கதை கேளு கதை கேளு: சிக்கிய வால்
அலறல் சத்தம் கேட்டது… மார்கோ மட்டும் என்னமோ ஏதோ என்று சுற்றிச் சுற்றிப் பார்த்தது. மார்கோ ஒரு கட்டெறும்பு. இனிப்பு எடுத்து வருவதற்கு வரிசையில் போய்க்கொண்டு இருந்தது. அலறல் வந்த திசையை நோக்கி அது மட்டும் திரும்பியது. அதன் பின்னால் வந்த எறும்பிடம் “நீங்க போங்க, நான் வரேன்” என்று சொல்லிவிட்டது. இல்லை என்றால், முன்னால் செல்லும் எறும்பின் வழியே எல்லா எறும்புகளும் சென்றுவிடும்.
அலறல் சத்தம் கொஞ்சம் குறைந்து இருந்தது.கதவின் இடுக்கில் ஒரு பல்லி மாட்டி இருந்தது. ‘அச்சோ!’ என்று பரிதாபப்பட்டு வேகவேகமாகச் சென்று விடுவிக்க முடியுமா என்று பார்த்தது மார்கோ. வாலின் நடுப்பகுதி கதவு மூடும்போது மாட்டிக்கொண்டு இருந்தது. வால் மாட்டியதால் பல்லி கத்தி இருக்க வேண்டும். பல்லி கத்துவது விநோதமாக இருக்கும். சில நொடிகள் ஆராய்ந்த பின்னர் பல்லியின் முகத்திற்கு முன்னர் வந்து,
“உங்க வால் நல்லா மாட்டிகிட்டு இருக்கு”
“ஆமா எறும்பே”
“என் பெயர் மார்கோ. எங்களுக்கு இந்த ஒரு இனிப்பு கிடைச்சிருக்கு. உங்க அலறல் கேட்டு வந்தேன். ஏதாவது உதவி தேவைப்படுமா?”
பல்லி தன் தலையைத் தலையை ஆட்டியது. அழகான கண்கள். உருட்டி உருட்டிக் காட்டி தனக்கு என்ன நடக்குமோ என்ற பயம் வேறு.
“உன் பேரு என்ன?”
“சாரங்கன் 244”
“அட, அதென்ன வால் மாதிரி பேருக்குப் பின்னாடி 244?”
“இந்தக் கட்டடத்திற்கு வந்து எத்தனையாவது வம்சாவளி என்பதைக் குறிக்கும் எண். எங்கள் மகள், மகன் இவர்கள் பெயருடன் 245 என்று வைப்போம். என் அப்பா அம்மாவிற்கு 243 என்று இருந்தது”
“ஓ! அப்படியா செய்தி
சரி, இப்போது எப்படி இங்கிருந்து போவாய் சாரங்கா?”
“கதவு திறந்தால்தான் நான் கிளம்ப முடியும். பாதி வால் அறுந்துவிட்டது. கொஞ்சம் ஒட்டிக்கிட்டு இருப்பதை மட்டும் உணர முடியுது”
மீண்டும் எறும்பு ஏதேனும் செய்ய இயலுமா என்று பார்க்கச் சென்றது. கதவைத் திறக்க முடியுமா என்றும் யோசித்தது. அது தன் சக்தியால் முடியாத ஒன்று என்று புரிந்தது. குச்சியை வைத்துத் தள்ள முடியுமா என்றும் யோசித்தது. மிகச் சிறிய குச்சியை மட்டுமே நகர்த்த இயலும். ஆனால், பல்லியின் வாலிலிருந்து ரத்தம் எதுவும் வரவில்லை.
“மன்னிக்கவும், என்னால் எதுவும் செய்ய முடியவில்லை”
“இருக்கட்டும் நண்பா, கதவு திறக்கும்வரை நான் இப்படித்தான் இருக்க முடியும்”
“நான் வேணும்னா உள்ள இருக்கற மனிதருடைய காலில் சென்று கடிக்கவா? அலறிக்கொண்டு வெளியே வரக் கதவைத் திறப்பார் அல்லவா?”
“என்ன மார்கோ, விழியன் கதைகளை நிறையக் கேட்பாயோ? வீட்டுக்குள்ளே யாருமில்லை. எல்லோரும் வெளியே போயிருக்காங்க; காத்திருக்கேன்; நீ கிளம்பு”
சிக்கலில் இருப்பவர்களை எப்படித் தனியாகத் தவிக்க விட்டுச்செல்வது என நினைத்தது எறும்பு. அந்தச் சமயம் மற்றொரு பல்லி வேக வேகமா வந்தது “என்ன சாரங்கன் 244 வால் மாட்டிகிச்சா? கெக்கெக்கே..” எனச் சிரித்துவிட்டு ஓடிவிட்டது. எறும்புக்குக் கடும் கோபம். உதவி செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை, இப்படி கிண்டலடித்துவிட்டுப் போகுதேன்னு வருத்தம். சாரங்கன் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை “அட, விடு நண்பா! சிலர் அப்படித்தான். கோவப்பட்டு நம்ம உடலைக் கெடுத்துக்கக் கூடாது” என்றது.
விடுபடும்வரையில் சாரங்கனுடன் இருக்கப் போவதாகச் சொல்லிவிட்டது மார்கோ. சாப்பாடு ஏதாவது வேண்டுமா என்றது. காலை வரை பசி தாங்கும் என்றது பல்லி. ஓயாமல் பல்லிகளைப் பற்றிக் கேட்டுக்கொண்டே இருந்தது எறும்பு.
“ஆமா, நீங்க மனிதர்கள் மேல விழுந்தா ஏதோ பலன் எல்லாம் இருக்கிறதாமே! எப்படிச் சரியான தருணத்தில் விழுவீங்க? யார் சொல்லி யார் மேல விழுவீங்க?”
“அட, நீ வேறப்பா… சுவரில் போகும்போது தவறி விழுந்துவிடுவோம். அதற்குப் பலன் கிலன்னு எதெதையோ சொல்றாங்க”
எறும்பு விழுந்து விழுந்து சிரித்தது. அந்த வலியிலும் பல்லியும் சேர்ந்து சிரித்தது.
“ஆமா! உங்க உடம்பில விஷம் இருக்கிறதாமே! நீங்க சாம்பாரில் விழுந்தால் விழுந்தால் சாம்பார் முழுக்க விஷமாயிடும்னு சொல்றாங்களே” என்று கேட்டது மார்கோ. கொஞ்ச நேரம் யோசித்துவிட்டு, நீண்ட பதிலைச் சொன்னது; “எங்கள் உடம்பில் விஷமே இல்லை. ஆனால், நாங்கள் பல இடங்களுக்குப் போவோம். பல பூச்சிகளை உண்போம். அதில் விஷம் இருக்கலாம். சாம்பாரில் விழுந்தால் தப்பிக்க முயற்சி செய்து இறந்துவிடுவோம். அப்ப வெளியேறும் எங்க கழிவுகளில் விஷம் இருக்கலாம். ஆனால் வாந்தி, பேதி, மயக்கம் எல்லாம் பயத்தால்தான் அதிகம். உணவினை மூடிவெக்கறதுதான் தீர்வு”.
புதிய செய்தி ஒன்றைக் கேட்ட திருப்தியில் இருந்தது எறும்பு. பல்லியும் எறும்பைப் பற்றிக் கேட்டுத் தெரிந்துகொண்டது. சாப்பாடு, புற்று, ராணி எறும்பு பற்றியெல்லாம் சலிக்காமல் கேட்டது. கொஞ்ச நேரம் இருவரும் தூங்கினர். இடையிடையே எழுந்து, யாரேனும் வருகின்றார்களா என்றும் பார்த்தது.
காலையில் ஒரு பெண்மணி கதவைத் திறக்கவே பல்லி விடுபட்டது; ஆனால், வால் அறுந்துவிட்டது. “அது தானா வளரும், கவலை வேண்டாம் நண்பா. உன்னுடன் இருந்த நிமிடங்களை மறக்கவே மாட்டேன். தனியாக இரவெல்லாம் கடினமாக இருந்திருக்கும்” என்று வருத்தப்பட்டு, நன்றி கூறியது.
எறும்புகள் இனிப்பு சேகரிக்கச் சென்ற இடத்திற்குச் சென்று பெரிய இனிப்புக் கட்டியை எடுத்துக்கொண்டு, மார்கோவை தன் தலையில் அமர வைத்து எறும்புகளின் புற்று வாசல் வரைக்கும் கொண்டு சென்று விட்டது. சாரங்கன் 244.
“சாரங்கன் 245 அல்லது சாரங்கி 245அய் எனக்கு அறிமுகம் செய்”
“கண்டிப்பாக நண்பா”