துணுக்குச் சீட்டு – 24 : எவ்ளோ பழைய படம்?
![5](https://periyarpinju.com/wp-content/uploads/2025/01/5-1.jpg)
ஒரு ஊருல ஒரு ராணி இருந்தாங்களாம். அவங் களுக்கு…”
அச்சோ, பழைய கதைலாம் வேண்டாம், புதுசா எதாச்சும் பேசலாமா? இது உங்க கேள்வியா இருந்தால், இல்லை நாம, பழங்கதையப் பற்றி தான் பேசப் போறோம். அதுவும் 100 ஆண்டு 200 ஆண்டு இல்லை, பல கோடி ஆண்டுகள் பழைய கதை!
அதுக்கு முன்னாடி, ஒரு கற்பனைக் கதை சொல்லவா? நீங்க உங்க பிறந்தநாளுக்குச் சும்மா, சூரியனுக்கு ட்ரிப் போய் இருக்கீங்க (சூரியனோட சூடு தெரியாம இருக்க எல்லா வகையான பாதுகாப்பு சாதனங்களும் உங்ககிட்ட இருக்கு, ஓகே வா?). உங்க தோழி ஒருவர், நெப்டியூனுக்குப் போய் இருக்காங்க.
இந்திய நேரப்படி, பிற்பகல் ஒரு மணிக்கு, உங்க தோழி, சூரியனில் நிற்கும் உங்களைப் புகைப்படம் எடுக்குறாங்க. நீங்களோ, புகைப்படம் எடுத்த அடுத்த நிமிடம், வெள்ளை நிற உடையில் இருந்து, சிவப்பு நிற உடைக்கு மாறிடுறிங்க. எடுக்கப்பட்ட புகைப்படம், ஒளி மூலமாகத்தான் சூரியனில் இருந்து நெப்டியூன் வரைக்கும் வந்து சேரும். அது, நாலு மணிநேரம் 16நிமிடத்துக்குப் பிறகு, அவங்களுக்குப் போய் சேருது! அப்போ, உங்க தோழி நீங்க சுமார் நாலு மணிநேரத்திற்கு முன்னாடி என்ன உடைப் போட்டிருருந்தீங்களோ, அதைப் பற்றிய விவரத்தைத் தான் தெரிஞ்சுக்கிட்டு இருப்பாங்க அல்லவா! அப்போ மாலை நாலு மணிக்கு என்ன உடை அணிந்து இருக்கீங்க என்று தெரியாது. கரெக்ட்டா? அப்போ கிட்டத்தட்ட உங்க தோழி time travel பண்ண மாதிரி தான்?!
இப்போ இதே வேலையைத்தான் ஜேம்ஸ் வெப் போன்ற தொலைநோக்கிகள் செய்யுது. எங்கோ தொலைவில் இருந்து வரும் ஒளிக்கதிர்களை உள்வாங்கி, அதை நமக்கு அனுப்புது. அதை, பூமியில் இருக்கும் விஞ்ஞானிகள் புகைப்படமாக மாற்றி அதைப்பற்றி ஆராய்ச்சி செய்வாங்க. அப்போ ஜேம்ஸ் வெப் மூலம் நமக்கு கிடைத்த படங்கள் எல்லாமே, பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்னாடி அந்த நட்சத்திரமும் கேலக்ஸிகளும் எப்படி இருந்தன என்றுதான் சொல்லி இருக்கே தவிர, இன்று, இந்த நொடி எப்படி இருக்கு என்று சொல்லவில்லை.
அது எப்படி, பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்னாடி என்று சரியா கண்டுபிடிச்சாங்க?
ஒரு பொருள் பயணித்த தூரத்தை, அது அந்த தூரத்தைக் கடக்க எடுத்துக்கொண்ட வேகத்தை வைத்து வகுத்தால், அந்தப் பொருள் பயணித்த நேரத்தைக் கண்டுபிடிக்கலாம்.
Time taken=Distance travelled/speed.
நெப்டியூனுக்கும் சூரியனுக்கும் இடையில் இருக்கும் தொலைவு 45,0000,000,000,00 m. ஒளியின் வேகம், 300,000,000X3600 m/hr. அப்போ நேரம்?
நேரம்=(4.5X1000000000000/3X3600X100000000) = 4.16 hours. அதனால் தான், பிற்பகல் 1 மணிக்கு எடுத்த புகைப்படம், உங்க நண்பருக்கு 4 மணி நேரம் 16 நிமிடம் கழிச்சிக் கிடைத்து இருக்கு. அப்போ, இதே மாதிரி கணக்கு செய்தால், தூரத்து நட்சத்திரம் தொலைநோக்கியில் இருந்து இருக்கும் தூரத்தை ஒளியின் வேகத்தால் வகுத்தால், அந்த நட்சத்திரத்தில் இருந்து பயணம் செய்து வந்த ஒளிக்கீறு, தொலைநோக்கியை அடைய எடுத்துக்கொண்ட நேரம் கிடைச்சிடும். அதை, தொலைநோக்கி, ஒளிக்கீற்றை உள்வாங்கிய நேரத்தில் இருந்து கழித்தால், அந்த ஒளிக்கீறு மூலம் கிடைத்த படம், எவ்வளவு பழமையானது என்று தெரிஞ்சிக்கலாம். அதன் மூலம், அவ்ளோ காலத்துக்கு முன்னாடி அந்த நட்சத்திரம் எப்படி இருந்தது என்றும் தெரிஞ்சிக்கலாம்.
ஆக, நம்ம எல்லாருமே, விண்வெளி தொலைநோக்கிகள் எடுத்துக் குடுத்த படங்களைப் பார்க்கும் போது, time travel தான் செய்யுறோமா?!