நொடியில் போன கடிதம்
கையில் எழுது கோல்இல்லை
கடிதம் எழுதத் தாள்இல்லை
அன்பு நண்பர்க்கு உடனேநான்
அவசரக் கடிதம் எழுதணுமே
என்ன செய்யலாம் என்றே நான்
எண்ணிச் சோர்ந்த வேளையிலே
“உன்றன் கையை உற்றுப்பார்!
உள்ளேன் என்னை மறந்தாயா?”
“கையால் தட்டித் தட்டிநீ
கடிதம் அனுப்ப முயலுவாய்
எழுத்துகள் தட்டி முடித்ததும்
இருக்கும் சிறிய விசையினிலே
விரலை வைத்தால் போதுமே
விரைந்து அதுபோய்ச் சேர்ந்திடுமே!”
என்றது கையில் திறன் பேசி
எழுந்து முயற்சி செய்தேனே!
சிலமணித் துளிகளில் கடிதத்தைச்
சிறப்பாய்த் தட்டி முடித்தவுடன்,
அடுத்த நொடியே கடிதத்தை
அனுப்பி விட்டேன்; மகிழ்ந்தேனே!
– – முனைவர் முரசு நெடுமாறன்