இப்ப நான் என்ன சொல்றது? கடவுள் மறுப்பாளன் மட்டும் அல்ல!
அதற்கும் மேலே!
“மாற்றம் ஒன்றுதான் மாறாதது!” என்று சென்ற இதழில் முடித்திருந்தேன். அப்படித்தான் நானும் மாறிக்கொண்டே வந்திருக்கிறேன். பேய், பிசாசு, குட்டிச்சாத்தான், காத்து கருப்பு என்று இந்தச் சமூகம் எதையெதையெல்லாம் கற்பித்து வைத்திருந்ததோ, அதையெல்லாம் நானும் சிறு வயதில் நம்பியிருந்தேன். ஆனால், இப்போது அவற்றையெல்லாம் தாண்டி, கடவுள் என்பதே கற்பனைதான் என்ற முடிவுக்குத் தெள்ளத் தெளிவாக வந்துவிட்டேன்.
இந்தக் கால கட்டத்தில்தான் நான் ‘வந்தாரை வாழவைக்கும்’ சென்னைக்கு வந்தேன்.
ஒருநாள்…
தினத்தந்தியில் ஒரு செய்தி படித்தேன்.
இது நடந்தது, கால் நூற்றாண்டுகளுக்கும் முன்பு.
அது என்ன செய்தி?
‘கருப்புச் சட்டை அணிந்த சிலர் தீக்குண்டத்தில் ‘கடவுள் இல்லை’ கடவுள் இல்லை! என்று கூறியபடியே இறங்கி நடந்தனர்’ என்பதுதான் அந்தச் செய்தி.
அது என்னுள் மிகப்பெரிய அதிர்வை ஏற்படுத்திவிட்டது. ‘கடவுள் இல்லை’ என்பது தொடர்பாக எனக்கு ஒரு மனிதரின் பெயரும், ஒரு அமைப்பின் பெயரும் எனக்கு அறிமுகம் ஆனதோடு அடுத்தொரு பரபரப்பான தேடலுக்கும் வாய்ப்பேற்படுத்தித் தந்துவிட்டன.
அந்தப் பெயர், பெரியார்!
அந்த அமைப்பின் பெயர், திராவிடர் கழகம்!
அதுவரையில் கடவுள் இல்லை என்று முடிவு செய்துவிட்டிருந்தேனே தவிர, அதை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்பதைப் பற்றிய செயல்திட்டம் எதுவும் என்னிடம் இல்லை. கடவுள் மறுப்பாளராக இருந்துகொண்டே நான் என்னுடைய பணிகளில் முனைப்புடன் முயற்சி செய்து கொண்டிருந்தேன்.
பெரியார் திடலைத் தேடினேன்… தேடினேன்… தேடிக்கொண்டே இருந்தேன். கண்டுபிடிக்க முடியவில்லை. தோல்வியை ஒப்புக்கொள்ள நான் தயாராக இல்லை. இறுதி வெற்றி எனக்குத்தான்! என்னுடைய பழக்கம் ஒன்று எனக்கு அந்த வெற்றியைத் தேடித்தந்தது.
நூலகத்திற்குச் செல்லும் பழக்கம்தான் அது!
சென்னை வியாசர்பாடி கன்னிகாபுரத்தில் தங்கியிருக்கும் போது, அங்கிருந்த அரசு நூலகத்தில் 10 ரூபாய் கொடுத்து உறுப்பினராகியிருந்தேன். வழக்கமாக நான் சமூக, வரலாற்றுப் புதினங்கள் படிப்பேன். அப்படிப் படித்த ஒரு சமூக வரலாற்று நூல்தான், “இரு கண்கள்”. அந்தப் புத்தகத்தின் ஆசிரியர் பெயர் மறந்துபோனது இன்றைக்கும் எனக்குள் இருக்கும் ஆறாத வடு.
”இரு கண்கள்” புத்தகத்தைப் புரட்டினேன்.
முதல் கண், பேரறிஞர் அண்ணா!
அவரைப்பற்றியும் அப்போதுதான் முதன்முதலாகப் படித்தேன். வியப்பால் விழிகள் அகன்றுவிட்டன. அடடா… இவரல்லவா தலைவர்? என்கிற அளவுக்கு என்னுள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிட்டார்.
நான் சின்ன வயதில் அம்புலி மாமா புத்தகத்திலிருந்து மாறி, மாறி வந்தவன். சிறந்த எழுத்துகள், கருத்துகள்
என்று என்னுடைய தேடல் தொடர்ந்து கொண்டே இருந்தது. எத்தனையோ புதின ஆசிரியர்கள். பெரும்பாலும் அவர்கள் பார்ப்பனர்கள் தான். கண்ணதாசன், கோவி. மணிசேகரன், ஜெயகாந்தன், கலீல் கிப்ரான் போன்ற மற்றவர்களும் உண்டு. ஒன்றைவிடச் சிறந்த ஒன்று என்ற எனது தேடலில் அப்போதைய உயர்ந்த மதிப்பீடு அண்ணா என்றானது. அப்படிப்பட்ட மனநிலையில்தான் இரு கண்களில் அடுத்த கண்ணைப் படித்தேன்.
அந்தக் கண், பெரியார்!
அதைப்படித்து முடித்ததும் அண்ணாவின் இடத்தை, அய்யா பெரியார் மிகச்சுலபமாகப் பிடித்துக் கொண்டார். இவர்தான்! இவரேதான்! இவரைத்தான் நம்மையும் அறியாமல் இத்தனை நாளும் தேடிக்கொண்டிருந்திருக்கிறோம் என்கிற அளவுக்குச் சென்றுவிட்டேன்.
அன்று இரவு எனக்குத் தூக்கம் வரவில்லை.
பெரியாரின் அறிமுகம் கிடைத்துவிட்டது! அடுத்து… பெரியார் திடலையும் தேடத் தொடங்கிவிட்டேன்!
அப்போது நான் வியாசர்படி கன்னிகாபுரத்தி லிருந்து வளசரவாக்கத்திற்கு சென்று வந்து கொண்டிருந்தேன். ஏறக்குறைய 20 கி.மீ இருக்கும். முதலில் சைக்கிளில்தான் சென்று வந்தேன். பின்னர் 37E அரசுப் பேருந்தைப் பயன்படுத்தி வந்தேன். வடசென்னையிலிருக்கும் கண்ணதாசன் நகர் – வளசரவாக்கம் செல்லும் பேருந்து அது. இந்தப் பயணத்தினூடே ஏறக்குறைய 1999 முதல் 2000 ஆம் ஆண்டு முடியும் வரை இரண்டு ஆண்டுகளும் விசாரித்துக்கொண்டேதான் இருந்தேன். படிப்பவர்களுக்கு நம்ப முடியாமல் இருக்கலாம். ஆனால், உண்மை அதுதான்.
ஒரு நாள்…
அதே 37E பேருந்தில் ஓட்டுநருக்கு நேர் பின்பக்கமாக இருக்கும் ஜன்னல் ஓரமாக அமர்ந்தபடி சென்றுகொண்டிருந்தேன். பயணத்திலும் புத்தகம் படிக்கிற பழக்கம் எனக்குண்டு. அன்றைக்கு என்னவோ வெறுமனே வேடிக்கை பார்த்தபடி சென்று கொண்டிருந்தேன்.
ஒரிடத்தைக் கடக்கும் போது, திடீரென்று ஏதோவொரு பரபரப்பு… அடுத்த நிறுத்தமான சென்னை ஆணையாளர் அலுவலகத்தில் வண்டி நின்றது. என்ன ஏதென்று புரியவில்லை. திடுதிப்பென்று இறங்கிவிட்டேன்.
நான் அவசரமாக வளசரவாக்கம் செல்ல வேண்டியவன்.
விறுவிறுவென்று பின்னோக்கிச் சென்றேன். தினத்தந்தி அலுவலகத்திற்கு அடுத்து இருந்த ஒரு 5 மாடிக் கட்டிடம். அதில் வலப்புறச் சுவற்றில் கற்சில்லுகள் மூலமாக பதியப்பட்ட உயர்தோங்கிய ஓவியம் ஒன்று இருந்தது.
உள்ளுக்குள் பீறிட்டெழுந்த உற்சாகத்திற்கு அளவே இல்லை.
அது… அது… பெரியாரின் ஓவியம்!
யாரைப்பற்றியும் கவலைப்படாமல் பரவசத்துடன் வாசலில் நுழைந்தேன். ஒரு உணவகம் எதிர்கொண்டது. புறக்கணித்தேன். கண்கள் அலைபாயத் தொடர்ந்து சென்றேன். திடீரென்று பரவசத்தின் எல்லைக்கே சென்றுவிட்டேன். ஆம், எதிரில் பெரியார் சிலை! ‘வந்துவிட்டோம்.. வந்தேவிட்டோம்…’ என்று புத்திக்குள் பட்டாம் பூச்சிகள் சிறகடித்தன! ஏதேதோ கட்டடங்கள்; மனித நடமாட்டங்கள். யாரையும் அணுகாமல், பெரியார் சிலைக்கு வலப்பக்கமாக சற்றுத்தள்ளி இருந்த ஒரு புத்தக நிலையத்தினுள் உரிமையுடன் நுழைந்தேன்.
குள்ளமாக இருந்த ஒரு பெண் கனிவுடன், “வாங்கப்பா” என்று வரவேற்றார்.
தயக்கத்துடன், “பெரி…யார் கட்சி….யில் சேரவேண்டும்?” என்றேன்.
சொன்னார்! சேர்ந்தேன்! உயிர்ப்புடன் இன்றும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அய்யா அவர்களின் தலைமையில் 24 ஆண்டுகளாகத் தொடர்கிறேன்!
இப்படித்தான் நான் என்னை, “பெரியார் வசம்” ஒப்புவித்தேன்.
என்னை வரவேற்ற அந்தப் பெண்ணின் பெயர், “மனோரஞ்சிதம்”
பெரியார் பிஞ்சுகளே!
‘இப்ப நான் என்ன சொல்றது?’
இப்போது, நான் வெறும் ’கடவுள் மறுப்பாளர்’ மட்டும் இல்லை, தெரியுமா?
பிறகு?
அதற்கும் மேலே! அறிவுலக ஆசான் தந்தை பெரியாரின் தொண்டன்!