சுய மாண்பொளி ஏற்று
கட்டுப் பாடும் கண்ணியமும்
கடமை நெஞ்சின் இருவிழிகள்;
விட்டுக் கொடுக்கும் பண்பிருந்தால்
வெற்றி உன்றன் காலடியில்;
முட்டி மோதி முயன்றிங்கே
மூடத் தனத்தை எதிர்த்திடுவாய்;
சுட்டிக் காட்டி யாவினிலும்
சுயசிந் தனையைப் புகுத்திடுவாய்;
வெட்டிங்(கு) ஒன்று துண்டிரண்டாய்;
வெளிப்ப டையாய் பேசிடுவாய்;
குட்டுப் பட்டே விட்டாலும்
குன்றாய் ஓங்கி நின்றிடுவாய்;
நெட்டித் தள்ளி வீழ்த்திடவே
நிலத்தில் இங்கே பலருண்டு;
கெட்டிக் காரத் தனமாகக்
கேட்டை எதிர்த்தே உயர்ந்திடுவாய்;
பட்டி தொட்டி யாவினிலும்
பகுத்தறி வினையே பரப்பிடுவாய்;
வெட்டிப் பேச்சு பேதைமையை
வீழ்த்தி கல்வி அறிவூட்டு;
தட்டிக் கேட்பாய் பழமைகளின்
தகுதி யெல்லாம் யாதென்றே;
சுட்டிக் காட்டு தவறுகளை
சுயமாண் பொளியை ஏற்றிடுவாய்!
கே.பி.பத்மநாபன்,
கோவை.