அறிவின் விரிவு – 6: கூகுளின் க்வாண்டம் சிப் புரட்சி செய்யுமா?
ஒரு கடினமான கணக்கு. அதை நம் கம்ப்யூட்டரிடம் கொடுத்தால் அது விடை சொல்ல பல கோடி ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும். அந்தக் கணக்கைk கூகுளின் க்வாண்டம் கம்ப்யூட்டர் வெறும் 5 நிமிடத்தில் தீர்த்து விடை சொல்லும்! காரணம், அவர்கள் புதிதாக உருவாக்கி இருக்கும் வில்லோ (Willow) என்ற க்வாண்டம் சிப் (Chip) .
சாதாரணக் கணினி “பிட்” என்ற ‘ஒன்று’ அல்லது ‘சுழியம்’ (1 அல்லது 0) என்ற முறைப்படி தகவல்களைச் சேமிக்கிறது. ஆனால், கவாண்டம் கணினியில், “கியூபிட்” எனப்படும் ஒரு புதிய அளவு பயன்படுகிறது. கியூபிட் ஒரு நேரத்தில் 1 மற்றும் 0 என இரண்டும் இருக்க முடியும். இது அணுவின் சிறப்புக் கவாண்டம் பண்புகளில் உள்ள முக்கிய விதிகளால் சாத்தியமாகிறது.
இந்த க்வாண்டம் சிப்பில் சுமார் 105 கியூபிட்கள் (Qubit) உள்ளன. நம் கணினிகளில் பயன்படுத்தும் 1 பிட் என்பது ஒரு சுழியம் (0) அல்லது ஓர் ஒன்று (1) என்ற மதிப்பைச் சேமிக்க வேலை செய்யும். ஆனால் சில க்யுபிட் என்பது ஒரே ஒரு அணு அல்லது போட்டானின் சிறப்பு க்வாண்டம் பண்புகளைப் பயன்படுத்தி, ஒரே அணுவில் உதவியுடன் அதிகமாகச் சேமிக்கவும், வேகமாகக் கணிதவிடை காணவும் முடியும்.
எவ்வளவு க்யூபிட்கள் அதிகமாக்கப்படுகிறதோ அவ்வளவு சேமிப்பும், வேகமும் அதிகமாகும்.
இங்குதான் ஒரு சிக்கல். இந்த க்யூபிட்கள் சிறிதளவு காற்றசைவு இருந்தாலும், கொஞ்சம் அறையின் வெப்பம் கூடினாலும் ‘subatomic’ அளவில் பாதிப்பு ஏற்பட்டுத் தவறான விடைகளைக் கொடுக்கும் – Error prone.
இதைச் சரிசெய்வதற்கான ஒரே வழி அதிக க்யூபிட்களைக் கொண்ட க்வாண்டம் சிப்பை உருவாக்குவது தான். இந்த விரைவான செயல்பாட்டில் கூகுள் வென்றிருப்பதாக அறிவித்திருக்கிறது. ஆனால், தற்போதைக்கு வில்லோ சிப்பை விட அதிக க்யூபிட்களைக் கொண்ட இன்னும் வேகமாக இயங்கும் க்வாண்டம் சிப்களைப் போட்டி நிறுவனங்கள் உருவாக்கி சோதனைகள் செய்து வருகின்றன.
கூகுளின் சிப் கதைக்கு அவர்கள் என்ன சொல்லப் போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
க்வாண்டம் கணினிகளுக்குப் பின் ஏன் இந்தப் போட்டி?
க்வாண்டம் கணினிகள் மிகவும் கடினமான கணக்குகளை வேகமாகச் செய்யும் திறன் கொண்டவை. எடுத்துக்காட்டாக, மருந்துகள் உருவாக்கம், வானிலைக் கணிப்பு, மற்றும் மிகப் பெரிய தரவுகளை (Big Data) ஆய்வு செய்வதில் க்வாண்டம் கணினிகள் உதவுகின்றன. அதனால்தான் பெரிய பெரிய நிறுவனங்கள் க்வாண்டம் முன்னிலை (quantum supremacy) அடைய போட்டிபோட்டு வருகின்றன. ஒருவரை விட மற்றொருவர் வேகமாக, சரியாக வேலை செய்யும் க்வாண்டம் கணினிகளை உருவாக்க விரும்புகிறார்கள். இந்த முயற்சி உலகைப் புதிய தரத்தை நோக்கி முன்னேற்றும்! எளிமையாகச் சொல்லவேண்டுமானால், ஒரு க்வாண்டம் கணினியை ஒரு நிறுவனம் வைத்திருந்தால் அதன் கையில் ஒரே நேரத்தில் பல கோடி கம்யூட்டர்கள் – இல்லை, பல கோடி சூப்பர் கம்யூட்டர்கள் இருப்பதற்குச் சமம்.
(தொடரும்)