அடேயப்பா…! – 10: ஓலஸ் நகரம்
“அடேயப்பா” என்ற தலைப்பில் நாம் இதுவரை வரலாற்றில் அதிகம் பேசப்படாத மர்மங்கள் நிறைந்த பல இடங்களைப் பற்றி படித்து வந்தோம். அதன் தொடர்ச்சியாக, தண்ணீருக்கு அடியில் பல இடிபாடுகளை அதாவது வரலாற்றுச் சின்னங்களைத் தன்னகத்தே கொண்டுள்ள ஓலஸ் நகரம் பற்றிக் காண்போம்.
ஓலஸ் என்பது ஏஜியன் கடலில் உள்ள கிரீட் தீவில் அமைந்துள்ள ஒரு பண்டைய நகரமாகும். இது தீவின் கிழக்குப் பகுதியில் நவீன நகரமான எலோண்டாவுக்கு அருகில் அமைந்துள்ளது. மினோவான் நாகரிகக் காலத்து முக்கியமான நகரமான ஓலஸ் அதன் இருப்பிடம் மற்றும் துறைமுகத்திற்காக புகழ்பெற்றதுடன் வர்த்தகத்திற்கான குறிப்பிடத்தக்க மய்யமாகவும் விளங்கியது.
மினோவான் காலத்தில், தோராயமாக பொ.ஆ.மு. 2600 மற்றும் 1100க்கு இடையில், ஓலஸ் பண்டைய மத்திய தரைக் கடலின் கடல் வர்த்தக வலையமைப்பில் ஒரு முக்கியப் பங்கைக் கொண்டிருந்தது. க்னாஸஸ், ஃபிஸ்டோஸ் போன்ற முக்கிய மினோவான் மையங்களுடன் வலுவான தொடர்புகளைக் கொண்டிருந்து.
பொ.ஆ.பி 2ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உள்ளூர் மாற்றம் காரணமாய் நகரம் நீரில் மூழ்கியதாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். தொல்பொருள் அகழ்வாராய்ச்சி மூலம் நகரச் சுவர்கள், வீடுகள் மற்றும் தெருக்களின் பகுதிகள் உட்பட ஓலஸின் பல தடயங்களைக் கண்டுபிடித்துள்ளனர். அங்கு கண்டெடுக்கப்பட்ட நாணயங்கள் ஜீயஸ், ஒரு கழுகு, ஒரு டால்பின் அல்லது ஒரு நட்சத்திரத்தைக் கொண்டுள்ளன. அஜியோஸ் நிகோலாஸ் தொல்பொருள் அருங்காட்சியகம் மற்றும் லூவ்ரே ஆகிய இடங்களில் ஓலஸ் நகரின் பல கலைப்பொருள்கள் காணப்படுகின்றன.
அது மட்டுமல்லாமல் அகழாய்வின் மூலம் ஓலஸ் நகரில்,
ஓலஸின் இடிபாடுகள் (தண்ணீருக்குக் கீழ்),
ஓலஸ் பசிலிக்காவின் பழங்கால மொசைக்,
ஒரு பாழடைந்த காற்றாலை,
வெனிஸ் உப்புப் பாத்திரங்களின் எச்சங்கள்,
சர்ச் ஆஃப் அனலிப்சிஸ்,
எலோண்டா விரிகுடா முழுவதுமான காட்சிகள்,
கோலோகிதா தீபகற்பத்துடன் இணைக்கும் பகுதி,
சிறிய மீன்பிடி படகுகளுக்கான குறுகிய கால்வாய் ஆகியனவெல்லாம் கண்டறியப் பட்டுள்ளன.
ஓலஸ் நகரில் கண்டெடுக்கப்பட்ட மினோவான் முத்திரைகள், நாணயங்கள் மற்றும் மோதிரங்களில் விரிடோமார்டிஸ் அல்லது பிரிட்டோமார்டிஸ் எனப்படும் உருவம் காணப்படுகிறது. இது அவர்களின் தலைமை தெய்வமாக இருந்திருக்கலாம் எனப் பல கல்வெட்டுகள் வழி அறியப்பட்டுள்ளன. அதே காரணத்திற்காக Asklepios வழிகாட்டி முறையும் அம்மக்களுக்கு முக்கியமானதாக இருந்திருக்க வேண்டும் என்கின்றனர். தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இடிபாடுகளுக்குள் பழங்கால நூல்களை மீட்டெடுத்துள்ளனர். இவை ஓலஸை பண்டைய நகரங்களான நாசோஸ் மற்றும் ரோட்ஸ் தீவுகளுடன் தொடர்புபடுத்துகின்றன.
தீர்க்கமாக இல்லாவிட்டாலும், நீரில் மூழ்கிய எச்சங்களின் பகுதிகளான பண்டைக் காலக் கல்லறைகள், கி.பி. 2-3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பளிங்குச் சிலைகளின் துண்டுகள் மற்றும் சிதறிய மண்பாண்டக் கண்டுபிடிப்புகள் போன்றவை ரோமானிய காலகட்டமாக இருக்கலாம் எனச் சான்றளிக்கின்றன.
எலோண்டா துறைமுகத்தில் இருந்து கோடையில் தினமும் ஒரு படகு புறப்பட்டு, அருகிலுள்ள ஸ்பினலோங்கோ தீவு. கொலோகிதாவின் அழகிய கடற்கரைகள் மற்றும் ஓலஸ் நகரின் இந்த இடிபாடுகள் போன்றவற்றைச் சுற்றுலாப் பயணிகளுக்குச் சுற்றிக் காட்டுகின்றன.
(நிறைவு)