தொடர் கதை: காட்டுவாசி – 6
பசுமையான காடு… இருட்ட இருட்ட கருப்பில் மூழ்கிப் போனது. மரங்களில் இருக்கும் சில்லு வண்டுகளின் ஓசை காற்றில் கலந்து காட்டை நிறைத்தது.
காட்டுவாசி இரண்டு தீப்பந்தங்களை ஏற்றி அதற்கென உள்ள நீண்ட மூங்கில் கம்புகளில் செருகி வைத்தபடி…
“இருட்டிப் போச்சுன்னா… காட்டுலே எல்லா இடமும் இப்படித் தான் இருக்கும். அதனாலே படுத்துத் தூங்க வேண்டியது தான்.” என்றார்.
“புது இடம்… அதுவும் காட்டுக்குள்ள எனக்கு எப்படி தூக்கம் வரும்? வீட்டை நினைச்சா ரொம்ப பயமா இருக்கு?” என்றாள் அமுதா.
“அதே நிலைமைதான் எனக்கும்? அம்மாவும் தாத்தாவும் என்னை எங்கே போய்த் தேடுறாங்களோ? தெரியலே…” என்றான் மாணிக்கம்.
“இப்ப இப்படி வருத்தப்படுற நீங்க வீட்டை விட்டுப் புறப்படுறதுக்கு முன்னே பொறுமையா யோசிச்சு முடிவெடுத்திருக்கணும் இப்ப வருத்தப்பட்டா எப்படி? நீங்க எடுத்த முடிவுக்கான விளைவுகளை நீங்க சந்திச்சுத் தானே ஆகணும்? அதனாலே நான் சொல்றதை முதல்ல கவனமாக் கேளுங்க. அதுக்குப் பிறகு உங்க அறிவு என்ன சொல்லுதோ அதுபோலச் செய்யுங்க” என்றார் காட்டுவாசி.
காட்டுவாசி என்ன சொல்லப் போகிறார் என்பதைக் கேட்க ஆவலாய் அவர் முகத்தையே பார்த்தபடி உட்கார்ந்திருந்தனர் அமுதாவும், மாணிக்கமும். “வாழ்க்கையில சிரமப்படுற பெற்றோர்களுக்கு நம்மளைப் போலவே நம்ம குழந்தைகளும் பிற்காலத்திலே சிரமப் படக் கூடாதுங்கிற கவலை.
பெற்றோர்களுக்கு, தாங்கள் அடைய முடியாமல் தவறிவிட்ட வாய்ப்புகளைத் தங்களோட குழந்தைகளாவது அடையணும்ங்கிற ஆவல்.
தனக்குத்தான் எதுவும் தெரியல… நம்ம குழந்தைகளுக்காவது எல்லாம் தெரிஞ்சிருக்கணும்ங்கிற ஆசை…
அதுக்காக குழந்தைகளைக் கட்டாயப்படுத்தித் தாங்கள் நினைக்கற செயல்களைச் செய்ய வைப்பாங்க. குழந்தையின் விருப்பத்தைக் கேக்க மாட்டாங்க. அதுதான் இந்த மாதிரி சிக்கலுக்கு முக்கிய காரணம்.
அமுதா… உனக்கு எது விருப்பம்னு கேட்காம அப்பா விருப்பத்தை உன் மேலே திணிச்சதாலே நீ மனம் வெறுத்து வீட்டை விட்டு வந்துட்டே…
மாணிக்கம்… படிக்கிற வயசுல நல்லா படிச்சு படிப்புக்கு ஏத்த வேலைக்குப் பெரியவனா ஆன பிறகு போறதுதான் சரியான வளர்ச்சி. அதைத்தான் உன்னோட அம்மா உனக்குச் சொல்லியிருக்காங்க. அதைப் புரிஞ்சுக்காம நீயும் வீட்டை விட்டு வந்துட்டே.
அந்தந்த வயதுக்கேத்த படிப்பை முறையா படிச்சு அடுத்த நிலைக்குப் போனா, எப்பவும், எதுக்கும் கவலைப்படாம மகிழ்ச்சியா இருக்கலாம்… புரிஞ்சுதா” என்றார் காட்டுவாசி.
“இந்தக் காட்டுல இருட்டுல… இப்பப் புரிஞ்சு என்ன செய்யிறது? எங்களைக் கடத்துனவங்க எதுக்குக் கடத்துனாங்க… ஏன் கடத்துனாங்கன்னு எதுவுமே தெரியாம இருக்கே…” என வருத்தமாய்ச் சொன்னாள் அமுதா.
“சின்ன வயசுல… சோறு ஊட்டும் போது சாப்புடு… இல்லே… பூச்சாண்டி புடிச்சுக்கிட்டுப் போயிடுவான்னு அம்மா பயங்காட்டுவாங்க. ஆனா… இவ்வளவு வளர்ந்த பிறகு மலையாண்டி புடிச்சுகிட்டு வந்தது ஏன்னு தான் தெரியல்ல” என சோகமாகச் சொன்னாள் மாணிக்கம்.
“கவலைப்படாம… இப்ப படுத்துத் தூங்குங்க… விடியட்டும்… மத்ததைப் பேசுவோம். அமுதா… நீ போய் அந்தப் பரண் மேலே படுத்துக்க… நானும் மாணிக்கமும் இந்தப் பாறை மேலே படுத்துக்குறோம். ரங்கு அந்த மரத்துமேலே ஏறிப் படுத்துக்குவான்.”
காட்டுவாசி சொன்னது போல எல்லோரும் படுக்கச் சென்றனர்.
கடத்தி வந்த குழந்தைகளைக் காட்டுக்குள் தவறவிட்ட மாசியும், மலையாண்டியும் வெகு தூரம் நடந்து, காட்டுக்கு வெளியே தங்கள் விட்டுவிட்டு வந்த காருக்குச் சென்று சேர்ந்தனர்.
பாதி மாட்டியும் மாட்டாமலும் இருந்த கார் டயரைச் சரி செய்து முடித்து, வண்டியை எடுத்துக் கொண்டு தங்களுக்கு உத்தரவிட்ட நபரின் வீடு நோக்கிப் பயணப் பட்டனர்.
விடிந்து விட்டது. பெரிய மாளிகை போல் இருந்த வீட்டின் முன்னால் காரை நிறுத்தினார்கள். இறங்கி வேக வேகமாக உள்ளே சென்று “ஜீ… ஜீ…” என்று குரல் கொடுத்தான் மாயாண்டி.
“அரே… வாங்கோ… ஏன் இவ்ளோ நேரம்…?”என்றபடி போர்டிக்கோ மாடியில் வந்து நின்றார் குல்மால் குருஜீ.
“ஜீ… வரும் போது டயர் பஞ்சராச்சின்னு காரை நிறுத்துனோம். அந்த நேரத்திலே அந்த ரெண்டு பசங்களும் தப்பிச்சு காட்டுக்குள்ளே ஓடிப் போயிடுச்சுங்க…” என மாசி சொல்லி முடிப்பதற்குள்…
“பின்னாடியே தொரத்திக்கிட்டுப் போனோம். நடுக்காட்டுல… திடீர்னு வனதேவதை எங்களை மடக்கி இதுக்கு மேலே ஒரு அடி எடுத்து வச்சே… உன்னை… அடிச்சு ரத்தத்தைக் குடிச்சிடுவேன்னு பயங்கரமா மிரட்டிடுச்சு… அத்தோட பயந்து திரும்பி வந்துட்டோம் குருஜீ…” என்றான் மலையாண்டி.
“அரே… என்னப்பா புருடா உடுறே… காட்டுக்குள்ளே மிருகம் இருக்கும், பறவை இருக்கும்… பாம்பு இருக்கும்… வனதேவதை எப்படிப்பா வந்துது?”
“எலும்பும் சாம்பலுமா கொட்டிக்கிட்டு… மரத்துக்கு மேலே போச்சே… என்றான் மாசி.
“ஆமா… ஆமா குருஜி! அதுல பயந்துதான் குழந்தைகளைத் தோடாம ஓடி வந்துட்டோம்.” என்றான் மலையாண்டி.
“அட பயந்தாங்கொள்ளிப் பசங்களா… யாரோ உங்களைச் சோக்கா ஏமாத்தி இருக்கிறான். நீங்க பயந்து வந்துட்டிங்கோ… போ… போ ஆபீசுல போயி கொஞ்ச நேரம் படுங்க. நான் ரெடியாயி வர்றேன்.” என்றார் குல்மால் குருஜீ. ‘நாமதான் வனதேவதைக்குப் பயந்து குழந்தைகளைச் சரியாய்த் தேடாம வந்துட்டோமா…?’ என்று நினைத்துக் கொண்டு மாசியும்…
‘பேயி, பிசாசு இதெல்லாம் இல்லேன்னு சொல்றது உண்மைதான் போலிருக்கு’ என்று நினைத்துக் கொண்டு மலையாண்டியும்…
அந்தப் பெரிய மாளிகையின் பின்னால் இருந்த சின்ன அறையில் படுக்கப் போனார்கள்.
அறையில் உள்ளே இருந்த மர பெஞ்சில் மாசியும், ஒரு பக்கம் இருந்த நீட்டு சோபாவில் மலையாண்டியும் படுத்தனர்.
கார் ஓட்டி வந்த அலுப்பு… கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாதது போல, கிடைத்த குழந்தைகளைத் தவறவிட்ட சலிப்பு… இருவரும் சட்டெனத் தூங்கிவிட்டனர்.
கொஞ்ச நேரத்தில் அந்த அறைக்கு வந்தார் குல்மால் குருஜீ.
“ஏப்பா… இன்னா ரெண்டு பேரும் குறட்டை விட்டு தூங்குறிங்க. அதிஷ்ட தேவதை கொடுத்த ரெண்டு குழந்தைங்களை இல்லாத வனதேவதைக்குப் பயந்து காட்டுலே உட்டுட்டு வந்துட்டிங்களேப்பா…” என்று கவலையோடு சத்தமாகப் பேசினார்.
மாசியும், மலையாண்டியும் ‘தடால்’ என விழித்து எழுந்து அமர்ந்தனர்.
“இப்பவும் ஒண்ணும் கெட்டுப்போகல… என்னோட ஜீப்பை எடுத்துக்கிட்டு சீக்கிரம் போனா அந்தக் குழந்தைகளைப் புடிக்க முடியும்.
நாம செம்மரத்தை வெட்டிக் கடத்த எத்தனை முறை அந்தக் காட்டுக்குள்ள போயிருக்கோம்.
இப்பதான் கொஞ்ச நாளா வனத்துறை மரம் கடத்துறவங்களைத் தேட ஆரம்பிச்சதாலே… வேலையை மாத்திச் செய்யலாம்னு தொடங்குனதுதான் குழந்தைகளைக் கடத்துறது. முதல் வேலையிலேயே இப்படி சொதப்பிட்டிங்களேப்பா.
என்னோட ஜீப்பை எடுத்துக்குங்க… வேட்டைத் துப்பாக்கி தர்றேன்… அதையும் எடுத்துக்குங்க… காட்டுக்குள்ள போயி நல்லாத் தேடுங்க.”
குழந்தைங்க தனியா காட்டுக்குள்ள ரொம்ப நேரம் இருக்க முடியாது. அதனாலே சுலபமாகக் குழந்தைகளைப் புடிக்க முடியும். போங்க… போங்க… குழந்தைகளை வித்தா நல்ல பணம் கிடைக்கும் விட்டுறாதிங்க… ஓடுங்க… ஓடுங்க.
இந்தா மாசி… இந்தப் பணத்தை கையில செலவுக்கு வச்சிக்க…” என்றபடி சில அய்நூறு ரூபாய் நோட்டுகளைத் தன் சட்டைப் பையிலிருந்து எடுத்துக் கொடுத்தார் குருஜீ.
அதைப் பணிவோடு வாங்கிக் கொண்டான் மாசி.
“மலையாண்டி… நீ போயி மாடி ரூம்ல இருக்கிற துப்பாக்கியை எடுத்துக்க… போங்க… எதாவது சிக்கலுன்னா எனக்கு அந்த புது நெம்பருக்குப் பேசுங்க… புரிஞ்சுதா…” என்றார் குருஜீ.
மாசியும், மலையாண்டியும் தலையை ஆட்டியபடி அந்த இடத்தை விட்டுக் கிளம்பினார்கள்.
மாசி வண்டியை ஓட்ட பக்கத்தில் துப்பாக்கியைப் பிடித்தபடி மலையாண்டி உட்கார்ந்திருக்க நெடுஞ்சாலையில் படு வேகத்தில் பறந்தது ஜீப்.
(தொடரும்)
எழுத்து, ஓவியம்: மு.கலைவாணன்