அடேயப்பா…! – 11: உடலுக்குள் ஒரு பயணம்
ஒரு சிறிய சில்லு உங்கள் உடலை உரசிச் சென்றால் எப்படி உணர்வீர்கள்? காதொலிப்பான்களை மாட்டிக்கொண்டு பாடல் கேட்கும் போது உங்கள் காதுகளுக்குள் என்ன நிகழும்? உங்கள் மொத்த உடலின் கட்டுப்பாட்டு மையம் எங்கு உள்ளது? உங்கள் உடலுக்குள் பயணித்தால் எப்படி இருக்கும்? அதுபோன்ற அனுபவத்தைத் தருவதுதான் உடல் அருங்காட்சியகம்.
நமது தனித்துவமிக்க உடல் எவ்வாறு செயல்படுகிறது என்பதை தொட்டுப்பார்த்து, உணர்ந்து இவைகளைப் பற்றிய ஆழமான புரிதலை ஏற்படுத்தும் ஓர் உணர்ச்சியைத் தூண்டும் அனுபவமே Corpus Experience என்றழைக்கக்கூடிய “மனித உடல் வழியாக பயணம்” என்ற அற்புதமான அனுபவம்!
இதைப் பற்றி மேலும் விரிவாகக் காண்போம் வாருங்கள்!
மனித உடலின் கால் பாதம் வழியாக நீங்கள் உள்ளே நுழைந்து சிறுநீரகங்கள், செரிமான மண்டலம், கல்லீரல், நுரையீரல், இதயம் என உடல் உள்ளுறுப்புகள் ஒவ்வொன்றையும் தொட்டு உணர்ந்து பார்த்துவிட்டு அப்படியே மேலே ஏறி மூளை வழியாக வெளியே வந்தால் எப்படி இருக்கும்? இதுதான் கார்பஸ் அருங்காட்சியகம்.
அசையாமல் அமர்ந்திருக்கும் மனித உருவத்தின் உறுதியான தோற்றத்திற்குப் பின்னால் கூட ஒரு தனித்துவம் உள்ளது என்பதையும், மனித உடலின் அதிசயங்கள், ஒவ்வொருவருக்குமான தனித்துவங்கள் மற்றும் உடலை எவ்வாறு நன்றாக கவனித்துக்கொள்வது என்பதைப் பற்றியும் கார்பஸ் அருங்காட்சியகம் தன் பார்வையாளர்களுக்கு விவரிக்கின்றது.
மேலும், கார்பஸ் அருங்காட்சியகம் தனது பார்வையாளர்களை உடற்பயிற்சி செய்ய ஊக்குவிக்கிறது; அவர்களைப் பொறுப்புடன் சாப்பிடத் தூண்டுகிறது; ஆரோக்கியமான வாழ்க்கை வாழ ஊக்குவிக்கிறது. அனைவரும் உடலமைப்பில் ஒரே மாதிரியானவர்கள் ஆனால் இயல்பில், தனித்துவமானவர்கள் என்பதை அவர்களுக்கு உணர்த்துகிறது.
ஆரோக்கியமான உடல் அனைவருக்கும் அவசியம், இதில் அறிவு முக்கிய பங்கு வகிக்கிறது எனவும் விவரிக்கிறது.
“உடல் அருங்காட்சியகம்” எனவும் அழைக்கப்படும் இது நெதர்லாந்தில் லைடனுக்கு அருகிலுள்ள ஓக்ஸ்ட்ஜீஸ்டில் அமைந்துள்ளது.
2008 மார்ச் 14இல் ஹென்றி ரெம்மர்ஸின் தனித்துவம் மிக்க யோசனையுடன், இராணி பீட்ரிக்சால் திறக்கப்பட்ட இந்த கார்பஸ் அருங்காட்சியகம் இந்த வகையிலான உலகின் முதல் அருங்காட்சியகம் எனும் தனித்துவத்துடனேயே திகழ்கிறது.