கி வரிசையாக நின்று தலையை நீருக்குள் அழுத்தித் தனக்கே உரிய விந்தையான மேல் அலகைத் தரையில் படும்படி கவிழ்த்து வைத்துக் கொண்டு சேற்று நீரில் உணவைத் தேடிக் கொண்டே நடக்கும். இந்நிலையில் அதன் மேல் அலகு, கிண்ணம் போல் அமைந்து சேற்று நீர் அதில் சேகரிக்கப்படுகிறது. சதைப் பற்றுள்ள நாக்கு நீரினுள் ஒரு மத்து கடைவதுபோல் கடைந்தவாறு மீன்கள், புழு, பூச்சிகளை அலசும். இதன் அலகின் ஓரங்களில் இருக்கும் சீப்பு போன்ற இடைவெளியின் வழியாக நீர் முழுவதையும் வடிகட்டிய பின் அலகின் உள்ளே இருக்கும், மீன், புழு, பூச்சி, கூனி, இறால் போன்றவற்றை உணவாக உண்ணும். சில நேரங்களில் நீர்த் தாவரங்களின் அழுகிய விதைகளையும் உணவாக உட்கொள்ளும்.
இந்தக் கூனி வகை உயிரினத்தில் அதிகப்படியான காரோட்டினாய்டு நிறமிகள் இருக்கின்றன.
இதை உண்ணும் நாரைகளின் உடல் மற்றும் கால் பகுதிகள் இளஞ்சிவப்பாக காணப்படுவதற்கு இந்த நிறமி தான் காரணம் என பறவை ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். காரணம், பறவைகள் சரணாலயத்தில் வளர்க்கப்படும் பூநாரைகள் இளஞ்சிவப்பு நிறத்தில் இருப்பதில்லை. அவை சாம்பல் நிறத்தில் காணப்படுகின்றன.
அக்டோபரிலிருந்து மார்ச் வரையிலான காலங்களில் இப்பறவையின் இனப்பெருக்கக் காலமாகும். இணைச் சேர்க்கைக்குப் பின்னர் கூடுகட்டி, முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கின்றன. இப் பறவையின் கூடு சற்றே வித்தியாசமானது. குளத்தின் கரையோரங்களில் தரையிலிருந்து சுமார் 30 செ.மீ. உயரத்திற்கு சேற்று மண்ணைக் குவித்து ஈரமான களிமண்ணைக் கொண்டு கூட்டைக் கட்ட ஆரம்பிக்கும். கூட்டின் மேல் பகுதியில் சிறிய பாத்திரம் அல்லது சட்டி போன்ற அமைப்பில் கூட்டைக் கட்டுகிறது. கூட்டின் மேல், சூரியனின் வெப்பம் படுவதால் எளிதில் உலர்ந்து கெட்டியாகி பார்ப்பதற்குs சுட்ட அடுப்பு போல் காணப்படும். இதனுள் ஒன்று அல்லது இரண்டு முட்டைகள் வரையிட்டு ஆண், பெண் இரு பறவைகளும் மாறி, மாறி அடைகாக்கின்றன. அமர்ந்த நிலையில் கால்களை வசதியாக மடக்கி அடைகாக்கின்றன.
அடை காத்துப் பொரிக்காமல் போனாலோ அல்லது மற்ற விலங்குகளினால் முட்டை உடைந்து விட்டாலோ மீண்டும் அந்தப் பருவத்தில் முட்டையிடுவதில்லை. ஆண்டுக்கு ஒருமுறை தான் முட்டையிடுகின்றன. நாம் முன்பே சொன்னபடி பூநாரை குஞ்சுப் பருவத்தில் சாம்பல் நிறத்தில் தான் இருக்கும். வளர்ந்து உண்ணும் உணவில் இருந்து கிடைக்கும் காரோட்டினாய்டு நிறமியால் கால்களும், உடலும் இளஞ்சிவப்பு நிறத்தை அடைகின்றன.
இந்தியாவில் குஜராத் மாநிலத்திலுள்ள ரன்-கட்ச் வளைகுடாப் பகுதியில் லட்சக்கணக்கான பூநாரைகள் இனப்பெருக்கம் செய்வதால் அப்பகுதியை `பூநாரைகளின் நகரம்’ என்று பறவைகள் ஆராய்ச்சியாளர் சலீம் அலி அறிவித்தார்.
“இப்பொழுது மணி என்ன இருக்கும்?” எனக் கேட்டால், உடனே நாம் கடிகாரத்தைப் பார்ப்போம். ஆனால், நம் முன்னோர்கள் காலையில் பறவைகள் சத்தமிடுவதை வைத்தே நேரத்தைக் கணக்கிட்டார்கள். கரிச்சான் குருவி காலை 3 மணிக்கும், குயில் காலை 4 மணிக்கும், சேவல் காலை 4:30 மணிக்கும், காகம் காலை 5:00 மணிக்கும், கவுதாரி காலை 5.30 மணிக்கும், மீன் கொத்தி காலை 6:00 மணிக்கு சத்தமிடுமாம்.
இவ்வாறு மனிதர்களைக் காலையில் எழுந்திருக்க வைக்கும் `அலாரம்’ போல், மனிதர்களோடு ஒட்டி உறவாடும் ஓர் உயிரினமாய் பறவைகள் நம்மோடு வாழ்கின்றன. அவற்றை நாம் போற்றிப் பாதுகாக்க வேண்டும். அவற்றின் நலத்திற்காகக் குரல் கொடுங்கள். சமூகச் கடமையாகப் பறவைகளுக்குத் தொண்டு செய்யுங்கள்.
பூநாரை வாழும் உலகு
பூ உலகிற்கு அழகு!