தொடர் கதை-காட்டுவாசி-4: எப்படி கடத்தினார்கள்?
அமுதா பேசத் தொடங்கினாள்.
“எங்க வீடு சென்னை மந்தவெளியிலே… பெரிய பிளாட்ல இருக்கு. நானு… எங்க அப்பா… அம்மா… பாட்டி… எல்லோரும் அந்த வீட்லதான் இருக்கோம்.
தினமும் காலையில தூங்கி எழுந்ததும் எங்க அப்பா என்னை டூவீலர்ல கூட்டிக்கிட்டுப் போயி… பக்கத்துத் தெருவுல இருக்கிற பாட்டு டீச்சர் வீட்டுல விடுவாரு. அங்கே ஒரு மணி நேரம் பாட்டு சொல்லித் தருவாங்க.
அது முடிஞ்சதும் வீட்டுக்குப் போயி, பள்ளிக்கூடம் போக அவசர அவசரமாத் தயாராகணும். வேன் வந்ததும்… பள்ளிக்கூடம் போவேன்.
பள்ளிக்கூடம் போயிட்டு வந்ததும்… கம்ப்யூட்டர் கிளாசு, டியூசன் கிளாசுன்னு வரிசையாப் போவேன். எல்லாத்துக்கும் போயிட்டு வீட்டுக்கு வந்து சாப்பிட்டுத் தூங்கப் போயிடுவேன்.
இது எல்லாமே புடிச்சு இருந்தாலும்… எனக்கு விளையாட்டுன்னா ரொம்பப் புடிக்கும். அதுக்கு மட்டும் எங்க அப்பா அனுப்பவே மாட்டாரு. ஏன்னா… விளையாட்டுக்குக் கூட அவருக்கு விளையாட்டுப் புடிக்காது.
பொம்பளைப் புள்ளைக்கு விளையாட்டு எதுக்குன்னு விளையாட்டைப் பார்க்கக் கூட அனுப்ப மாட்டாரு. அவருக்குப் புடிச்சதைத் தான் வீட்ல எல்லாரும் செய்யணும்னு நினைப்பாரு.
பல தடவை அப்பா கிட்டே கேட்டுக் கேட்டு எனக்கே அலுத்துப் போச்சு. அதனாலே யார்கிட்டேயும் சொல்லாம கோவிச்சுக்கிட்டு கம்ப்யூட்டர் கிளாசுக்குப் போறேன்னு பாட்டிகிட்டே சொல்லிட்டு… நடந்தே பீச்சுக்கு வந்துட்டேன்.
அங்கே சில பேரு பந்தைத் தூக்கிப் போட்டுப் புடிச்சு விளையாடிக் கிட்டிருந்தாங்க. அதையே கொஞ்ச நேரம் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கிட்டிருந்தேன்.
இப்ப எங்களைத் துரத்திக்கிட்டு வந்தாரே தாடி வச்ச ஆளு மாசி… அவரு என் பக்கத்துலே வந்து “பாப்பா என்ன விளையாட்டையே ஆச்சரியமாப் பாத்துக்கிட்டு இருக்கே். நீ விளையாடறதுக்குப் உனக்குப் பந்து வேணுமா? நான் தர்றேன். உன் கூட யாரு வந்திருக்கா?” அப்படின்னு பேச்சுக் கொடுத்தாரு.
“யாரும் என் கூட வரலே… நான் மட்டும் தனியாத்தான் வந்திருக்கேன்னு”… சொன்னேன்.
“சரி… வா… அதோ அந்தக் கார்லே பந்து வச்சிருக்கேன். உனக்குத் தர்றேன்”னு கூப்பிட்டாரு.
விளையாட்டு ஆர்வத்திலே… அவரு கூட கிளம்பி கார் வரைக்கும் போனேன். அந்த மாசி கார் கதவைத் திறந்துட்டு, “பாப்பா வா… பந்தை எடுத்துக்கோ”ன்னு சொன்னாரு. நான் கார் உள்ளே எட்டிப் பார்த்தேன். அவ்வளவுதான் பின்னாடியிருந்து என்னைக் காருக்குள்ள தள்ளி விட்டு கதவைச் சாத்திட்டாரு. காருக்கு உள்ளே ஏற்கனவே மாணிக்கம் அழுதுக்கிட்டு உட்கார்ந்திருந்தான். அந்த வழுக்கைத் தலையா இருந்த மலையாண்டியும் உள்ளே… இருந்தான்.”
அமுதா சொன்னதைக் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்த காட்டுவாசி, “ஓ… இவனுங்க ரெண்டு பேருமே குழந்தை கடத்துற கும்பல் போலிருக்கு.”
“அது தெரியாமத்தான் நாங்க மாட்டிக்கிட்டோம்” என ஆதங்கப்பட்டாள் அமுதா.
“நீ எப்படி அவனுங்ககிட்ட மாட்டுனே மாணிக்கம்?” என மாணிக்கம் பக்கம் திரும்பிக் கேட்டார் காட்டுவாசி.
“அமுதா மாதிரி பெரிய வீடு, வசதி வாய்ப்புன்னு எதுவுமே இல்லாத ஏழைக் குடும்பம் எங்க குடும்பம். அம்மா, தாத்தா, நானு. நாங்க மூணு பேருதான். பக்கிங்காம் காவா ஓரத்துல நிறைய குடிசைகள் இருக்குமே… விசாலாட்சிபுரம்னு… அங்கேதான் எங்க வீடு.”
“உனக்கு அப்பா… இல்லையா?” என வருத்தத்தோடு கேட்டாள் அமுதா.
“நான் பிறந்து ஒரு வயசு இருக்கும்போது அப்பா… ஜுரம் வந்து இறந்து போயிட்டாருன்னு அம்மாதான் சொன்னாங்க.
அம்மா நாலு வீட்டுக்குப் போயி… பாத்திரம் தேய்க்கிறது, துணி துவைக்கிறது, வீடு கூட்டித் துடைக்கிறதுன்னு… வீட்டு வேலை செய்துதான் எனக்கும், தாத்தாவுக்கும் சோறு போடுறாங்க.
ஆனா… ஒரு நாளும் என்னை ஒரு வேலையும் செய்யவிடாம எப்பப் பார்த்தாலும் ‘படி.. படி… படிச்சு ஒரு நல்ல வேலைக்குப் போயி நல்லா சம்பாதிச்சு வயசான காலத்துல அம்மாவை நீ காப்பாத்து அது போதும்’னு சொல்லுவாங்க.
அம்மா ஒரு ஆளு கஷ்டப்பட்டு எனக்கும் தாத்தாவுக்கும் சோறு போடுறதை நினைச்சாலே எனக்கு வருத்தமா இருக்கும். பள்ளிக்கூடத்தை விட்டு நின்னுட்டு எங்கேயாவது, ஏதாவது ஒரு வேலைக்குப் போயி சம்பாதிச்சு அம்மாவையும், தாத்தாவையும் மகிழ்ச்சியாய் வச்சுக்கணும்னு தோணுது. வேலைக்குப் போறேன்னு சொன்னா அதெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம்; முதல்ல நல்லா படின்னு சொல்லுவாங்க.
வீட்டு வேலை செய்யிறதாலே அம்மாவுக்கு அடிக்கடி காய்ச்சல் வந்து சோர்ந்துபோயி படுத்துக்குவாங்க. பார்க்கப் பாவமா இருக்கும்.
படிச்சு, முடிச்சு வேலைக்குப் போறதை விட இப்பவே வேலைக்குப் போனா… நம்ம குடும்பக் கஷ்டம் தீருமேன்னு நினைப்பேன். நினைச்சதை நிறைவேத்த அம்மாவும் தாத்தாவும் ஒத்துக்கலையேன்னு அவங்க மேல கோவம். பள்ளிக்கூடம் போயிட்டு வீட்டுக்கு வந்து நோட்டுப் புத்தகப் பையைத் தூக்கி வீசிவிட்டு… புறப்பட்டேன்… ஏதாச்சும் ஒரு வேலையில சேர்ந்துட்டுத் தான் வீட்டுக்கே போகணும்ங்குற முடிவோட வீட்டை விட்டு வந்தேன். நானும் அமுதா மாதிரி பீச்சுக்குத்தான் வந்தேன். அங்க நிறைய பேரு இருந்தாங்க. யாரைப் பார்த்தாலும் ஜாலியா… மகிழ்ச்சியா இருக்கிற மாதிரியே தெரிஞ்சது. நான் மட்டுந்தான் குடும்ப நிலமைய நினைச்சு வருத்தப்படுற மாதிரி தோணுச்சு. யாரைப் பாக்குறது, யாருகிட்டே வேலை கேக்குறதுங்கிற நினைப்போட தனியா உக்காந்தேன்.
கொஞ்ச நேரத்துல என் பக்கத்துல வழுக்கைத் தலையா இருந்த அந்த மலையாண்டி வந்து உட்கார்ந்தான்.
“என்ன… தம்பி… ரொம்ப சோகமா உட்காந்திருக்கே. பரீட்சையிலேயேதும் பெயிலாயிட்டியா? வீட்ல யாராவது உன்னைத் திட்டினாங்களா?… யாராவது உன்னை அடிச்சிட்டாங்களா?”ன்னு கேட்டாரு.
சூடா இருக்கிற காப்பியை ஆத்திக் குடிக்க டம்ளரோட கொடுக்கிற டபரா செட்டு மாதிரி ஒரு ஆளு வந்திருக்காரேன்னு நினைச்சு குடும்ப நிலைமையையும் வேலைக்குப் போற எண்ணத்தையும் அவருகிட்டே சொன்னேன்.
“கவலைப்படாதே! தம்பி உனக்கு ஒரு நல்ல வேலை இப்பவே இருக்கு. அதோ இருக்கே ஒரு காரு… அதுல என் முதலாளி உக்கார்ந்து இருக்காரு. உன்னை மாதிரி சின்னப் பசங்களை அவருக்கு ரொம்பப் புடிக்கும். வா… உடனே வேலை குடுப்பாரு”ன்னு… நம்பிக்கையான வார்த்தைகளைச் சொல்லிக்கிட்டே எழுந்திருச்சு, “கவலையை விடு… கையைக் குடுன்”னு… அவரோட வலது கையை நீட்டினாரு… நானும் கையை நீட்ட, என்னைத் தூக்கி விட்டு தோள் மேல கையைப்போட்டுக் கூட்டிக்கிட்டு கார் வரைக்கும் வந்தாரு.
அந்தக் கொஞ்ச தூரம் கடக்கும் போதே என் குடும்பக் கஷ்டமெல்லாம் தீர்ந்து போயி மகிழ்ச்சியா வாழுற மாதிரி நினைப்பு வந்துச்சு. கதவைத் திறந்து முதலாளிகிட்டேப் பேசுன்னு கழுத்தைப் புடிச்சு காருக்குள்ள தள்ளும் போதுதான் நாம ஏமாந்து போயி இந்த ஆளுக்கிட்ட மாட்டிக்கிட்டோம்ங்கிற உண்மை புரிஞ்சது.
நான் காருக்குள்ள மாட்டுன கொஞ்ச நேரத்துல அமுதா வந்தாங்க. நான் யாருன்னு அவங்களுக்குத் தெரியாது. அவங்க யாருன்னு எனக்குத் தெரியாது.” என்று மாணிக்கம் சொல்லும் போதே…
“எங்க ரெண்டு பேருக்குமே மாசி யாரு? மலையாண்டி யாரு? எதுக்காக எங்களை காருக்குள்ள அடைச்சிருக்காங்கன்னு தெரியாது ‘டேய்! மலையாண்டி அந்த கார் துடைக்கிற துணியெ எடு’ன்னு… அழுக்குத் துணியைக் கிழிச்சு எங்க ரெண்டு பேரோட கையையும், வாயையும் கட்டுனான் மாசி.
மாசி காரை ஓட்டினான். மலையாண்டி பக்கத்தில் உக்காந்து.” என்றாள் அமுதா.
திடீர்ன்னு மாசி பாக்கெட்ல இருந்த செல்போன் அடிச்சுது. எடுத்துப் பேசினான்.
“முதலாளி ஒரு பையன், ஒரு பொண்ணு ரெண்டு பேரும் மாட்டிகிட்டாங்க. அங்கே தான் வந்துக்கிட்டிருக்கோம்…
ஆங்… சரி… சரி… சாய்ங்காலத்துக்குள்ள வந்துடுவோம். ஆங்… ஆங்”ன்னு பேசி முடிச்சான்.
“மலையாண்டி! முதலாளி நமக்கு நல்ல ரேட்டு தர்றேன்னு சொல்லிட்டாரு. லம்ப்பா…நமக்கு ஒரு அமவுண்டு கிடைக்கும்டா…” என்றான் மாசி.
“சரி… சரி… இந்த அமவுண்டை வாங்கி நாம செட்டில் ஆயிட வேண்டியதுதான்… ஹ… ஹ… ஹா…” என்றான் மலையாண்டி.
“புஸ்சுன்னு” ஒரு சத்தம்… நல்லா ஓடிக்கிட்டுருந்த வண்டி நொண்டியடிக்கிற மாதிரி ஓடுச்சு. ஓரமா… நிறுத்திட்டு கீழே இறங்கிப் பார்த்த மலையாண்டி, “மாசி, ஒரு டயர் பஞ்சருடா”… என்றான். “சரி ஸ்டெப்னி டயரை சீக்கிரம் மாட்டு… இன்னும் கொஞ்ச தூரந்தான்” என்றான் மாசி.
(தொடரும்)