கதை கேளு கதை கேளு : ஆரஞ்சு மாயத்தோட்டம்
![11](https://periyarpinju.com/wp-content/uploads/2025/01/11-1.jpg)
மாயாவிற்கு அந்தத் தோட்டத்தைப் பார்த்துவிட ஆசை. மாயாவின் கொள்ளுப் பாட்டியின் காலத்தில் இருந்தே இந்தத் தோட்டம் பற்றி நிறையக் கதைகள் உண்டு.
“ஆரஞ்சு மாயத் தோட்டம்.”
“ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே அந்தத் தோட்டத்துக்குள் நுழைய முடியும்.”
“இதுவரை யார் நுழைந்துள்ளனர், யார் வெளியே வந்துள்ளனர் என்று யாருக்கும் தெரியாது.”
“அது ஒரு மாயத் தோட்டம். உள்ளே அதிசயங்கள் நிறைந்திருக்கும்.”
ஆப்பிள், ஆரஞ்சு, கொய்யா போன்ற பழங்கள் கிடைக்கும். “அவை மிகவும் குட்டையான மரங்களாக இருக்கும்.”
“தோட்டத்திற்குள் ரொம்ப இருட்டாக இருக்கும்.”
“இலைகள் கீழே விழாது.”
“ஆங்காங்கே நீரோடைகள் இருக்கும்.”
“நீண்ட பாம்புகள் இருக்கும்.”
இப்படியாக ஒவ்வொருவரும் ஒரு செய்தி சொல்வார்கள். இவை எல்லாம் செய்திகள் அல்லது. கட்டுக்கதையாகவும் இருக்கலாம்.
தோ… ட்… ட… ம் என எழுத்துக்கூட்டி தோட்டம் என எழுதியதைப் படித்தால் அங்கே நின்றிடுவாள் மாயா. மூன்றாம் வகுப்பில் படிக்கின்றாள். மாயத்தோட்டமா அது என்று பார்ப்பாள். வெளியூர் சென்றாலும், பாட்டி ஊருக்குச் சென்றாலும் சித்தப்பா ஊருக்குச் சென்றாலும் இப்படித்தான் கவனிப்பாள். ஒருமுறை சித்தப்பா ஊருக்கு வந்திருந்தாள். தனியாக வீதியில் சுற்றிக்கொண்டு இருந்தாள். “தோ ட் ட ம்” என எழுத்துக்கூட்டி வாசித்தாள். கீழே என்னமோ இருந்தது. “மா – யா – இ – ங்கே – வா” என எழுதி அம்புக்குறி போடப்பட்டிருந்தது.
மாயா என்ற பெயரைப் பார்த்ததும் மாயாவிற்கு ஆச்சரியம். அம்புக்குறி போட்ட திசையைப் பார்த்தாள். அங்கே எதுவுமே தெரியவில்லை. ஓர் அடி உயரம் வளர்ந்த புற்கள் நிறைந்த புல்வெளி மட்டுமே இருந்தது. சரி போய்த்தான் பார்ப்போமே என நடந்தாள். சரியாக இரண்டு அடிகள் வைத்திருப்பாள். புற்கள் எல்லாம் குட்டியாக மாறின. ஒருவேளை தொட்டால்சிணுங்கி புற்களோ என நினைத்தாள். மேலும் மூன்று அடிகள் வைத்தாள். அவ்வளவுதான் ‘தொபக்கடீர்!’
எங்கோ விழுகின்றோம் என்று மட்டும் தெரிந்தது.
மாயா அந்த மாயத்தோட்டத்தில் விழுந்திருந்தாள். அடி எதுவும் படவில்லை. கண்ணில் ஏதோ சிக்கல் என நினைத்தாள். ஏனெனில், அது முழுக்க ஆரஞ்சு நிறத்தில் இருந்தது. அது ஆரஞ்சுப் பழத்தோட்டம். பழங்கள் மட்டுமல்ல, இலைகள், கிளைகள், நிலம் என எல்லாமே ஆரஞ்சு நிறத்தில் இருந்தன. அவள் இலைகள் மீதுதான் படுத்திருந்தாள். இலைகள் கீழே விழுந்து இருந்தாலும் எதுவும் காயவில்லை. மிகவும் இளசாக இருந்தன. எழுந்து மெல்ல நடந்தாள். கைக்கு எட்டும் தூரத்தில் ஆரஞ்சுகள் தொங்கியபடி இருந்தன. பறிக்கலாமா என யோசித்தாள். யோசித்த அடுத்த நொடியே ஓர் ஆரஞ்சுப் பழம் தலையாட்டியது.
அந்தப் பகுதி முழுக்க ஆரஞ்சுப் பழ வாசனை.
ஆமாம், ஆரஞ்சுப் பழத்தோட்டத்தில் ஆப்பிள் வாசனையா அடிக்கும்? ஆரஞ்சுப் பழத் தோலை உரித்ததும் வருமே அதே வாசனை. தலையாட்டிய பழத்தைப் பறித்தாள். எத்தனைச் சுளைகள் இருக்கின்றன என எண்ணினாள். “6 + 5. (ஆறு + அஞ்சு.) ஆரஞ்சு” எனச் சொல்லிச் சிரித்தாள். குடுகுடுவென இங்கும் அங்கும் ஓடினாள். தூரத்தில் திடீரென இரண்டு பறவைகள் பறந்தன. அவை பார்க்கப் புறாகள் போலவே இருந்தன. ஆனால் அவையும் ஆரஞ்சு நிறத்தில்தான் இருந்தன. இருபத்து ஒன்பது நிமிடங்கள் இப்படியே கடந்தாள். அப்போதுதான் தான் ஒரு மாயத்தோட்டத்தில் சிக்கி இருப்பது புரிந்தது.
எப்படி இங்கே இருந்து தப்பிப்பது? வீட்டிற்குப் போகவேண்டும்; சித்தப்பா சித்தி தேடுவார்கள் என்று பயந்தாள். ஆனாலும் மாயத்தோட்டத்தை முழுவதுமாக ஆராய வேண்டும். இரண்டு மனதாக இருந்தது. எங்காவது அம்புக்குறி போட்டு வெளியே போக வழி போட்டிருக்கா எனத் தேடினாள். புல் ஏதாவது இருக்கா அதில் கால் வைத்தாள் வெளியே சென்றிடலாமா எனத் தேடினாள்.
“மாயா ஊரில் இருந்து வந்துவிட்டாளா அத்தை?” என்ற குரல் கேட்டது. இது ஜெஸ்ஸியின் குரல்தான். ஆனால், ஜெஸ்ஸி தன் ஊரில் அல்லவா வசிக்கின்றாள். அவள் எப்படி இந்தத் தோட்டத்திற்குள்? குரல் வந்த திசையைத் தேடினாள் மாயா. மீண்டும் அதே சொற்கள். “மாயா ஊரிலிருந்து வந்துவிட்டாளா அத்தை?” ஜெஸ்ஸியேதான். ஒரு மரத்திற்குப் பின்னால் இருந்து வந்தது. ஆனால், மரத்தைச் சுற்றிச் சுற்றி வந்தாள். எங்கும் ஜெஸ்ஸியைக் காணவில்லை. மீண்டும் ஜெஸ்ஸியின் குரல். மரத்தின் ஒரு பொந்திலிருந்து இப்போது தெளிவாகக் கேட்டது. பொந்துக்குள் பார்த்தாள். அந்தப் பொந்தில் ஒரு காட்சி தெரிந்தது. சித்தப்பா வீடு 91 கிலோமீட்டர் தள்ளி இருந்தது. ஆனால், அந்தப் பொந்தில் இருந்து மாயாவின் வீடு தெரிந்தது. வாசலில் ஜெஸ்ஸி நின்றுகொண்டு இருந்தாள்.
ஜெஸ்ஸிக்கு அருகே அவள் வளர்க்கும் ஓகி ஒட்டகச் சிவிங்கி இருந்தது.
“ஜெஸ்ஸி, நான் இங்க ஆரஞ்சு மாயத்தோட்டத்தில் சிக்கி இருக்கேன்” என்று கத்தினாள். ஆனால், ஜெஸ்ஸிக்கு எதுவும் கேட்கவில்லை. மாயாவின் அம்மாவிடம் பேசிவிட்டுக் கிளம்பினாள். அவளுடன் வந்த ஒட்டகச் சிவிங்கி மட்டும் மாயாவை நோக்கி வருவது போல தெரிந்தது. மாயா பயந்துவிட்டாள். கொஞ்சம் நகர்ந்ததும் அந்தப் பொந்தில் ஓர் ஆரஞ்சுப் பழம் மட்டும் இருந்தது. அவள் வீட்டினைப் பார்க்க முடியவில்லை.
மாயாவின் கழுத்தில் ஒரு பை இருந்தது. சித்தப்பா வீட்டிலிருந்து கிளம்பும்போதே மாட்டி இருந்தாள். அந்தத் தோட்டத்தில் இருந்த வித்தியாசமான பழங்களை எல்லாம் பறித்துப் போட்டுக்கொண்டாள். முக்கோண வடிவில் ஒரு பிரமிட் போன்ற தோற்றித்தில் ஒரு மரத்தில் ஆரஞ்சுப் பழம் தொங்கிக்கொண்டு இருந்தது. கனச்சதுர வடிவில் ஒரு பழம் இருந்தது. ஒரு மரத்தில் இலைகளே இல்லை; வெறும் பழங்கள் மட்டும் ஆங்காங்கே தொங்கிக்கொண்டு இருந்தன. அதில் ஒரு பழத்தைப் பறித்ததும் அந்த மரம் திடீரெனச் சுருங்கி 11 செண்டிமீட்டர் செடியாக மாறிவிட்டது.
தாகம் எடுத்தது. அப்போது ஒரு மரத்திலிருந்து நீர் போல ஊற்றிக்கொண்டு இருந்ததைக் கவனித்தாள். அது ஆரஞ்சுப் பழச்சாறு. கையில் பிடித்துக் குடித்தாள். குடித்ததுமே அந்த மரம் 29 அடி உயரத்திற்கு வளர்ந்தது. ஆ! என வாய்பிளந்தாள். மரத்தின் உச்சியிலிருந்து ஒரு சொட்டு ஆரஞ்சுப் பழச்சாறு அவள் வாய்க்குள் விழுந்தது.
பையில் மொத்தமாக 23 பழங்கள் இருந்தன. வெளியே செல்ல வழி எதுவும் தென்படவில்லை. வழிகாட்டிகளோ அம்புக்குறிகளோ தெரியவில்லை. சோர்ந்து ஒரு மரத்தின் கீழே அமர்ந்தாள். உறங்கிவிட்டாள்.
மாயா, நீ எப்ப ஊரிலிருந்து வந்த? உன் மேல என்ன இவ்வளவு ஆரஞ்சுப் பழ வாசனை?” என்று சொல்லியவாறு அம்மா எழுப்பினார். மாயா தன் வீட்டு மொட்டைமாடியில் அமர்ந்து இருந்தாள். அதே உடை. அதே பை. எப்படி மாயத்தோட்டத்திலிருந்து இங்கே வந்தேன்? கனவா? தன் பைக்குள் கைவிட்டு ஆரஞ்சுப் பழங்கள் இருக்கா என்று பார்த்தாள். ஆமாம் 23 பழங்கள் இருந்தன. ஆனால், அதன் அளவு மிக மிகச் சிறியதாக ஒரு சொப்பு போல மாறி இருந்தது.
“சித்தப்பா சித்திகிட்ட சொன்னியா?” என அம்மா பதறினார்.
கீழே ஏதோ சத்தம் வரவே இருவரும் கீழே இறங்கினார்கள். ஜெஸ்ஸி தன் ஒட்டகச்சிவிங்கி ஓகியுடன் வந்திருந்தாள். “நீயும் ஓகியும் வந்து போனதைப் பார்த்தேன் ஜெஸ்ஸி” என ஓடிவந்தாள் மாயா. “நாங்க வந்தோமா? மாயா உனக்கு ஒரு ரகசியம் சொல்லணும். என்னை இந்த ஓகி ஒரு மாயத்தோட்டத்திற்குக் கூட்டிச் சென்றது. ஆரஞ்சு மாயத்தோட்டம். இதோ பாரு ஸ்டார் வடிவத்தில் ஆரஞ்சுப் பழம்” என்று நீட்டினாள். தன் பையிலிருந்து மாயா அந்த பிரமிட் ஆரஞ்சை நீட்டினாள். இருவரும் சிரித்துக்கொண்டனர். ‘ஈ’ என வாயைத்திறந்து ஓகி சிரித்துக்கொண்டு இருந்தது.
(தூக்கம் கலைஞ்சிடுச்சா?)