காட்டுவாசி – 5: ”எங்கப்பா அமுதா?” ”எங்க போனான் இந்த மாணிக்கம் பய?
ரெண்டு பேரும் காரைவிட்டு இறங்கி டயரை மாத்துற நேரத்துலதான் அவங்களுக்குத் தெரியாம மெதுவாக் கதவைத் திறந்து அமுதா கீழே இறங்குனாங்க. நானும் அதே மாதிரி மெதுவா இறங்கி ரெண்டு பேரும் இந்தக் காட்டுக்குள்ள ஓடி வந்தோம். கொஞ்ச நேரத்துல அந்த மலையாண்டியும், மாசியும் எங்களைத் துரத்திக்கிட்டு பின்னாடியே வந்துட்டாங்க. அப்பத்தான் நீங்க வந்து எங்களைக் காப்பாத்துனீங்க…” என்று பெருமூச்சு வாங்கச் சொல்லி முடித்தான் மாணிக்கம்.
“குழந்தைகளே! நீங்க ரெண்டு பேருமே வேற வேற நிலையிலே வாழக்கூடிய வளரிளம் பருவத்துக் குழந்தைகள். உங்க குடும்பச் சூழல் மாறுபட்டு இருந்தாலும் பெற்றோர்களை விட்டுட்டு சொல்லாமக் கொள்ளாம நீங்க வீட்டை விட்டு வந்தது பெரிய தப்பு. முடிவெடுக்கும் ஆற்றலும், திறமையும் வர்ற வரைக்கும் உங்களைப் போன்ற குழந்தைகள் பெரியவங்களோட பாதுகாப்பிலேயும், பராமரிப்புலேயும்தான் இருக்கணும்.
உங்க அம்மா, அப்பா குடும்பத்தில உள்ள பெரியவங்க செய்தது சரியா… தப்பான்னு முடிவு செய்யுறதுக்கு முன்னே… நீங்க செய்தது சரியா… தப்பான்னு சிந்தித்துப் பாருங்கள்…
இந்த வளரிளம் பருவங்கிறது எதை ஏத்துக்கிறது, எதை மறுக்கிறதுன்னு தெரியாம குழப்ப மனநிலையிலே இருக்கிற பருவம். இந்த வயசுல சிலர் சொல்லுறது நல்லதா இருந்தாலும்… அது உங்களுக்குக் கசப்பாக இருக்கும். சிலர் சொல்லுறது தப்பானதா இருந்தாலும் அது உங்களுக்கு இனிப்பா இருக்கும்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில எது பிற்கால வாழ்க்கைக்கு உகந்ததுன்னு சிந்திச்சுச் செயல்பட வேண்டியதுதான் உங்க கடமை. புரிஞ்சுதா?” என்று வளரிளம் பருவத்துக்கான வாழ்வியல் சிந்தனையைச் சுருக்கமாகச் சொல்லி முடித்தார் காட்டுவாசி.
இருண்ட காட்டுப் பகுதியில் அமைதியான சூழலில் யாருடைய இடையூறும் இல்லாத அந்த இடத்தில் காட்டுவாசி சொன்ன ஒவ்வொரு சொல்லும் காற்றில் திரும்பத் திரும்ப வந்து அமுதா, மாணிக்கம் இருவரின் காதுகளிலும் மோதிக்கொண்டே இருந்தது.
‘நாம எடுத்தோம் கவுத்தோம்னு வீட்டை விட்டு வந்து இப்ப காட்டுக்குள்ள இருக்கோமே… நம்ம வீட்ல இப்ப என்ன செய்துக்கிட்டிருப்பாங்க’ன்னு சிந்திக்கத் தொடங்கினாள் அமுதா.
அமுதா வீடு. இரவு மணி 7:00
“அமுதா கம்ப்யூட்டர் கிளாசுக்குப் போயிட்டு வர்றேன்னு போயி ரெண்டு மணி நேரம் ஆச்சு… புள்ளையை இன்னும் காணோமே” என்று கடிகாரத்தைப் பார்த்தபடி புலம்பத் தொடங்கினார் அமுதாவின் பாட்டி. “அத்தை ஏன் பதட்டப்படுறீங்க… அவுங்க அப்பாதான் கம்ப்யூட்டர் சென்டருக்குப் போயிருக்காரே… அமுதாவைப் பத்திரமாக் கூட்டிகிட்டு வருவாரு… கவலைப்படாதீங்க” என அமுதாவின் அம்மா மங்களம் சொல்லி முடிப்பதற்குள், வீட்டுக்குள் நுழைந்தார் அமுதாவின் அப்பா ஆனந்தன்.
“எங்கப்பா அமுதா?” என பாட்டி ஆவலாய்க் கேட்க, “அமுதா கம்ப்யூட்டர் கிளாசுக்கே இன்னைக்கு வரலேன்னு சொல்றாங்க” என்றார் ஆனந்தன்.
“என்னாது, கம்ப்யூட்டர் கிளாசுக்கே அமுதா போகலியா? அப்ப எங்கேதான் போயிருப்பா?” என அதிர்ச்சியோடு கேட்டார் அமுதாவின் அம்மா மங்களம்.
“எனக்கு அப்பவே தெரியும். நேரம் ஆச்சு… இன்னும் புள்ளையைக் காணோமேன்னு நான் சந்தேகப்பட்டேன். அந்த மாதிரியே ஆயிடுச்சு.
“புள்ளை தூங்கி எழுந்ததுல இருந்தே… சீக்கிரம்… பாட்டுக் கிளாசுக்கு ஓடு… பள்ளிக்கூடத்துக்கு ஓடு… கம்ப்யூட்டர் கிளாசுக்கு ஓடு… கணக்குக் கத்துக்க ஓடு ஓடுன்னு அப்பாவும் அம்மாவும் அமுதாவை விரட்டிக்கிட்டே இருந்தாங்க… இப்ப… ஓடினாள் ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடினாள்ங்கிற மாதிரி… அமுதா எங்கே போனான்னே தெரியலியே… எங்க போயித் தேடுறது? எப்படிக் கண்டுபிடிக்கிறது?” எனப் புலம்பித் தவித்தார் பாட்டி.
“அம்மா கொஞ்ச நேரம் அமைதியா இருங்க!” அமுதா எங்கேயும் போயிருக்க மாட்டா… அவளோட படிக்கிற பவித்ரா வீட்டுக்கேதும் போயிருப்பா…” என்றார் அப்பா ஆனந்தன்.
“நான் பவித்ராவுக்குப் போன் பண்ணி கேட்டுட்டேன். அங்கே போகலையாம்… என்றார் அம்மா மங்களம்.
“போச்சு போச்சு… சின்னப் பொண்ணு எங்கே போனாளோ… என்ன ஆனாளோ… அய்யோ…” எனக் கூச்சலிட்டார் பாட்டி.
“அம்மா கொஞ்சம் சும்மா இருங்கம்மா… மங்களம், அமுதாவோட பாஸ்போர்ட் சைசு போட்டோ என்னோட கப்போர்டுல டைரிக்குள்ள இருக்கு; அதை ஒரு கவர்ல போட்டு எடுத்துக்கிட்டு வா… நான் போய் போலீஸ் ஸ்டேஷன்ல ஒரு கம்ப்ளைண்டு குடுத்துட்டு வர்றேன்…” என்றார் ஆனந்தன்.
“கடப்பாரையை முழுங்கிப்புட்டு சுக்குக் கசாயம் போட்டுக் குடிச்ச கதையால்ல இருக்கு. புள்ளை விரும்பினதைச் செய்யாம நீங்க விரும்புனதையெல்லாம் புள்ளையைச் செய்ய வச்சா… இப்படித்தான் ஆகும்”… என்றார் பாட்டி.
“அம்மா… எல்லாம் அவ நன்மைக்குத்தானே செய்தோம்” – ஆனந்தன்.
அவ நன்மைக்குன்னாலும் அவளைக் கேட்டா செய்தோம்? அளவுக்கு மீறி பலூன்ல காத்தை ஊதி அதை வெடிக்க வச்ச மாதிரி ஆகிப் போச்சு இப்ப நிலைமை. என்று கையைப் பிசைந்தபடி அழுதாள் பாட்டி.
“இந்தாங்க போட்டோ… சீக்கிரம் போங்க”… என்று ஆனந்தனிடம் கொடுத்தார் மங்களம். அதை வாங்கிக் கொண்டு வேக வேகமாகக் கிளம்பினார் ஆனந்தன்.
அதே நேரம்… மாணிக்கம் வீட்டில்…
“எங்க போனான் இந்த மாணிக்கம் பய… பள்ளிக்கூடம் போயிட்டு வந்து பையை நடு வீட்டுல போட்டு வச்சிருக்கான்… கழட்டிப் போட்ட யூனிபார்மை… கொடியில எடுத்துப் போடாம கீழேயே போட்டு வச்சிருக்கான்… வரட்டும் அவன்…” என்று திட்டிக்கொண்டே பையை எடுத்து ஓர் ஓரமாக வைத்துவிட்டு யூனிபார்மை கொடிக் கம்பியில் போட்டுவிட்டுத் திரும்பினார் மாணிக்கத்தின் அம்மா வள்ளி…
என்னம்மா… என்ன ஆச்சு…? என்று கேட்டபடி வந்து நின்றார் மாணிக்கத்தின் தாத்தா.
“இந்தப் பய எங்கே போனான்னு தெரியலையே… பள்ளிக்கூடம் விட்டு வீட்டுக்கு வந்தோமா… வீட்டுல இருக்கிறதைத் தின்னுப்புட்டு பாடத்தைப் படிச்சமான்னு இல்லாம… எங்கேயோ ஊர் சுத்தப் போயிட்டானே”… என்று புலம்பினார் அம்மா வள்ளி.
“அம்மா வள்ளி… வர்ற வழியிலே மாணிக்கத்தோட எப்பவும் விளையாடுற பசங்களை நான் பார்த்தேன். அங்கே மாணிக்கம் இல்லையே” என்றார் தாத்தா.
“என்னப்பா சொல்றீங்க? சேர்ந்து விளையாடுற புள்ளைகளோட இல்லேன்னா வேற எங்கே போயிருப்பான்?” என்று பதறினார் வள்ளி
“இருட்டிப் போயி இவ்வளவு நேரமாச்சு… வேற எங்கேயும் போகமாட்டேனே… இந்த நேரத்துல எங்க போயித் தேட முடியும்” எனக் கவலைப்பட்டுப் பேசினார் தாத்தா.
“கெட்ட கழுதைக்கு… பட்டது ஆதாயம்… வரட்டும் இன்னைக்கு… ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுன்னு செல்லம் கொடுத்து நான் தான் அவனைக் கெடுத்துப்புட்டேன்… வரட்டும்” எனப் புலம்பினார் வள்ளி.
“அம்மா வள்ளி… சும்மா கிடந்து புலம்பாதே… நான் போயி அவன் நண்பர்களைப் பாத்து விசாரிச்சுட்டு வர்றேன்.” என மறுபடியும் வெளியே கிளம்பினார் தாத்தா.
தலையில் கை வைத்தபடி வாசலில் அமர்ந்த வள்ளியின் மனதுக்குள் ஆயிரமாயிரம் எண்ணங்கள். கண்களில் நீர் வடிய ஏதோ முணுமுணுத்துக் கொண்டிருந்தார்.
சற்று நேரத்தில் வந்த தாத்தா, “அம்மா வள்ளி… அவன் கூட்டாளிங்க நாலு பேரையும் விசாரிச்சிட்டேன். இப்படித்தான் போனான்… அப்படித் தான் போனான்… பள்ளிக்கூடத்திலேயே சோகமா இருந்தான்… எப்படியாவது வேலைக்குப் போகணும்னு சொன்னான்னு சொல்றாங்களே தவிர, எங்கே போனான்னு யாரும் சொல்லல… எவனுக்கும் தெரியல…” என்றார் தாத்தா.
“அய்யோ! என் புள்ளைக்கு என்ன ஆச்சோ… எங்கே போச்சோ… ஒண்ணுமே புரியலியே… நல்லா படிச்சு… நல்ல வேலைக்குப் போவான்னு நினைச்ச… என் கனவுல கல்லைத் தூக்கிப் போட்டுட்டு எங்கேயோ போயிட்டானே… நான் என்ன பண்ணுவேன்… எங்கே போயித் தேடுவேனோ…” என்று கதறினார் வள்ளி.
பக்கத்து வீட்டுப் பரிமளா வேகவேகமாக வந்து “என்னா வள்ளி… உன் புள்ளை மாணிக்கம் பள்ளிக்கூடம் விட்டு வந்து நோட்டுப் புக்கெல்லாம் போட்டுட்டு எங்கேயோ போயிட்டானாமே? என் பையன் சுரேசு இப்பத்தான் சொன்னான். உடனே உன் பையன் போட்டோ இருந்தா எடுத்துக்கிட்டு நீ வேலை செய்யிறியே… அந்த ஏட்டு ஏகாம்பரம் வீட்டுக்குப் போயி எதுக்கும் ஒரு கம்புளைண்டு குடு… போலீசுங்க புள்ளையைத் தேடி கண்டுபுடிப்பாங்க போ… வள்ளி…” என்றார்.
“ஆமாம்மா… வா… உடனே ஏட்டைய்யா… வீட்டுக்குப் போயிட்டு வருவோம்” என்றார் தாத்தா.
பிரிந்திருந்த தலைமுடியை அள்ளிச் சேர்த்துக் கொண்டை போட்டுக் கொண்டு, தகரப் பெட்டியில் இருந்த மாணிக்கத்தின் பாஸ்போர்ட் அளவு போட்டோவைக் கையில் எடுத்துக் கொண்டு ஓட்டமும் நடையுமா ஏட்டு ஏகாம்பரம் வீட்டுக்குப் புறப்பட்டார் வள்ளி. அவர் பின்னாலேயே ஓடினார் தாத்தா.
(தொடரும்…)