நல்லடதைச் செய்வோமே!
இனியா எப்போதும் ‘துறுதுறு’ என இருப்பாள். சக வயதுக் குழந்தைகளுடன் விளையாடுவது அவளுக்கு எப்போதும் பிடிக்கும். சனி, ஞாயிறு விடுமுறை என்றாலே அவளுக்கு அவ்வளவு மகிழ்ச்சி. இனியாவோடு பக்கத்து வீட்டுக் குழந்தைகள் அனைவரும் மாலையில் ஒன்றாகச் சேர்வர். ஒவ்வொரு நாளும் ஏதாவதொரு விளையாட்டை விளையாடி மகிழ்வர்.
அன்றும் அனைவரும் ஒன்றாக கூடினர்.
“நாம் இன்று கிரிக்கெட் விளையாட-லாமே” என்று சொன்னான் வெற்றி.
“ஆம்! விளையாடலாம்” என்று புனிதா முன்மொழிந்தாள்.
“கிரிக்கெட்டா?” எனக் கேள்வி எழுப்பினாள் வனிதா.
“ஆமாம். டி.வியில் கூட இப்போது தினமும்; விளையாடுகிறார்களே” என தருமன் சொல்ல….
“சரி” என அனைவரும் கிளம்பினர். வெற்றி மட்டையைக் கொண்டு வந்தான். புனிதா பந்து கொண்டு வர, வனிதா ஸ்டம்ப் கொண்டு வந்தாள். தருமன் தனது பங்குக்குத் தண்ணீர் கொண்டு வந்தான். இனியா பிஸ்கட் கொண்டு வந்தாள்.
அனைவரும் விளையாட ஆரம்பித்தனர்.
வனிதா பந்து வீசினாள். புனிதா மட்டையைக் கொண்டு அடித்தாள். வெற்றியும், தருமனும், இனியாவும் சுற்றி நின்றனர்.
வனிதா அடித்த ஒரு பந்து, பறந்து சென்று தெருவின் சாக்கடை அருகே இருந்த ஒரு குழியில் விழுந்தது. அனைவரும் ஓடிச் சென்று, பந்தைத் தேடினர்.
“ஏய்! இங்கே பாருங்கள்! இந்தக் குழியில் சத்தம் கேட்கிறது!” என்றாள் இனியா.
“அப்படியா?” என வியப்போடு கேட்டாள் புனிதா.
“ஆம்! கேட்கிறது. ஒரு நாய்க்குட்டி உள்ளே விழுந்து இருக்கிறது” வெற்றி சுட்டிக் காட்டினான்.
அனைவரும் சேர்ந்து அந்த நாய்க்குட்டியை வெளியே எடுக்க முயற்சி செய்தனர்.
குழந்தைகள் விளையாடாமல் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் எனப் பெற்றோர்கள் பார்த்தனர்.
“நாய்க்குட்டி உள்ளே விழுந்திருச்சு” என அனைவரும் சொல்ல, பெற்றோர்கள் ஓடி வந்தனர். நாய்க்குட்டியை வெளியே எடுத்தனர். நாய்க்குட்டி அச்சத்துடன் மேலும் கத்தியது. தருமன் தான் வைத்திருந்த தண்ணீரை அருகில் கிடந்த கொட்டாங்கச்சியில் ஊற்றி நாய்க்குட்டியின் அருகில் வைத்தான்.
நாய்க்குட்டி குடித்தது. இனியா பிஸ்கட் போட்டாள். நாய்க்குட்டி அனைத்தையும் சாப்பிட்டது. பின் ஓடிச் சென்று விட்டது.
அனைத்துப் பெற்றோரும், ”இங்கே வரக் கூடாது. பாருங்கள், பள்ளம் தோண்டி மூடாமல் இருக்கிறது. விளையாடும்போது விழுந்து விடுவீர்கள். யாரும் இங்கே வராதீர்கள்” என்றனர்.
அன்று குழந்தைகள் அனைவரும் கலைந்து சென்றுவிட்டனர்.
மறுநாள் புனிதா அனைவரையும் அழைத்தாள். வனிதாவும் வெற்றியும் வெளியே வந்தனர்.
தருமனும் இனியாவும் எங்கே? எனப் பார்த்தனர்; தேடினர்.
தருமன் அந்தப் பள்ளத்தின் அருகில் இருந்தான். அவனுடைய தந்தை சிமெண்ட் கலந்த கலவையைக் கொண்டு வந்தார். இனியா சிறு சிறு ஜல்லிகளைக் கொண்டு வந்தாள். அனைவரும் அந்தப் பள்ளத்தை மூடினர்.
அப்போது தருமனின் தந்தை சொன்னார்,
“பள்ளத்தை மூட வேண்டும் என இனியாவும் தருமனும் தொந்தரவு செய்தனர். இது நல்ல பொது நலசேவை தானே… மூடி விட்டோம்”.
அனைவரின் முகங்களிலும் புன்னகை தவழ்ந்தது.