பிஞ்சு நூல் அறிமுகம்
விண்வெளியே எப்போதும் ஈர்ப்பு தரக் கூடியது. அதில் இன்னும் ஈர்ப்பானவை வால் நட்சத்திரங்கள்!
இரவு நேரத்து வானம் ‘ஸ்லோ மோஷனில்’ மெதுவாக நகர்ந்துகொண்டிருக்கும்போது ‘ஏன் வருகிறது? எப்படி வருகிறது?’ என்று தெரியாமல், வால் முளைத்த நட்சத்திரங்கள் போல வானத்தில் போகும் வால்மீன்களைப் பார்த்து அறிவியல் அறியாத மனிதன் ஆச்சரியப்பட்டதில் வியப்பிருக்க முடியாது அல்லவா?
எப்போதும் போல மூடநம்பிக்கைகள், வால்மீன்களுக்குப் பின்னாலும் வேண்டாத வாலாக ஒட்டி வந்தன. வால்மீன்களால் கேடு விளையும் என்று சிலர் நம்பினார்கள். இவற்றையெல்லாம் பற்றிய பல அரிய செய்திகளை வழஙகுகிறது இந்த நூல்.
சிறு கோள்கள், எரி விண்மீன்கள், முக்கியமான வால்மீன்கள், அவை தொடர்பான ஆய்வுகள் உள்ளிட்ட பல தலைப்புகளில் முக்கிய செய்திகளை, பல வண்ணப் படங்களுடன்எளிமையாகத் தருகிறது இந்தப் புத்தகம். அவசியம் வாங்கிப் படிக்க வேண்டியதும் கூட.
நூல் பெயர்:
பால்வெளியில் ஒளிரும் வால் நட்சத்திரங்கள்!
ஆசிரியர்: சி.ராமலிஙகம், பா.ஸ்ரீகுமார்
பக்கங்கள்: 64 | விலை: ரூ.70
வெளியீடு: அறிவியல் பலகை, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட மையம், காந்தி மண்டபம் சாலை, சென்னை — 600025
இங்கிலாந்தில் பிறந்து இரண்டாம் உலகப் போரில் விமானத்தில் பறந்து குண்டுகள் வீசும் பணியிலிருந்தவர் பிறகு பள்ளி ஆசிரியராகி, குழந்தைகளுக்கான எழுத்தாளராகப் பரிணமித்தவர் டிக் கிங் ஸ்மித். 1978-இல் அவர் எழுதிய “The Fox Busters” நூலைப் படித்து, நெடுங்காலத்துக்குப் பிறகு அதை நினைவு கூர்ந்து, தமிழில் எழுதியிருக்கிறார் ஆயிஷா.இரா. நடராசன்.
ஏன் இப்போது திடீரென்று? அவரே சொல்கிறார். பாலஸ்தீனத்தின் பள்ளிக் கூடங்கள், மருத்துவமனைகள் மீது குண்டு வீசி ஆயிரக்கணக்கான அப்பாவிக் குழந்தைகளை இஸ்ரேல் எனும் ஆக்கிரமிப்பு இராணுவம் படுகொலை செய்கிறதே… அந்த வலிதான் இப்போது அதை எழுத வைத்திருக்கிறது.
போர், குண்டு என்றெல்லாம் வந்ததும் ஏதோ உலகப் போர் ஹாலிவுட் கதையோ என்று யோசிக்க வேண்டாம். கோழிகளும், ஆதிக்க நரிகளும் தான் கதை பாத்திரங்கள். ஓர் அட்டகாசமான உணர்வுப்பூர்வமான கதை படிக்க விரும்புகிறீர்களா? படியுங்கள். கண் முன்னால் நாம் பார்க்கும் கோழிகளும், நரிகளும், கோழிகளின் விடுதலையும் இக் கதையில் உலவுவார்கள்.
நூல் பெயர்: பண்ணை யுத்தம்
ஆசிரியர்: ஆயிஷா இரா.நடராசன்
மூலக்கதை: டிக் கிங் ஸ்மித்
பக்கங்கள்: 72 | விலை: ரூ.70
வெளியீடு: புக்ஸ் ஃபார் சில்ரன் –
பாரதி புத்தகாலயம், 7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை — 600018