பழகு முகாமில் பழகிய முகங்கள்…
அம்மா..அப்பா..வை விட்டுட்டு போறமேனு ஒரே கவலையாத்தான் இருந்தது எனக்குஞ் எங்க அப்பா சொன்னார், ஐந்து நாட்கள் தானேஞ்போற போக்கே தெரியாது.. உனக்கு போர் அடிக்காத மாதிரி அங்கே நிறைய நிகழ்ச்சிகள்..விளையாட்டுகள் எல்லாம் இருக்கும்என்றார்.. சென்னையில் இருந்து பஸ் ஏறும் போது பிரின்ஸ் அண்ணா, புருனோ அண்ணா,உடுமலை மாமா எல்லாம் உடன் வந்தார்கள்..பிரிய மனமில்லாமல் பிரிந்தேன் என் பெற்றோரை விட்டு…
தஞ்சாவூர்-திருச்சி ரோட்டில் வல்லத்தில் உள்ள பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் நூற்றுக்கும் அதிகமான என் வயசு நண்பர்களை பார்த்ததும் எனக்கு சந்தோஷம் தாங்கவில்லை.ஸ்கூல் பிரண்ட்ஸ் மாதிரி ஜாலியா பழகலாம் என்று மனம் குதூகளித்தது.
காலைல ஐந்து மணிக்கு எழுந்ததும் அரை மணிநேரத்திற்குள் காலைக்கடன்களை முடித்து, காபி-பிஸ்கட் சாப்பிட்டுவிட்டு ஜாகிங். அந்த நேரத்தில் என் தோழிகள்,தோழர்களோடு செல்லும் போது காலையில் சீக்கிரமாக எழுந்த அலுப்பு கூடத்தெரியாமல் சந்தோஷமாக பேசிக்கொண்டே போவோம்.
அப்புறம் இண்டோர் ஸ்டேடியத்தில் வாலிபால்,புட் பால்,பேட் மிட்டன், சிலம்பம், கராத்தே, யோகான்னு நமக்கு பிடித்த விளையாட்டை ஒவ்வொருநாளும் தேர்வு செய்து கொண்டு விளையாடலாம். எனக்கு ரொம்ப பிடித்தது சிலம்பம் தான்.மாஸ்டர்கள் அருமையாக சொல்லிக்கொடுத்தார்கள். அது முடிஞ்சதும் குளிச்சிட்டு, டிபன் சாப்பிட்டுட்டு, சிறிது நேரம் கழித்து டிராயிங், பெயிண்டிங், கம்ப்யூட்டர் என எனது ஆர்வத்தை தூண்டும் வகையில் எங்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டது. எனக்கு மிகவும் பிடித்தது டிராயிங் தான். நிறைய படங்கள் வரைந்து டிராயிங் மாஸ்டரிடம் காண்பித்து பாராட்டைப்பெற்றேன்.
மதிய உணவில் காய்கறிகள், கீரைகள், முட்டை, சிக்கன் என சத்தான உணவு வகைகளை வைத்து இருந்தார்கள்.விரும்பி சாப்பிட்டோம்.
சிறிது நேர ஓய்வுக்குப்பிறகு எல்லோரும் பூங்கா சென்றோம். அங்கே பொழுது போக்கு அம்சங்கள் நிறைய இருந்தது. அனைத்தையும் அனுபவித்துவிட்டு திரும்ப பல்கலைகழகத்திற்குள் நுழைந்தோம்.அங்கே இன்ப அதிர்ச்சி..
எங்களை ஊக்குவிக்க கவிஞர் கலி.பூங்குன்றன் தாத்தா, அன்பு மாமா எல்லோரும் வந்து எங்களுக்கு இந்த பழகு முகாமை எப்படி பயன் படுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறினார்கள்.
பின்னர் டிராமா,மிமிக்ரி,டான்ஸ் பாட்டு என இரவு ஒன்பது மணி வரை ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான்..காலையில் எழுந்ததிலிருந்து அனுபவித்த இன்பக்களைப்புகளால் அலுப்பு ஏற்பட்டு நன்றாக தூங்கி விட்டோம்..
மறுநாளும் இதே போல் ஒவ்வொரு நிகழ்ச்சியாக நடைபெற்றது, நாங்களும் பங்கேற்றோம்.எங்களுக்கு பயனுள்ள விருப்பமான விளையாட்டுகளை தேர்ந்தெடுத்து விளையாட வைத்ததில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி.
என் நண்பர்கள்,தோழிகளோடு நான் அனுபவித்த இந்த ஐந்து நாட்கள் பயணமும் என் வாழ்க்கைக்குப் பயனுள்ளதாகவும், நான் சந்தோஷப்படும் வகையிலும் அமைந்து இருந்தது.ஐந்தாம் நாள் முடிவுறும் போது எங்களுக்குள் ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வு நாளை எல்லோரும் அவரவர் வீட்டில் இருப்போம்.ஒருவருக்கொருவர் பார்த்துக்கொள்ள முடியாது என்று நினைப்பு ஒவ்வொருவர் மனதிலும் எழும்பியது.
அதனால் எல்லோருடைய போன் நம்பர்களையும் வாங்கி வைத்துக்கொண்டேன். தொடர்ந்து பேசுவோம் என்று உறுதி மொழியோடு விடைபெற்றோம். பழகுமுகாமுக்குப் புறப்படும்போது, அம்மா-அப்பாவைப் பிரியப் போகிறோமேன்னு நினைத்தது அதற்கப்புறம் நினைவிலேயே இல்லை. நான் சென்னைக்கு திரும்பும் போது தான் மறுபடியும் அம்மா-அப்பா ஞாபகம் வந்தது.
அந்த அளவிற்கு எங்களுக்கு வீட்டு ஞாபகமே வராதபடி, புதிய நண்பர்களோடு, புதிய இடத்தில், புதுப்புது விஷயங்களைக் கற்றுக்கொள்ளும்படி எண்டர்டையின் பண்ணிக்கொண்டே இருந்தார்கள் எங்களுக்கு ஆசிரியராகவும்,பயிற்சியாளராகவும் வந்தவர்கள் ஒவ்வொருவருக்கும் என்னுடைய நன்றிகள்.
அருமையான பயணம். அருமையான பழகு முகாம்ஞ்அருமையான நண்பர்கள். இனி நாங்கள் பெரியார் பிஞ்சுகள்னு எங்கே போனாலும் பெருமையா சொல்லிக்குவோம். அந்த வாய்ப்பைக் கொடுத்த பெரியார் பிஞ்சு பழகு முகாமுக்கு என் நன்றி. ரஜினி நடிச்ச சிவாஜி படத்தில் ஒரு வசனம் வரும். பிடிச்சு இருந்தா பழகுவோம் இல்லைனா பிரிஞ்சுடுவோம் ஆனா பழகு முகாம் பஞ்ச் டயலாக் என்ன தெரியுமா? பிடிச்சிருக்கு.. பிரியறதுக்கு சான்ஸே இல்லை.. பழகுவோம்.. பழகுவோம்.. பழகிக்கிட்டே இருப்போம்.
பரவசமான பரபரப்பு
பழகு முகாமின் மூன்றாவது நாளில் உற்சாகத்தின் உருவங்களாய் இருக்கும் குழந்தைகளை மேலும் உற்சாகப்படுத்தும் பணியில் இயற்கையும் ஈடுபட்டது. தஞ்சை சிவகங்கைப் பூங்காவில் குட்டி ரயிலில் ஏறுவதற்காக காத்திருக்கும்போது, திடீரென்று பிஞ்சுகள் அனைவரையும் ஒரு பரவசமான பரபரப்பு தொற்றிக் கொண்டது. அதற்குக் காரணம் கண்களைப் பறிக்கும் வண்ணங்களுடன் நீண்ட தோகையுடன் ஓர் ஆண்மயில் எங்கிருந்தோ பறந்து வந்து குட்டீஸ்களின் பார்வைபட அமர்ந்ததுதான். அடுத்த கணமே… ஏய்.. மயில், அதோ அங்கே! ஏய்! பறக்குது! பறக்குது! என்று மற்றவர்களை பரவசப்படுத்துகிற பிஞ்சுகளே பரவசப்பட்டுப் போயினர். அந்த மயிலும் அவர்களின் ஆவலை நிறைவேற்றுவதற்காக சற்று நேரம் இருந்துவிட்டுத்தான் பறந்து சென்றது.
கடித்தால் மட்டும் போதுமா?
மூன்று தவளைகள் – ஒரு தவளை குதிக்க முடிவு பண்ணிச்சு! மீதி எத்தனை இருக்கும்? விடை மூன்றுதான் இருக்கும். ஏன்? ஒரு தவளை குதிக்க முடிவுதானே பண்ணிச்சு! குதிக்கலையே… இது எப்படி! ஒரு எலி வீட்டுக்குள் சென்று ஒரே ஒரு பழத்தை மட்டும் மிச்சம் வைத்துவிட்டு மற்ற எல்லா பழத்தையும் சாப்பிட்டுவிட்டது. அது என்ன பழம்? விடை எலிமிச்சம்பழம். அதாவது எலி மிச்சம் வைத்த பழம். அப்பப்பா… பிஞ்சுகள் பல பேருக்கு இந்தக் கடி தாங்க முடியாமல் போக, அவர்கள் திருப்பிக் கடிக்க தொடங்கிவிட்டனர். ஒரு ரிஷி மேலே அமர்ந்து சாப்பிட்டாரு. இதை ஒரே ஆங்கில வார்த்தையில் சொல்ல வேண்டும்? விடை UPRISIATE. இது எப்படி?! ஒரு ஆங்கில வார்த்தையில் ஒரு நி-யும் நாலு ஜி-யும் இருக்கும். அது என்ன? விடை Originality அப்பப்பா… காதில் இரத்தமே வந்துவிடும் போல இருக்கும். தங்களின் கடிகளுக்கு மற்றவர்கள் படுகிற தவிப்பும், அதற்கு தாங்களே விடை சொல்லிய பிறகு அவர்கள் முகத்தில் தெரிகிற ஆனந்தமும் பழகு முகாமின் சின்னச்சின்ன குதூகல நிமிடங்கள்.
ஓசையில் ஆசை
புதுவைப் பல்கலைக்கழக பேராசிரியர் வேலு சரவணன் அவர்கள் தனது நாடகத்தில், பிஞ்சுகளின் கவனத்தைத் தன்மீது திருப்புவதற்காக ஓ… வென்று ஓசையெழுப்பி, ஒட்டுமொத்த பிஞ்சுகளிடமிருந்தும் அந்த ஓ – என்கிற ஓசையை பிரதிபலிக்க வைப்பார். பழகு முகாமின் ஒருங்கிணைப்பாளர்களில் பிரின்சும், அழகிரியும் அந்த ஓசையை தந்திரமாக பயன்படுத்தத் தொடங்கினர். பிறகு, அந்தத் தந்திரமும் இவர்கள் நினைத்த போதெல்லாம் பயன்படுத்தி வந்தது போய், பிஞ்சுகளே பிரின்சு அண்ணா ஓ போடுங்க என்று விரும்பிக் கேட்டு தங்களின் உற்சாகத்தை புதுப்பித்துக் கொள்வர். இது பழகு முகாம் முடியும் வரையிலும், விடைபெற்றுச் செல்லும் வரையிலும் நீடித்தது.
பழகப் பழக பழகிப்போச்சு
பழகு முகாமின் மாலை நேர நிகழ்ச்சிகளுக்கிடையே பிஞ்சுகள் தங்கள் தனித்திறன்களை மேடையேற்றும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இதுவரை மேடை ஏறாத பிஞ்சுகள் தங்களால் இதுபோல பேச முடியவில்லையே, பாட முடியவில்லையே, ஆட முடியவில்லையே என்று தவித்துக் கொண்டிருந்தனர். ஆனால், இரண்டாவது மூன்றாவது நாட்களில் பழகிப் பழகிப் புதுப்புது நண்பர்கள் ஏராளமாய்க் கிடைத்தவுடன் தன்னம்பிக்கை உச்சாணிக் கொம்பில் ஏறிவிட மூன்றாவது நாளில் மேடை ஏறத் தயங்கியவர்கள் எல்லாம் தன்னெழுச்சியாக மேடையேறி தங்கள் தங்கள் ஆவலைத் தீர்த்துக் கொண்டனர். அந்த முதல் தயக்கத்தை போக்கியது பழகுமுகாம் இனி வருங்காலம் அவர்கள் கையில்.
– பி.லெ.தமிழ்நிலா