அறிவியல் மனப்பான்மை: ஜோதிடம் அறிவியலா?
அறிவியல் விதியின்படி கோள்களுக்கு இடையேயான தொலைவை ஒளியின் துணைக் கொண்டு அழைக்கின்றனர். கோள்கள் அனைத்தும் கோடிக்கணக்கான கிலோமீட்டர் தொலைவிலான சுற்று வட்டப்பாதையில் சூரியனைச் சுற்றிக்கொண்டு இருக்கின்றன. சூரியனிலிருந்து வெளியேறும் வெப்பமும் ஒளியும் இத்தொலைவையும் கடந்து ஒவ்வொரு கோள்களையும் சென்றடைகிறது. எனவே இந்த ஒளியைக் கொண்டு சூரியனிடமிருந்து கோள்களுக்கு இடையில் இருக்கின்ற தொலைவை அளக்கின்றோம். இதைத்தான் ‘light year – ஒளி ஆண்டு’ என்று அறிவியலில் சொல்கிறார்கள். ஒளி ஒரு வினாடிக்கு 3 இலட்சம் கிலோமீட்டர் தூரத்தைக் கடக்கின்றது. இது ஒலியின் (sound) வேகத்தை விட மிக மிக அதிகம். இந்த அடிப்படையில்தான் நமக்கு மின்னல் முதலில் வருகிறது; பின்பு இடியின் ஒலி கேட்கிறது.
ஜோதிடப்படி பார்த்தால் நம் ஒவ்வொருவருக்கும் அனைத்துக் கிரகங்களும் இடம் மாறிக்கொண்டு இருக்கும் என்றால் அது இயல்பிலேயே சாத்தியம் இல்லாமல் போகிறது அல்லவா…? எனவே, ஜோதிடம் உண்மையாக இருக்க வேண்டுமெனில் ஒவ்வொரு தனி மனிதனின் தலைக்கு மேலேயும் ஒரு தனிப்பட்ட சூரியக் குடும்பமே இருக்க வேண்டும்!?
பூமி தன்னைத்தானே சுழன்றுகொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது. அவ்வாறு சுற்றும் பொழுது நமக்குப் பகல் இரவு உருவாகிறது, முழுமையாகச் சூரியனைச் சுற்றி முடிக்கும் பொழுது 12 மாதங்கள் (ஓராண்டு) ஆகின்றது. பூமியின் துணைக் கோளான சந்திரன் பூமியிலிருந்து 3,84,400 கிலோமீட்டர்கள் தொலைவில் இருக்கிறது. சந்திரன் பூமியை முழுமையாகச் சுற்றி வர 27 நாட்கள் எடுத்துக் கொள்கிறது. பூமி, சூரியனை ஒரு முறை சுற்றி முடிக்க 365.24 நாட்கள் ஆகும், இந்த 1/4 நாட்கள் சேர்ந்து தான் ஒவ்வொரு நான்கு ஆண்டுக்கும் பிப்ரவரியில் 29ஆம் நாள் சேர்க்கப்படுகிறது. அதாவது நான்கு 1/4 நாட்கள் ஒரு முழு நாளாகக் கணக்கிடப்படுகிறது. இதனை லீப் ஆண்டு (leap year) என்கிறோம். எப்படி பூமி சூரியனைச் சுற்றுகிறதோ அதைப்போல சூரியனும், தானே சுழன்று கொண்டு இந்த அண்டவெளியில் நகர்ந்து கொண்டே இருக்கின்றது. சூரியன் சுழன்று கொண்டே நகர்வதால், சூரியனைச் சுற்றிக்கொண்டிருக்கும் சூரியக் குடும்பத்தில் உள்ள அனைத்துக் கோள்களும் சுழன்று சென்றுகொண்டே தான் இருக்கின்றன.
சூரியன், பூமி மற்றும் நிலா ஆகியவற்றின் சுற்றுவட்டப் பாதையும், சுழற்சியும்: சூரியன் தன்னைத் தானே சுற்ற 25 முதல் 27 நாட்களும், பூமி சூரியனைச் சுற்ற 365 ¼ நாட்களும், பூமி தன்னைத் தானே சுற்ற 24 மணி நேரமும், நிலவு பூமியைச் சுற்றவும் தன்னைத் தானே சுற்றிக் கொள்ளவும் 27 நாட்களும் எடுத்துக்கொள்கின்றன.
இந்த அறிவியலில் ஒரு காலத்தில் தெரிந்த சில தகவல்களை எல்லாம் சேர்த்து நம் மக்கள் உருவாக்கிய கற்பனைப்படி, பூமி சூரியனைச் சுற்றும் இந்த 12 மாதங்களுக்கு மேஷம், ரிஷபம் என்று பெயர்கள் வைத்து 12 இராசிகளாகவும், சந்திரன் பூமியைச் சுற்றும் 27 நாட்களை அசுவினி, பரணி, கார்த்திகை, ரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம், உத்திரம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுசம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி மற்றும் ரேவதி என்று 27 நட்சத்திரங்களாகவும் வகைப்படுத்தி வைத்திருக்கின்றனர்.
உண்மையில் அறிவியலின்படி அண்ட வெளியில் இலட்சக்கணக்கான நட்சத்திரங்களும் கோள்களும் இருக்கின்றன. அருகருகே இருக்கும் நட்சத்திரங்களை வான சாத்திரம் கணித்தவர்கள் தங்களின் குறியீட்டிற்காக ஒன்றிணைத்து வரைந்து சில உருவங்களைக் கொடுத்தனர். அவையே இன்று வரை நாம் இராசிகளாகச் சொல்லப்படும் சிம்மம் (சிங்கம்) தராசு, வில், தேள் போன்ற நட்சத்திரத்திற்கான குறியீடுகள். இவை தனித்தனி நட்சத்திரங்கள் அல்ல; எல்லாம் நட்சத்திரக் கூட்டங்கள்.
பார்வையில் அருகருகே தோன்றும் நட்சத்திரங்கள் இணைக்கப்பட்டு அவர்களுக்குத் தெரிந்த உருவங்களாகக் கற்பனை செய்து கொண்டு பெயரிடப்பட்டுள்ளன.
பூமியைச் சுற்றி உள்ள நட்சத்திரக் கூட்டங்கள்
ஓர் இரவில் மட்டும் நம் வெறும் கண்களால் பல்லாயிரம் விண்மீன்களைப் பார்க்க முடியும். இந்த விண்மீன் கூட்டங்களைப் பால்வெளி மண்டலம் (milky way) என்பார்கள். இந்த நட்சத்திரக் கூட்டங்களை அறிவியலாளர்கள் 88 மண்டலங்களாகப் (constellations) பிரித்து வைத்தனர்.
ஜோதிடம் என்பது அறிவியலாக இருப்பின் நமக்கு இப்பொழுது 27 நட்சத்திரங்களுக்குப் பதில் 88 நட்சத்திரங்கள் அல்லவா இருக்க வேண்டும்? ஏன் இல்லை? ஏன் என்றால் ஜோதிடம் அறிவியல் இல்லை. 27 நட்சத்திரங்கள் தனிமனிதனின் வாழ்வைப் பாதிக்கும் எனில், மற்ற 61 நட்சத்திரங்களும் (88-27=61) அதே தனிமனிதனைப் பாதிக்க வேண்டுமல்லவா? இந்த 27 நட்சத்திரங்கள் மனிதனுக்கும் தொடர்புடைவையாக இருக்கும் பொழுது மற்ற 61 நட்சத்திரக் கூட்டங்களுக்கு ஏன் மனிதனுடனும் மனித வாழ்க்கையின் காரியங்களிலும் தொடர்பின்றி இருக்கிறது?
அண்ட வெளியில் சூரியனும், சூரியனைச் சுற்றும் கோள்களுமே தொடர்ந்து சுழலும் பொழுது இந்த நட்சத்திரக் கூட்டங்களும் இடம்பெயர்ந்து விடும் அல்லவா? நீங்கள் நினைக்கும் இடப்பெயர்ச்சி அல்ல, வானவெளியில் ஒருமுறை இந்தச் சுழற்சியில் இடம் மாறும்பொழுது மீண்டும் அதே இடத்திற்கு நமது சூரியக் குடும்பமோ, நட்சத்திரக் கூட்டங்களோ எப்போது வரும் என்பத அறிவியல் இன்னும் முழுமை செய்ய முடியாத கேள்வியாய் இருக்கிறது. இதில் ஆங்கிலப் புத்தாண்டுக்கு ஒருமுறை, ‘தமிழ்ப் புத்தாண்டு’ என்று சிலர் நம்பிக்கொண்டிருக்கும் ஆரியப் புத்தாண்டுக்கு ஒருமுறை (சித்திரை 1) என்று ஒரே ஆண்டில் இரண்டு முறை இராசி பலன்களைச் சொல்லுகின்றனர். அதிலும் ஒவ்வொரு இராசிக்கும் வித விதமாக இடப்பெயர்ச்சி சொல்லுகின்றனர். இதில் இருக்கும் நம்பகத்தன்மையைப் பகுத்தறிவுடன் அணுக வேண்டியது இங்கு அவசியமாகிறது.
படத்தில் அண்டவெளியில் இருக்கும் நட்சத்திரக் கூட்டங்களைக் காணலாம். இந்த நட்சத்திரக் கூட்டங்களுக்கும் நமது வாழ்விற்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை.
இதுபோல கோள்களின் இயற்கையான இடமாற்றங்களை இராசி – நட்சத்திரம் ஆக்கி அது ‘நமது வாழ்வை இப்படியெல்லாம் கட்டுப்படுத்துகிறது’ என்று சொல்லி ஜோதிடம் என்கிற பெயரில் ஒவ்வொரு தனி மனிதனின் முயற்சிகளுக்கும் முட்டுக்கட்டை போட்டு வைப்பதோடு மட்டுமில்லாமல், மனிதனின் ஒட்டுமொத்த வாழ்வையும் நம்மைப் பற்றி ஏதும் தெரிந்திராத ஒரு மூன்றாவது மனிதர் தீர்மானிப்பதை என்னவென்று சொல்லுவது? இராசி நட்சத்திரம் வைத்து, அதனுடன் கடவுளைத் தொடர்புபடுத்தி, பின் மதத்தினைத் தொடர்புபடுத்தி, சடங்கு சம்பிரதாயங்களை உருவாக்கி, பரிகாரங்களை நிருணயித்து, இவையெல்லாம் செய்தால் நிம்மதியாக இருப்போம் என்று அன்றாட வாழ்வியல் தொல்லைகளிலிருந்து நாள்தோறும் தற்காலிக விடுதலை அடைந்து விட்டதாக நினைத்தே காலம் ஓடுகிறது.
பின்பு எப்படி ஜோதிடர் கணிப்புச் சொல்கிறார் என்று கேள்விகள் எழலாம். எல்லாம் சாமர்த்தியம் தவிர, வேறொன்றுமில்லை. நம்மிடமிருந்தே தகவல்களைக் கேட்டு வேறு கோணத்தில் சொல்வார்கள். இல்லையென்றால் பொதுவாகச் சொல்வார்கள். நாமே நமக்கு தேவையானவற்றைப் பிரித்து எடுத்துக்கொண்டு அவர் துல்லியமாகச் சொல்கிறார் என்று சொல்லிக்கொள்வோம்.
உதாரணமாக தொலைக்காட்சியில் ஒரு ஜோதிடர் சொல்வதை வைத்தே நாம் தெளிவடையலாம். சிம்ம ராசியில் பல இலட்சம் பேர் இருக்கலாம்; அதில் சில இலட்சம் பேர் ஜோதிடத்தை நம்புவர்களாக இருக்கட்டுமே! ஜோதிடத்தை நம்பும் பல இலட்சம் மக்கள் பிரச்சனைகளில் கல்வி, திருமணம், வேலையின்மை, குழந்தையின்மை, பொருளாதாரச் சிக்கல், உறவுச் சிக்கல், குடும்பச் சிக்கல், விபத்து, நட்பு, ஏமாற்றம், தோல்வி, துரோகம் என்று பல விதமான பிரச்சனைகள் இருக்கும். இதனை ஜோதிடர் விவரிக்கும் பொழுது அது நமக்கானது என்று நாம் எடுத்துக் கொள்கிறோம் அவ்வளவே! இந்தச் சாமர்த்தியம் அவருக்கு இருப்பதால் அவர் வாழ்கிறார். இதே சாமர்த்தியம் அதனை நம்பும் பக்தர்களுக்கு இல்லாததால் நாம் அவர் சொல்லும் கடவுள், நிறம், திசை, பரிகாரம் என்று வணங்கிக்கொண்டு இருக்கிறோம். பொதுப்படையான இந்தக் கேள்வி என்னுள் அடிக்கடி தோன்றும்.
இவ்வளவு கண்டுபிடித்த மனிதர்களில் சிலர், அறிவியல் வளர்ச்சியுற்ற இந்தக் காலங்களிலும் இன்னும் பல நூறு ஆண்டுகளுக்கு முன் கற்பனையில் எழுதப் பட்ட இவற்றை வைத்து இன்னும் அதற்கு மேல் உள்ளதைச் சிந்திக்காமல் யாரோ தீர்மானித்த கட்டங்களுக்குள் நம் வாழ்க்கையைச் சுருக்கிக் கொண்டு விடுகிறார்கள். கட்டங்களை உடைத்து வெளிவருவோம். மூடநம்பிக்கைகளுக்கு விடை் கொடுப்போம்.
தரவுகள்
1. NASA’s Jet Propulsion Laboratory for NASA’s Science Mission Directorate.
2. https://stellarium-web.org/
3. https://theskylive.com/sky/constellations/
4. மூடநம்பிக்கையிலிருந்து விடுதலை – அருணன்
(நிறைவு)