டடங்
பாகா…” “பாகா…”
பாகா எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் யானைக்குட்டி. எல்லோரையும் காலையிலேயே எழுப்பிவிடும். “குளிக்கப் போகலாம் வாங்க” என கத்தி கூப்பாடு போடும். அன்று பாகாவின் சத்தம் அந்தக் கூட்டத்தில் கேட்கவில்லை. நண்பர்கள், உறவினர்கள் என எல்லோரும் தேடினார்கள்.
“பாகா… பாகா…”பாகாவைக் காணவில்லை.
பாகா குட்டியாக இருக்கும். குட்டி யானை குட்டியாகத்தானே இருக்கும். அதனால் மரங்களில் எளிதாக ஏற முடியும். ஒருவேளை ஏதாவது மரங்களில் சிக்கிக்கொண்டதா எனப் பார்த்தார்கள். எங்கும் காணவில்லை.
“பாகா, வந்துவிடு, விளையாடாதே! ஆற்றுக்குப் போக நேரமாச்சு” எனச் சத்தம் கொடுத்தனர்.
மெல்லிய குரலில், “நீங்க போங்க, நான் வரவில்லை” என பாகாவின் சத்தம் கேட்டது. மரம் ஒன்றில் முதுகினைக் காட்டியபடி அமர்ந்து இருந்தது. எல்லோரும் சென்ற பின்னரே பாகாவின் அழுகுரல் வெளியே கேட்டது. மரத்தில் வசித்த ஓர் அணிலும் சிலந்தியும் வெளியே வந்து பார்த்தன. பாகா யானையின் அழுகுரல் கேட்ட அவர்களுக்கு வருத்தமாக இருந்தது.
“யானையாரே என்னாச்சு? ஏன் அழறீங்க?”
அதுவரை அழுகுரல் குறைவாக இருந்தது. யாராச்சும் என்னாச்சுன்னு கேட்ட உடனே நாம என்ன செய்வோம்? ‘ஓ’வென இன்னும் சத்தமாக அழுவோம் அல்லவா? அதே போலத்தான் பாகாவும் அழுதது. பாகா மெல்லத் திரும்பியது.
அதுவரையில் ஆர்வத்தோடு பார்த்த சிலந்தியும் அணிலும் அதிர்ச்சியில் உறைந்தன. ஆனால், அணில் உடனே புரண்டு புரண்டு சிரித்தது. சிலந்தியோ, “அணிலாரே, உம்ம சிரிப்பை நிறுத்தவும்” என்றது. அங்கே பாகா குட்டியானையின் தும்பிக்கை உள்ளே இழுக்கப்பட்டு மிகவும் சின்னதாக இருந்தது. முகத்திலிருந்து தரை வரைக்கும் இருக்கும் தும்பிக்கை சுருங்கிப் போய் முகத்தில் செருக்கிக்கொண்டு இருந்தது. இதைப் பார்த்துதான் அணில் சிரித்தது. சிலந்தி அதட்டியதும் அணில் சிரிப்பை நிறுத்தியது.
இது எப்படி ஆச்சு எனப் பாகாவே விளக்கியது. “நேற்று மாலை துள்ளிக் குதித்து உற்சாகமாக விளையாடியபோது ‘டமால்’ என்று பாறையில் முட்டிக்கொண்டேன். அப்படியே இரவு தூங்கிவிட்டேன். காலையில் பார்த்தால் என் தும்பிக்கையைக் காணவில்லை. உள்ள போயிடுச்சா எனத் தெரியவில்லை” என்று சொல்லித் தேம்பித் தேம்பி அழுதது.
‘நாங்கள் பக்கத்தில் வரலாமா?’ என்று கேட்டுக்கொண்டே அணிலும் சிலந்தியும் அருகே வந்தன. “யாராச்சும் முனையைப் பிடித்து இழுத்தால் வந்துவிடும்” என்றது சிலந்தி. ஆனால் யார் பிடித்து இழுப்பது? ஒவ்வொரு விலங்கிடமும் சிலந்தியும் அணிலும் சென்று உதவிக்கு அழைத்தன. ஒவ்வொன்றும் ஒரு காரணம் கூறின.
“வேலை இருக்கு”
“யானைன்னா எனக்குப் பயம்”
“இன்னிக்கு வெள்ளிக்கிழமை”
“எனக்குக் கால் வலிக்குது”
எல்லாமே உப்புச் சப்பில்லாத காரணங்கள்.
சோகமாக இரண்டும் திரும்பின. அணில் சொன்னது “எங்களுக்கு உதவத்தான் ஆசை பாகா, ஆனால் எப்படின்னு தான் தெரியவில்லை”. கொஞ்சம் யோசித்த சிலந்தி, “என்னிடம் ஒரு திட்டம் இருக்கு” என்றது. நான் பாகாவின் சிறியதாகிவிட்ட தும்பிக்கையைச் சுற்றி சிறப்பு வலை பின்னி அதன் முனையை மரத்தின் கிளையில் இணைத்துவிடுகின்றேன். பின்னர் யானைக்குட்டி தன் பலம் கொண்டு பின்னால் நகர்ந்தால் தும்பிக்கை பழையபடி திரும்பிவிடும்” என்றது. உடனே களத்தில் குதித்தார்கள்.
ஆனால், அந்தச் சிறப்பு வலையைப் பின்னுவதற்கு நிறையத் தேன் குடிக்க வேண்டும். தேனுக்கு எங்கே செல்வது? என்றது சிலந்தி.
“நான் இருக்கேன்” என அணில் ஓடிச்சென்று தேனை எடுத்து வந்தது.
எல்லாம் தயார்! யானையின் சிறிய தும்பிக்கையைச் சுற்றி சிலந்தி வலை பின்னியது – அது மிகவும் மெதுவாக… மிக மிக மெதுவாகப் பின்னிக் கொண்டிருந்தது. அணிலால் சும்மா இருக்க முடியவில்லை. சிலந்திக்கு உற்சாகமூட்டியது.
“தாரைதட்டை தையர தையர தா
தாரைதட்டை தையர தையர தா – போடு
தாரைதட்டை தையர தையர தா
தாரைதட்டை தையர தையர தா”
பாடலைக் கேட்டதும் சிலந்தி வேக வேகமாக வலையை நினைத்தபடி பின்னியது. அதன் முனைகளை மரத்தில் வலுவாக இணைத்தது.
“யானைக்குட்டியாரே! இப்போது வேகமாகப் பின்னோக்கிச் செல்லுங்க” என்றது சிலந்தி.
யானைக்குட்டி மெல்ல எழுந்தது. பின்னோக்கி நகர முனைந்தது. அதன் மூக்கில் சிலந்தியின் வலை. இப்போது சிலந்தியும் அணிலும் சேர்ந்து பாட்டுப் பாடின.
“தாரைதட்டை தையர தையர தா
தாரைதட்டை தையர தையர தா – போடு
தாரைதட்டை தையர தையர தா
தாரைதட்டை தையர தையர தா”
அப்போதும் யானைக்குட்டியால் நகரவே முடியவில்லை. அந்த நேரத்தில் குளிக்கச்சென்ற யானைக் கூட்டம் திரும்பி வந்துவிட்டன. அந்தக் காட்சியைப் பார்த்ததுமே எல்லோருக்கும் புரிந்துவிட்டது. அப்போது அது நிகழ்ந்தது. யானைகள், சிலந்தி, மான்கள், குரங்குகள், எறும்புகள் என எல்லோரும் சேர்ந்து பாடினார்கள்.
“தாரைதட்டை தையர தையர தா
தாரைதட்டை தையர தையர தா – போடு
தாரைதட்டை தையர தையர தா
தாரைதட்டை தையர தையர தா”
டடங்.. பாகாவின் தும்பிக்கை இயல்பு நிலைக்குத் திரும்பியது. காடே இப்போது பாடியது.
“தாரைதட்டை தையர தையர தா
தாரைதட்டை தையர தையர தா – போடு
தாரைதட்டை தையர தையர தா
தாரைதட்டை தையர தையர தா”