மாமனிதர்கள் வாழ்வில்…
உருகிய உள்ளம்
ஆசிரியையாகப் பணியைத் தொடங்கிய போது, சாலையின் ஓரமாக காலாற நடந்து கொண்டிருந்தார் தெரசா. மூதாட்டி ஒருவர், முகத்தைத் துணியால் மூடியபடி சாலையின் ஓரத்தில் படுத்திருந்தார். ஒரு கையால் பூனையுடன் விளையாடிக் கொண்டிருந்தார்.
அவரது முகத்தைப் பார்த்தபோது தொழுநோயின் ரணங்கள் காணப்பட்டன. முகத்தில் மூடியிருந்த துணியை நீக்கிப் பார்த்தார். அவரது கைகளில் விரல்கள் இல்லை. மனம் படபடத்தது. அவரிடம் விசாரித்தார்.
குடும்பத்தினர், உறவினர்கள் தன்னை விலக்கி வெறுத்துவிட்டனர். விரல் இல்லாததால் எப்படிச் சமைக்க முடியும்? யாருடனும் பேசினால் விலகி ஓடுகிறார்கள். எச்சில் இலை உணவை நாய்களுடன் பங்கு வைத்துச் சாப்பிடுகிறேன். இந்தப் பூனை மட்டும் என்னை விட்டு ஓடவில்லை என்றார்.
கண்கலங்கிக் கண்ணீர் விட்டார் தெரசா. தான் தங்கியிருக்கும் இடத்திற்குச் சென்று சகோதரிகளை அழைத்தார். மக்கள் தொழு நோய், காசநோயால் துன்புற்று தாங்கமுடியாத மன வேதனையை அனுபவிக்கின்றனர். அவர்களுக்கு நாம் மருந்து கொடுத்து அவர்களது துயரினைத் துடைக்க மருந்தகம் திறக்க வேண்டும் என்று சொன்னார். பின்பு, பள்ளியிலேயே மாலை நேரம் மருந்தகம் திறந்தார்.
மருந்தின் பெயர் 606
கிரந்திப் புண்களுக்கு மருந்தே கிடையாது என்ற நிலை ஒரு காலத்தில் இருந்தது. இதனை அறிந்த ஜெர்மன் நாட்டின் ரசாயனப் பேரறிஞர் எர்ளிக் என்பவர் கிரந்திப் புண்ணுக்கு மருந்து கண்டுபிடித்தே ஆகவேண்டும் என்ற விடாமுயற்சியில் ஈடுபட்டார்.
ஆர்சானிக் என்னும் வெள்ளைப் பாஷாணத்தின் ஓர் அணுவைச் சுத்தமான கரி அணுவுடன் கலந்து ஒரு வட்ட அணுத்தொடர் உண்டாக்கிவிட்டால், இதனால் உருவாகும் கலப்பு ரசாயனப் பொருள் கிரந்திப் புண்ணுக்குச் சரியான மருந்தாக அமையும் என்று அவரது மனதில் தோன்றியது.
ஆனால், கலப்பு ரசாயனப் பொருளினை உருவாக்குவது அவ்வளவு எளிதான செயலாக இல்லை. வெள்ளைப் பாஷாண அணுவானது கரி அணுவுடன் சேரவில்லை. பலவிதமான முயற்சிகளை மேற்கொண்டார் எர்ளிக்.
605 முறை ஆராய்ச்சி செய்து தோல்வியையே கண்டார். 606ஆவது முறை ஆராய்ச்சியினைத் தொடங்கும் போதும் நம்பிக்கையுடன் தொடங்கினார். வெற்றி பெற்றார். 606ஆவது முறை வெற்றி பெற்றதால் அதன் நினைவாக அந்த மருந்திற்கு அறுநூற்று ஆறு என்ற பெயரினையே வைத்தார்.
வேலைக்காரன்
ஒருமுறை ஜவஹர்லால் நேரு மதுரைக்குக் காரில் சென்று கொண்டிருந்தபோது வழியில் ஒருவர் பலூன் விற்பதைப் பார்த்தார். உடனே, ஓட்டுநரிடம் காரை நிறுத்தச் சொல்லி இறங்கி பலூன் என்ன விலை என்று கேட்டார்.
பலூன் விற்றவர் பத்திரிகை படிக்கம் பழக்கம் உடையவர். எனவே, நேருவைப் பார்த்ததும் யார் என்பதைத் தெரிந்து கொண்டு காசே வேண்டாம் என்று மகிழ்ச்சியுடன் கூறினார். ஏன்? என்ற கேள்வியினை எழுப்பினார் நேரு. தாங்கள் இந்த நாட்டிற்காக எவ்வளவோ செய்கிறீர்கள் என் பங்குக்கு ஏதாவது செய்ய வேண்டுமில்லையா என்றார் பலூன் வியாபாரி. இந்த நாட்டிற்கு நானொரு வேலைக்காரன். என் கடமையைத்தான் செய்கிறேன். எனக்கு அரசாங்கம் சம்பளம் கொடுக்கிறது. அந்தச் சம்பளத்தை வைத்து நான் சாப்பிட்டுவிடுவேன். உங்களோட வேலை பலூன் விற்பது. பலூன் விற்றுக் கிடைக்கும் பணத்தில்தான் உங்களை – உங்கள் குடும்பத்தைக் காப்பாற்றுகிறீர்கள். எனவே, ஏன் இலவசமாகத் தரவேண்டும். மொத்தப் பலூன்களும் எவ்வளவு ரூபாய் என்று கேட்டார் நேரு.
என்ன சொன்னாலும் கேட்கமாட்டார் போல என்பதை உணர்ந்த பலூன் வியாபாரி 25 ரூபாய் என்றார். தன் சட்டைப்பைக்குள் பணத்தைத் தேடினார். எப்போதும் போல் பை காலியாக இருக்கவே, உடன் பயணம் செய்தவரிடம் வாங்கிக் கொடுத்தார். கார் சென்ற திசையில் வந்த சிறுவர்களுக்கெல்லாம் கொடுத்து மகிழ்ந்தார். கடைசியாக இருந்த பலூனை ஊதி வேடிக்கை காட்டிக்கொண்டே மகிழ்ச்சியுடன் பயணம் செய்தார்.
விஞ்ஞானி எல்மர் ஏ.ஸ்பெர்ரி
அட்லாண்டிக் பெருங்கடலில் கப்பலில் பயணம் செய்து கொண்டிருந்தார் அமெரிக்க விஞ்ஞானி எல்மர் ஏ.ஸ்பெர்ரி.கடலில் கொந்தளிப்பு ஏற்பட கப்பல் ஆடியது. ஸ்பெர்ரி கடலில் குப்புற விழுந்தார்.
அன்று முதல், கடல் கொந்தளிப்பின்போது ஏற்படும் கப்பலின் ஆட்டத்தை ஜைரோஸ்கோப்புகளின் துணையினால் தடுக்கும் வழிமுறை பற்றிச் சிந்தித்தார்.
இவரது மகன் எல்மரை அழைத்து, சைக்கிள் வண்டி ஒன்றைத் தலைகீழாகத் திருப்பிப் பிடிக்கச் சொல்லி, அதன் சக்கரத்தை வேகமாகச் சுற்றவிட்டு, அதன் இயக்க மாற்றங்களை ஆராய்ந்தார்.
மகன் எல்மர் அந்தச் சக்கரத்தின் போக்கைத் திருப்ப முயன்றபோது மிகவும் சிரமப்பட்டார். அதாவது, சக்கரம் தனது பழைய நிலையை விட்டு நிலைமாற்றம் பெற எதிர்த்ததைப் புரிந்துகொண்டார். மகனிடம், இந்த இரு சக்தியை மின்சாரத்தைப்போல மக்களுக்குப் பயன்படுமாறு செய்ய வேண்டும் என்றார்.
இதை, மகனுக்குப் புரியவைக்க அவரோடு சேர்ந்து பம்பரம் விளையாடி, அதன் இயக்கங்களை விளக்கிச் சொல்வார்.
பின்னாளில் இவரது மகன் எல்மர், கப்பலுக்கு வழிகாட்டக்கூடிய மின்காந்தத் திசைகாட்டி மற்றும் கப்பலின் ஆட்டத்தைத் தடுக்கக்கூடிய ஜைரோஸ்கோப்புத் தொகுதி போன்றவற்றைக் கண்டுபிடித்தார்.