பறவைகள் அறிவோம் – 11: குயில்
![9](https://periyarpinju.com/wp-content/uploads/2025/01/9-1.jpg)
விண்ணைத் தொடும் மரங்களையும், மண்ணைத் தொடும் அருவிகளையும், கண்ணைக் கவரும் இயற்கையின் அத்தனை அழகையும் ஒருங்கே பாதுகாத்து மானுடம் பயனுற விதைகளைப் பரப்பி, இன்பச் சோலையைப் பூவுலகில் ஏற்படுத்தி, சத்தமில்லாமல் சாதித்துக் கொண்டிருக்கின்றன பறவைகள். நீல வானில் அதிகாலை வேளை வண்ணங்களைச் சுமந்து கொண்டு காற்றில் மிதந்து செல்லும் பறவைகளைப் பார்க்கும்போது ‘அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்’ என்று பாடல் எழுதிய கவிஞர் கண்ணதாசனின் கவிதை வரிகள் நினைவில் வந்து செல்கின்றன.
மனிதர்களுக்கு வீடு எவ்வளவு முக்கியமோ அது போல பறவைகளுக்கு அதன் கூடு மிக முக்கியப் பங்காற்றுகின்றது. பறவைகள் முட்டையிட்டு, முட்டைகளை அடைகாத்து அதன் குஞ்சுகளை வளர்க்கும் இடமாகத் திகழ்வது அதன் கூடே ஆகும். வாழும் இடத்திற்கும், சூழ்நிலைகளுக்கும் ஏற்றவாறு புல், இலை, குச்சி முதலியவற்றைக் கொண்டு அழகான கூடுகளை நேர்த்தியாகக் கட்டுகின்றன. பறவைகளின் கூடுகள் இனத்திற்கு இனம் மாறுபடுகின்றன.
1. மேலே திறந்த நிலைக் கூடுகள்:
இவ்வகையான கூடுகளை சிறு, சிறு குச்சிகளைக் கொண்டு சிறிய கிண்ண வடிவில் கட்டி அதன் உட்பகுதியில் மெத்தை போல இருக்க நார், புல், இறகுகளைப் பயன்படுத்தி மிருதுவான தன்மையை உருவாக்கி அதன் மேல் முட்டைகளையிட்டு இனப்பெருக்கம் செய்கின்றன. இந்த வகையான கூடுகளை பெரும்பாலும் காக்கை, கொக்கு, புறா போன்ற பறவைகள் கட்டுகின்றன.
2. சுரங்கக் கூடுகள்:
நீர்நிலைகளை நம்பி வாழும் மீன் கொத்தி, பஞ்சுருட்டான் போன்ற பறவைகள் இவ்வகையான கூடுகளைக் கட்டுகின்றன. ஆற்றங்கரைகளில் தங்கள் சிறிய அலகால் சுரங்க வடிவில் குழிகளைத் தோண்டி கூடுகளை உருவாக்கி அதில் முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கின்றன.
3. பொந்துக் கூடுகள்:
உயரமான மரங்களில் இயற்கையாகவோ அல்லது தன் கூர்மையான அலகால் மரங்களைக் கொத்தி பொந்து ஏற்படுத்தியோ அதில் மென்மையான நார், இறகு மற்றும் மென்மையான புற்களைப் பரப்பி அதில் முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கின்றன. இருவாய்ச்சி, மஞ்சள் கழுத்து சிட்டு, மரங்கொத்தி, ஆந்தை, மைனா போன்ற பறவைகளின் கூடுகள் இம்முறையில் கட்டப்படுகின்றன.
4. வெளியே செல்லும்போது மூடப்படும் கூடுகள்:
முக்குளிப்பான், நீர்க்கோழி போன்ற பறவைகள் மேலே திறந்த நிலையில் இருக்கும் கூடுகளைக் கட்டி அதில் முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கின்றன. அப்பறவைகள் உணவு தேடி வெளியே செல்லும்போது குளக்கரையில் இருக்கும் நாணல் தட்டைகளையும், இற்றுப் போன தழைகளையும் கொண்டு கூடுகளை மூடிவிட்டுச் செல்கின்றன.
5. கட்டாந்தரைக் கூடுகள்:
இவை உண்மையில் கூடு கட்டியிருப்பது போல் பார்வைக்குத் தெரியாது. ஆலா, ஆள்காட்டி, கரைக் கோழி ஆகிய பறவைகள் தரையில் முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கின்றன. இவற்றின் முட்டைகள் சுற்றுப்புறத்தின் நிறத்தைப் போலவே இருப்பதால் முட்டையை அவ்வளவு எளிதில் யாராலும் கண்டுபிடிக்க முடியாது. இப்பறவைகள் கூடுகட்ட கூழாங்கற்களையும், கிளிஞ்சல்களையும் பயன்படுத்துகின்றன.
6. களிமண் கூடுகள்:
கருங்குருவிப் பறவைகள் குளம், குட்டைகளிலுள்ள சேற்றை சிறு, சிறு உருண்டையாக உருட்டி அதைக்கொண்டு கிண்ணம் அல்லது குடம் போன்ற வடிவில் தனது கூட்டைக் கட்டுகின்றன.
7. கிண்ண வடிவக் கூடுகள்:
மரக்கிளைகளில் புல், தண்டு, இலை, நார், குச்சி ஆகியவற்றைக் கொண்டு வட்டமாகக் கிண்ண வடிவில் கூடுகளைக் கட்டுகின்றன. மாம்பழச் சிட்டுக் குருவியின் கூட்டை சிறந்த எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்.
8. தொங்கும் கூடுகள்:
மரக்கிளையின் நுனிப்பகுதியில் புற்களையும், நார்களையும் கொண்டு காற்றில் அசைந்தாடும் தொங்கும் கூட்டைத் தூக்கணாங்குருவி கட்டுகிறது. இக் கூட்டின் சிறப்பு என்னவென்றால் இந்தக் கூட்டிற்குள் செல்லும் வழி அக்கூட்டின் அடிப்பகுதியில் இருக்கும்.
பரிணாம வளர்ச்சிவழி பூமியில் வாழும் அனைத்து உயிரினங்களும் ஏதாவதொரு வகையில் தம் இனத்தைப் பெருக்குவதில் கவனம் செலுத்துகின்றன. இவ்வாறு பல்வேறு விதமான கூடுகளைக் கட்டி தன்னுடைய இனத்தைப் பெருக்கும் பறவைகளுக்கிடையே, எந்த விதமான கஷ்டமும் படாமல் தன்னுடைய இனத்தைப் பெருக்கும் பறவையை உங்களுக்குத் தெரியுமா? ஆம். அதுதான் காடுகளிலும் நம் வீட்டுத் தோட்டத்திலுள்ள மாமரத்திலும் தென்னை மரத்திலும் உல்லாசமாய் அசைந்தாடி இலைகளுக்கிடையே மறைந்து இருந்து இனிமையாகக் குரலெழுப்பும் பறவையான குயில்.
குயில் பாராசைட்டிக் பறவை என்று அழைக்கப்படுகிறது. பாராசைட்டிசிசம் என்பது தமிழில் ஒட்டுண்ணித் தன்மை என்று அழைக்கப்படுகிறது. அதாவது மற்ற உயிரினங்களைச் சார்ந்து வாழும் வாழ்வியல் முறையாகும். தன் முட்டையை அடைகாத்து அது பொரிந்த பிறகு குஞ்சுகள் பறக்கத் தொடங்கும் வரை கவனித்து உணவளித்து பராமரித்துக் கொள்ளும் வேலையையும், நேரத்தையும் தன்னுடைய பொறுப்பாக எடுத்துக் கொள்ளாமல் வேறு பறவையிடம் பொறுப்பைக் கொடுத்துவிடுகின்ற அப்படிப்பட்ட பறவைகள்தான் பாராசைடிக் பறவைகள் என்று அழைக்கப்படுகின்றன.
இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் மற்றும் மியான்மர் போன்ற நாடுகள் குயில் காணப்படுகிறது. இனிமையான குரலுக்குச் சொந்தமான இப்பறவையின் தோற்றம் கருப்பாக இருக்கும், கண்கள் செந்நிறமாகவும் அலகு மஞ்சள் நிறத்திலும் இருக்கும். ஆண் கருப்பாக இருக்கும் காரணத்தால், கருங்குயில் என்றும், பெண் குயில் கருமை கலந்த பழுப்பு நிறத்தில் முத்துப் போன்ற வெண்புள்ளிகளைக் கொண்டிருப்பதால் பெண் குயிலை முத்துக்குயில் என்றும் அழைப்பர். இது சுமார் 36 செ.மீ. முதல் 46 செ.மீ. வரை வளரும். ஆண் குயிலை எளிதில் காண முடியும். பெண் குயிலைக் காண்பது சற்றே அரிதானது. புதுச்சேரியின் மாநிலப் பறவையாகக் குயில் இருக்கிறது. இலக்கியத்தில் குயிலைக் கோகிலம் என்றும் சொல்வதுண்டு. இது மாமரத்தின் இளந்தளிரையும், ஆல், அத்திப்பழங்களை சைவ உணவாகவும், கம்பளிப்பூச்சியை அசைவ உணவாகவும் உண்ணும். பெரும்பாலும் இப்பறவை தனித்தே பறக்கும் குணமுடையது.
பருவமடைந்த ஆண் குயில், பெண் குயிலின் அன்பைப் பெற அதிகாலை 4:30 மணியிலிருந்து 6.30 மணிவரை கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் இனிமையான குரலில் தொடர்ந்து கூவும். ஒருமுறை குரல் எழுப்பி சற்றே இடைவெளி விட்டு மறுமுறை கூவும். தொடர்ந்து அதிகப்படியான நேரம் கூவும். ஆண்குயிலைத் தான் பெண் குயிலுக்கு மிகவும் பிடிக்கும். ஆண் குயிலின் அன்பைப் பெற்ற பெண் குயில் தானும் அதனோடு சேர்ந்து கூவி அப்பறவையோடு இணைசேரும். தென்மேற்குப் பருவ மழைக் காலம் தான் குயிலின் இனப்பெருக்கக் காலமாகும். இனிமையாக குரல் எழுப்பும் குயிலுக்குக் கூடு கட்டத் தெரியாத காரணத்தால் காக்கையின் உதவி தேவைப்படுகிறது. காரணம், காக்கையின் இனப்பெருக்கக் காலமும் இதே காலத்தில் இருப்பதால் தான்.
காக்கையின் கூடுகளில் குயில் முட்டையிடுவது என்பது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. சிறு, சிறு குச்சிகளைப் பயன்படுத்தி ஆண், பெண் காக்கைகள் இரண்டுமே சேர்ந்து கூடுகளைக் கட்டுகின்றன. ஆதலால், ஆண் பெண் காக்கைகள் இரண்டும் மாறி மாறி கூட்டைக் காவல் காக்கின்றன. ஆதலால் ஒரு காகம் உணவு தேடிச் செல்லும்போது மற்றொரு காக்கை கூட்டைக் காவல் காக்கிறது. இந்தப் பாதுகாப்பை மீறி குயில் முட்டையிடுவது சவாலான செயலாகும். இதற்காகக் குயில் ஒரு தந்திரம் செய்கிறது. அது என்னவென்றால் ஆண் குயில், காவல் காக்கும் காகத்தைச் சற்றே சீண்டி, கோபமடையச் செய்து காக்கையின் கூட்டைச் சுற்றி இங்கும் அங்குமாகப் பறக்கும் படி செய்து, கவனத்தைச் சிதறச் செய்துவிட்டு காக்கையின் ஒரு முட்டையைத் தூக்கிக்கொண்டு பறக்கத் தொடங்கும். காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சல்லவா! குயிலைத் துரத்திக் கொண்டு பின் செல்லும். அப்போது பெண் குயில் காகத்தின் கூட்டில் தன் முட்டையையிட்டு விடும். காகத்தின் முட்டை நிறமும், வடிவமும் குயிலின் முட்டையைப் போல் இருப்பதால் குயில் முட்டையையும் சேர்த்தே காக்கை அடைகாக்கும். குயிலின் முட்டை காகத்தின் முட்டையை விட அளவில் சற்றே சிறியதாக இருப்பதால் அதன் அடைகாக்கும் நாட்களும் குறைவானவையே! சுமார் 27 நாட்களில் குயில் குஞ்சு பொரிந்து விடுகின்றன. அதன் பின்னரே காக்கைக் குஞ்சுகள் பொரிந்து வருகின்றன. ஆரம்ப காலத்தில் குயில் குஞ்சும், காக்கைக் குஞ்சும் கருப்பு நிறமாகவே இருப்பதால் இரண்டிற்கும் சேர்த்தே உணவளிக்கும். அந்த வகையில் காக்கை குயில் குஞ்சுகளுக்குச் செவிலித்தாயாகச் செயல்படுகிறது. குயில் குஞ்சுகள் வளர்ந்து, பறக்கும் தறுவாயில் தனக்கே உரிய குரலை வெளிப்படுத்தும். அப்போது குயில் குஞ்சைக் காக்கை துரத்திவிட்டு விடும். இந்நிகழ்வு ஆண் குயிலை விட பெண் குயிலுக்கு விரைவாக நடந்து விடுகிறது. காரணம், பெண் குயில் குஞ்சின் உடம்பில் பழுப்பு நிறத்தில் வெண்புள்ளிகளில் முடி வளர்வதால் இது தன்னுடைய குஞ்சுஅல்ல என்பது காகத்திற்கு எளிதில் தெரிந்துவிடுகிறது.
சில நேரங்களில் காக்கை முட்டையிடு வதற்கு முன்னதாகக் குயில் முட்டையிடும் சூழல் ஏற்பட்டால், அது கரிச்சான் குருவியின் கூட்டில் முட்டையிடும். காக்கையின் கூட்டில் வைக்கப்பட்டுள்ள தனது முட்டையை அடைகாத்து குஞ்சுகளுக்கு உணவு வழங்குகிறதா என்பதனை அறிய குயில் சற்றே மறைவான இடத்திலிருந்து கண்காணித்துக் கொண்டே இருக்கும்.
குயில் காகத்தை விட சற்றே சிறிய பறவை தான். இது பழங்களை விரும்பி உண்ணுவதால் இதன் உடலினுள் நிறைய கொழுப்பு சேகரிக்கப்பட்டு நல்ல உருண்டு திரண்ட தேகத்தை அடைகிறது. இந்த அழகினால் பிற இனப் பறவைகளிடமிருந்தும், விலங்குகளிடமிருந்தும் ஏன் சில சமயங்களில் மனிதர்களிடமிருந்தும் பறவைகளுக்கு அதிக அளவில் ஆபத்து ஏற்படுகின்றன. பறவைகளுக்கான வாழ்க்கை ஓட்டம் என்பது முட்டைப் பருவத்திலிருந்தே ஆரம்பமாகி விடுகிறது.
இன்றைய இயந்திர உலகில் இயற்கையை இரசிப்பது அரிதாகிக்கொண்டே செல்கிறது. பறவைகள் வானில் பறப்பதை ரசிக்காமல் அவற்றை எப்படியெல்லாம் சமைத்துப் புசிக்கலாம் என்கின்ற சிந்தனையில் சில மனிதர்கள் மாறிவிட்டனர். இந்த நிலையை மாற்றிட இளைஞர்களிடையே பறவைகளால் மனிதர்களுக்கு ஏற்படும் நன்மைகளை எடுத்துக் கூறி நிறைய மரக்கன்றுகளை நட்டு, பறவைகள் பயமின்றி வாழ்ந்து மகிழ்வுடன் பறக்கும் சூழ்நிலைகளை நாம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். மனிதர்கள் இல்லா உலகில் பறவைகள் வாழும். ஆனால், பறவைகள் இல்லா உலகில் மனிதர் வாழ முடியாது என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து செயல்பட வேண்டும்.
மரங்களை வளர்ப்போம்!
குயில்களைப் பாதுகாப்போம்!<