சிறுவர் கதை: பட்டுக் குட்டி சுட்டிக் குட்டி
பட்டுக் குட்டி சுதாவும் சுட்டிக் குட்டி சுரேசும் நெருங்கிய நண்பர்கள். எதிர் எதிர் வீடு. இருவரும் வேறு வேறு பள்ளியில் படித்தாலும் வீட்டிற்கு வந்ததும் ஒன்றாக விளையாட ஆரம்பித்து விடுவார்கள். அவர்களுடன் அக்கம் பக்கத்து வீடுகளில் இருக்கும் குழந்தைகளும் ஒன்று சேர்ந்து விளையாடுவார்கள். வீடுகளில் அவர்களுக்காகச் செய்யும் பலகாரங்களை ஒருவருக்கொருவர் கொடுத்துச் சாப்பிடச் சொல்லி மகிழ்வார்கள்.
அன்றும் அப்படித்தான் விளையாட்டை ஆரம்பிக்கும் பொழுது சுட்டிக் குட்டி சுரேஷ் பட்டுக்குட்டி சுதாவை ஓடிப் பிடிக்கிறேன் என்று சொல்லிக் கீழே தள்ளி, விழும்படி செய்து விட்டான். அவன் வேண்டுமென்றே தள்ளவில்லையென்றாலும் கீழே விழுந்த சுதாவின் முழங்கையில் சிராய்ப்பு ஏற்பட்டு ரத்தம் வந்தது. சுதாவும் அழுது கொண்டே தன் பெற்றோரிடம் சென்று, தன்னை சுரேஷ் கீழே தள்ளி விட்டான்; அதனால் ரத்தம் வருகிறது என்று தன் கையைக் காண்பித்தாள். பதறிப்போன சுதாவின் பெற்றோர் கடுமையான கோபத்துடன் வெளியே வாசலுக்கு வந்தனர். வந்தவர்கள் எதிர் வீட்டை நோக்கி “டேய் சுரேஷ், வெளியில வாடா!” என்று கூச்சலிட்டனர். சுரேஷின் பெற்றோர் பதறிப்போய், “என்ன? என்ன…?” என்று கேட்டுக் கொண்டே வெளியில் வந்தனர்.
“உன் புள்ள செஞ்ச காரியத்தைப் பாத்தியா? என் பிள்ளையைக் கீழே தள்ளி ரத்தம் வரும்படி செஞ்சுட்டான், படுபாவி! இப்பவே உன் புள்ளை ரவுடியா வளர்றான்” என்று சுதாவின் பெற்றோர் சண்டையை ஆரம்பித்தனர். பதிலுக்கு சுரேஷ் பெற்றோரும்” சின்னப் பிள்ளைங்க ஓடி ஆடி விளையாடும் போது இதுபோன்ற சம்பவங்கள் நடக்கத்தான் செய்யும். இதைப் போய் பெருசா எடுத்துக்கிட்டு ரவுடி அது இதுன்னு பெரிய வார்த்தையெல்லாம் சொல்லாதீங்க… பேசாமப் போயிடுங்க… மரியாதை கெட்டுடும் என்றனர்.”
“என்ன மரியாதை கெடும்?” என்று பதிலுக்கு சுதாவின் பெற்றோரும் விடுவதாக இல்லை.
சண்டை உச்சக்கட்டத்தை அடைந்தது. தெருவில் கூட்டம் கூடியது.
அந்த நேரத்தில் சுரேஷும் சுதாவும் வெளியில் வந்து ஒருவருக்கொருவர் கை கோத்துக் கொண்டு ஒன்றுமே நடவாதது போல விளையாட ஆரம்பித்தார்கள். ஆனால், அவர்களின் பெற்றோர்கள் அங்கு சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது கூட அவர்களுக்குத் தெரியவில்லை.
சுதா கையில் ரத்தம் உறைந்திருப்பதைக் கண்ட சுரேஷ் அவளை அவன் அம்மாவிடம் அழைத்துவந்தான். “அம்மா பாரும்மா, அவள் விளையாடும்போது கீழே விழுந்து கையில் காயம் ஏற்பட்டுச்சு, மருந்து போட்டு விடம்மா” என்றான். சுரேஷ் அம்மா மவுனமானார். சுதாவை உள்ளே அழைத்துக் கொண்டு போய் கையில் மருந்து போட்டுவிட்டு வெளியில் கூட்டி வந்து வீட்டுக்குள் அனுப்பி வைத்தார்.
சண்டை ஒருவழியாக ஓய்ந்தது. இரு குடும்பமும் அமைதியானது. பிள்ளைகள் இருவரும் விளையாடுவதை .அவர்களின் பெற்றோர் பார்த்தனர். “நம்முடைய இரண்டு பிள்ளைகளும் நாம் சண்டை போட்டாலும் அவர்கள் ஒன்று சேர்ந்து விளையாடுகிறார்கள் பார்த்தியா? பெரியவர்களான நாம் தான் புரியாமல் வார்த்தைகளை விட்டுப் பரிமாறிக் கொண்டோம்” என்று வெட்கப்பட்டுத் தலை குனிந்து சென்றனர்.<