”மருந்தும் விருந்தும் திருக்குறளே”
குறளைப் படிப்பீர் சிறுவர்களே – திருக்
குறளைப் பயில்வீர் சிறுமியரே!
அறத்தைப் பொருளைக் கற்றிடுவீர் — நாளை
அவனியில் புகழைப் பெற்றிடுவீர்!
வள்ளுவர் இயற்றிய வான்முறை — திரு
வள்ளுவர் வழங்கிய தேன்மழை!
வள்ளுவர் சொல்லாக் கருத்தில்லை! – திரு
வள்ளுவர் நூலுக்கு நிகரில்லை!
உயர்வை வழங்கும் உயிர்நூலாம் — உள்
உணர்வை உரைக்கும் உயர்நூலாம்
அயர்வை நீக்கும் மருந்தாகும் – நல்
அறிவுக்கு இனிய விருந்தாகும்!
உலகம் போற்றும் பொது மறையாம் – நூலில்
ஒப்பிலா நூலோ தமிழ் மறையாம்
நல் நாமே கூறும் அருங்குறள்தான் — உலகோர்
நாடிப் போற்றும் நிறை குறளே!
– ஆ.ச.மாரியப்பன்,
புதுக்கோட்டை.