பிப்ரவரி – 28: தேசிய அறிவியல் நாள்
அறிவியல் பாதை!
பல்லு யிர்கள் நிறைந்திட்ட
பாரில் மாந்தன் மட்டும்தான்
நல்லோர் ஆறாம் அறிவாலே
நன்றாய், உயர்வாய்ச் சிந்திப்பான்;
அல்லும் பகலும் சிந்தித்தே
அறிவை வளர்க்கும் மாந்தனுக்குப்
புல்லும் இங்கே ஆயுதமாம்;
புத்தி தன்னைத் தீட்டிடுவான்;
சொல்லும் செயலும் சிந்தனையும்
சூழ்ந்து நிற்கும் இயற்கையினை
நல்ல வழியில் பயன்படுத்த
நாடும் கலையே அறிவியலாம்;
கல்லுள், மண்ணுள், நீர், காற்றுள்
கலந்தி ருக்கும் ஆற்றலையே
பல்வி தத்தில் பயனாக்கப்
பாடு படுதல் அறிவியலாம்;
எல்லா உயிரும் மேம்படவும்
என்றும் அமைதி நிலவிடவும்
நல்லோர் பாதை காட்டுவது
நானி லத்தில் அறிவியல்தான்;
எல்லை இல்லா அறிவியலை
ஏற்ற வாறு கைக்கொண்டால்
தொல்லை இல்லா உலகினையே
தோழா நாமும் படைத்திடலாம்!
– கே.பி.பத்மநாபன்,
கோவை.