உரசல் தவிர்க்கும் “உயவு” வார்த்தைகள்
கட்டை வண்டி முதல் கனரக இரயில் வண்டி வரை சக்கரத்தில் இயங்கும் எந்த வாகனத்திற்கும், சக்கரம் சுற்றும் அச்சுப் பகுதியில் பசை தடவுவார்கள்.
அப்படிப் பசை தடவவில்லை யென்றால் அச்சுப்பகுதியில் சக்கரம் சுற்றும்போது உரசி உரசி பெரும் இரைச்சல் எழும். அதுமட்டுமல்ல அச்சும் தேயும் சக்கரத்தின் மையப்பகுதியும் தேயும். நாளடைவில் இரண்டும் பாழாகும். இவற்றைத் தவிர்க்கத்தான் பசை தடவுகிறார்கள்.
வண்டிச் சக்கரத்திற்கு பசை தேவைப்படுவதுபோல, வாழ்க்கைச் சக்கரத்திற்கும் பசை வேண்டும்.
வாழ்க்கையில் ஒருவர் மற்றவர்களுடன் பழகும்போது பல காரணங்களால் உரசல் ஏற்படும். காரணம், கொள்கை ஒன்றாய் இருப்பதில்லை, இலக்கு ஒன்றாய் இருப்பதில்லை, விருப்பு ஒன்றாய் இருப்பதில்லை, வெறுப்பு ஒன்றாய் இருப்பதில்லை, சுவை ஒன்றாய் இருப்பதில்லை, சுகம் ஒன்றாய் இருப்பதில்லை.
அதேபோல், சமுதாயத்தில் மற்றவர்களுடன் பழகும்போது, தெரிந்தோ தெரியாமலோ நம்மால் அவர்களுக்கு செயலாலோ, வார்த்தையாலோ பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு.
ஆக, முரண்பாடுகளாலோ, சொல்லாலோ செயலாலோ மற்றவரோடு நமக்கு உரசல் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். அப்படிப்பட்ட நேரங்களில் அந்த உரசல் தவிர்க்கப்பட அல்லது குறைக்கப் படவில்லையென்றால் இருவருக்கும் கேடு நேரும். எனவே, அந்த நேரங்களில் உயவு (பசை) வார்த்தைகள் கட்டாயம் பயன்படுத்தப்பட வேண்டும்.
நாம் நடந்து சென்றுகொண்டிருக்கும்போது, நமது கவனக் குறைவால் எதிரில் வருபவர் மீது நாம் மோதிவிடுவதுண்டு. அப்படிப்பட்ட சூழலில், மோதிவிட்டு நாம் அவரைத் திரும்பிக்கூடப் பார்க்காமல் செல்கிறோம் என்றால், மோதப்பட்டவருக்கு எரிச்சல் வரும். சமயத்தில் அங்கு ஒரு மோதலேகூட வரும். அப்படிவரும் மோதலை, உரசலைத் தவிர்க்க உயவு (லிதீக்ஷீவீநீணீவீஷீஸீ) வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும்.
மன்னிக்கவும், ஷிஷீக்ஷீக்ஷீஹ், தெரியாம இடிச்சுட்டங்க என்பன போன்ற வார்த்தைகளை உடனே சொல்லிப் பாருங்கள், மோதப்பட்டவர் முகம் மலரும். அவர் சிரித்தபடி பரவாயில்லைங்க என்பார். ஆக, அங்கு நிகழவிருந்த ஒரு மோதலை, உரசலை, இந்த வார்த்தைகள் தவிர்த்து, ஓர் இணக்கமான நிலையை உருவாக்குகின்றன.
நம்மீது ஒருவர் கோபம் கொண்டு சண்டையிட வரும்போது, வருபவரைப் பார்த்து மெல்ல ஒரு சிரிப்பு சிரித்தபடி, வாங்க அண்ணே,வாங்க அக்கா அல்லது வாங்க அய்யா,வாங்க அம்மா என்று ஒரு வார்த்தை கூறி, உட்காருங்க என்று சொல்லிப் பாருங்கள் வந்தவர் வேகம் பாதி அடங்கிவிடும். அதன்பிறகு அவருடன் மென்மையாக, அன்போடு, இனிய சொற்களால் பேசுங்கள், கோபமும், வேகமும் முற்றாக வந்தவர், இறுதியில் நீங்கள் சொல்வதை ஏற்றுச் செல்வார்.
வழியில் செல்லும் ஒரு சிறுவனை டேய் இங்க வா! இந்த 10 ரூபாய்க்கு அந்தக் கடையில் ஒரு சோப்பு வாங்கி வா! என்று சொல்லிப் பாருங்கள், போய்யா! வேற வேலையில்லை! என்று போய்விடுவான். அதே சிறுவனை, தம்பி இங்க கொஞ்சம் வறீங்களா! எனக்கு கால் நடக்க முடியல, அந்தக் கடையில் ஒரு சோப்பு வாங்கி வந்து தறீயா! என்று கேட்டுப் பாருங்கள், மகிழ்ச்சியோடு ஓடி வாங்கிவருவான், உதவுவான்.
உதவி செய்தவர்களைப் பார்த்து, நன்றி! ஜிலீணீஸீளீ என்று சொல்லிப் பாருங்கள் செய்தவருக்கு எவ்வளவு மகிழ்வு ஏற்படுகிறது என்பதை நீங்களே காணலாம்.
வார்த்தை ஒருவனை கொலையாளியாகவும் மாற்றும், கொடையாளியாகவும் மாற்றும், ஒருவனைக் கோழையாகவும் மாற்றும், தீரனாகவும் மாற்றும், ஒருவனைச் சாதிக்கவும் தூண்டும், சலிக்கவும் தூண்டும்.
அதேபோல், நாம் பயன்படுத்தும் வார்த்தைகள் நம்மை உயர்த்தவும் செய்யும் தாழ்த்தவும் செய்யும், கேட்டையும் தரும், கோட்டையும் தரும்; ஆக்கவும் செய்யும் அழிக்கவும் செய்யும்; வெற்றியையும் தரும் தோல்வியையும் தரும்.
நிகழவிருக்கும் ஒருபெரும் சண்டையை வார்த்தைகளால் நிகழாமல் தடுக்கலாம், ஒன்றுமில்லாததை வார்த்தைகளால் பெரும் சண்டையாகவும் ஆக்கலாம்.
முறியும் நிலையில் உள்ள பேச்சு வார்த்தை சிலர் சென்றால் முடியும்; முடியும் நிலையில் இருந்த பேச்சு வார்த்தை சிலர் சென்றால் முறியும்.
என்ன காரணம்? அங்கு பயன்படுத்தப்படும் வார்த்தைகள்தான். எனவே, வார்த்தைகள் என்பவை வெறும் ஒலிகள் அல்ல, அவை உணர்வுகள். இதை நன்கு உள்ளத்தில் ஏற்றிக் கொண்டால் வாழ்வில் நிம்மதியாகவும் நிறைவாகவும் வாழலாம்.
எனவே, பிஞ்சுக் குழந்தைகள் இந்த உண்மைகளை உள்வாங்கிக் கொண்டு, உயவு வார்த்தைகளைப் பயன்படுத்தி, உரசலற்ற, நட்பான, தோழமையான, பற்றான, பாசமான, விருப்பமான வாழ்வை, மகிழ்வாக வாழவேண்டும்.
– சிகரம்