ஏவுகணை எனும் போர் ஆயுதம்
தமிழ்: அப்பா! எங்கள் ஆசிரியர் ஏவுகணை எனும் புராஜக்ட் கொடுத்திருக்கிறார். அதைப் பற்றி விளக்கிச் சொல்லுங்கள் அப்பா!
தந்தை: உட்காரு இப்படி. ஒரு குறிப்புப் புத்தகம் எடுத்து வைத்துக்கொள். ஏவுகணைதானே, பிரமாதம், தகவல்களைக் கொட்டி ஜமாய்த்திடுவோம்.
தமிழ்: அப்பானா, செல்ல அப்பாதான். இதோ குறிப்புப் புத்தகம், எழுதுகோல். நான் தயார். அம்மா, நீங்க சூடான உணவு பண்ணுங்க. இதை முடிச்சிட்டு நானும் அப்பாவும் கிளம்புறோம். எனக்கு முதல் சந்தேகமே இராக்கெட்டும், ஏவுகணையும் ஒன்றா, இரண்டும் வேறு வேறா என்பதுதான்.
தந்தை: இரண்டும் வேறு வேறு. இராக்கெட் என்பது இராக்கெட் இயக்கத் தத்துவ அடிப்படையில் இயங்கும் ஒரு வாகனம். ஆனால், ஏவுகணை (missile) என்பது ஓர் ஆயுதம். எனவேதான் செயற்கைக்கோளை வானில் செலுத்தப் பயன்படுத்தும் இராக்கெட் ஆனது. அனேக வேளைகளில் செயற்கைக்கோள் செலுத்து வாகனம் (Satellite Launching Vehicle) அல்லது பூஸ்டர் என்று குறிப்பிடப்படுகிறது.
தமிழ்: ஓ! அதுதான் எஸ்.எஸ்.வி 1 , எஸ்.எல்.வி 2 என்றெல்லாம் பெயர் கொடுத்திருக்கிறார்களோ. இவ்வளவு நாளும் எஸ்.எல்.வி. என்பதற்கு விரிவு தெரிந்து கொண்டதில்லை. ஏவுகணைகள் யாவை?
தந்தை: ஓரிடத்தில் இருந்தபடி செலுத்தினால் எதிரியின் போர்விமானம், போர்க்கப்பல்கள், இராணுவ டாங்கி ஆகிய போர்ச் சாதனங்களை அல்லது எதிரி நாட்டின் படைத்தளங்களை அல்லது நகரங்களை போரில் தாக்கி அழிக்கிற போர் ஆயுதத்தை ஏவுகணை என்று கூறலாம். .
எந்த இலக்கைத் தாக்க வேண்டும் என்பதைப் பொறுத்து ஏவுகணை வடிவிலும் அளவிலும் திறனிலும் வேறுபடுகின்றன. சிறிய ஏவுகணைகள் சில கி.மீ. தொலைவு சென்று பறந்து தாக்கும் திறனுடையவை. எதிரியின் போர் விமானம், போர்க்கப்பல்கள், டாங்கி முதலிய போர்ச் சாதனங்களைத் தாக்குகின்ற ஏவுகணைகள் இந்த ரகத்தைச் சேர்ந்தவை.
தமிழ்: ஏவுகணைகளில் வேறுபாடுகள் உண்டா?
தந்தை: உண்டு. விமான எதிர்ப்பு ஏவுகணை, டாங்கி எதிர்ப்பு ஏவுகணை, கப்பல் எதிர்ப்பு ஏவுகணை என்று பலவகைப்படுத்தப் பட்டுள்ளன. இவ்வகை ஏவுகணைகள் தரையிலிருந்து செலுத்தப்படுபவையாக இருக்கலாம்.
தமிழ்: ஆனால் எதிரியின் விமானம், போர்க்கப்பல் அல்லது டாங்கிகள் நிலையாக ஓரிடத்தில் நிற்பவை அல்ல. வேகமாகச் சென்று கொண்டிருப்பவை. வேகமாகச் செல்லும் இவைகளை இலக்காக வைத்து ஏவுகணைத் தாக்க முடிகிறது.
தந்தை: சரியான கேள்வி. உதாரணமாக, எதிரியின் போர் விமானம் மணிக்குக் குறைந்த அளவு 1000க்கும் மேற்பட்ட கி.மீ. வேகத்தில் பறந்து செல்லக்கூடும. அவ்விதம் பயங்கர வேகத்தில் செல்லும் எதிரி விமானத்தைத் தாக்க ஏவுகணைகளில் சிறப்பான கருவிகள் அமைக்கின்றனர். எஞ்சின் இல்லாமல் விமானம் இயங்க இயலாது. அவ்வாறு இயங்குகையில் விமானத்தின் பின்புறத்தில் சூடான புகை வெளிப்படுகிறது. இந்த வெப்பத்தை மோப்பம் பிடித்துச் செல்வதற்கு விமான எதிர்ப்பு ஏவுகணையில் குறிப்பிட்ட கரு உள்ளதால் அது விமானத்தின் சூடான புகை வெளிவரும் பாதையைப் பற்றிக்கொண்டு எதிரி விமானத்தைவிட அதிக வேகத்தில் பறந்து சென்று, துரத்தித் தாக்குகிறது.
தமிழ்: விமானம் திசையை மாற்றினால் ஏவுகணை பலனின்றிப் போய்விடுமே.
தந்தை: சில விமான எதிர்ப்பு ஏவுகணைகளில் அந்த ஏவுகணையைச் செலுத்திய கருவி அனுப்பும் ஆணைகளுக்கு ஏற்பத் திசை மாற்றும் கருவிகளும் உள்ளன. ஏவுகணை வருவதை ரேடார் காட்டிவிடும் என்பதால் ரேடாரின் பார்வையில் படாமல் தாழ்வாகப் பறந்து சென்று தாக்கும் ஏவுகணைகளும் உள்ளன.
தமிழ்: நான் ஏவுகணை என்றால் ஏதோ போர் அடிக்கும் என்றேன். நீங்கள் சொல்லும் செய்திகள் சுவையாக இருக்கின்றன. மேலும், மேலும் கேட்க வேண்டும் என்னும் ஆவல் பெருகுகிறது. ஏவுகணைகளில் எத்தனை வகைகள் உள்ளன?
தந்தை: எதிரி விமானத்தைத் தரையிலிருந்து புறப்பட்டுத் தாக்கும் ஏவுகணைகள், விமானத்திலிருந்து புறப்பட்டு எதிரி விமானத்தைத் தாக்குகிற ஏவுகணைகள் என இரு வகைகள் உள்ளன. எதிரிப் பகுதியில் உள்ள துறைமுகம், விமான தளம் ஆகிய இலக்குகளைத் தாக்கவல்ல ஏவுகணைகளும் உள்ளன. இப்பணிக்கு விமானத்திலிருந்து புறப்பட்டுச் சென்று தாக்கும் ஏவுகணைகளும் பயன்படுத்தப்படுவது உண்டு.
தமிழ்: அய்.ஆர்.பி.எம்., அய்.சி.பி.எம். என்று குறிப்பிடுகிறார்களே, அவையும் ஏவுகணைகளா?
தந்தை: அய்.ஆர்.பி.எம். என்பதற்கு Intermediate Range Ballistic Missile என்று கூறுவர். கண்டம் விட்டுக் கண்டம் சுமார் 6,000 மைல் சென்று தாக்கும் ஏவுகணைகளை அய்.சி.பி.எம். Inter-Continental Ballistic Missile என்று கூறுவர். கண்டம் விட்டுக் கண்டம் பாயும் அணு ஆயுத ஏவுகணைகள் பிரம்மாண்ட வடிவின. இதன் நீளம் 60 அடி இருக்கும். ஏவுகணைகளிலேயே இவைதான் பேரழிவு ஏற்படுத்து பவை. பெரிய வல்லரசுகள்தாம் அய்.ஆர்.பி.எம்., அய்.சி.பி.எம். வகை ஏவுகணைகளை நிறையத் தயாரித்து வைத்துள்ளனர். பேரழிவை ஏற்படுத்தக்கூடிய அணு ஆயுதங்களை முகப்பில் கொண்ட இராட்சத ஏவுகணைகளைத் தற்காப்பு ஆயுதங்கள் எனலாம்.
தமிழ்: அப்படியானால் தாக்குதல் ரக ஆயுதங்களும் இருக்கின்றன என்று சொல்லலாம் அல்லவா?
தந்தை: குறைவான அழிப்புத் திறன் கொண்ட, குறிப்பிட்ட போர்ச் சாதனத்தை மட்டுமே அழிக்க, சிறிய ஏவுகணை களைத் தாக்குதல் ரக ஆயுதங்கள் எனலாம். விமான எதிர்ப்பு ஏவுகணை, டாங்கி எதிர்ப்பு ஏவுகணை, கப்பல் எதிர்ப்பு ஏவுகணை முதலிய சாதாரண குண்டுகளை அல்லது வெடி மருந்தை முகப்பில் கொண்ட ஏவுகணைகள் ஆங்காங்கு நடந்துள்ள போர்களில் சர்வ சாதாரணமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆகத் தரையிலிருந்து சென்று எதிரியின் பகுதிக்குச் சென்று தாக்கும் ஏவுகணைகள் பொதுவில் அளவில் பெரியவை. இவ்வித ஏவுகணைகளில் சாதாரண வெடிகுண்டுகளைத் தாங்கிச் செல்கின்ற ஏவுகணைகள் நடுத்தர அளவில் உள்ளன.
தாய்: என்ன, ஏவுகணை பற்றியெல்லாம் பேசி முடிச்சாச்சா. உணவு தயார்.
தந்தை: பொறு, பொறு இன்னும் சில தகவல்கள் இருக்கு. அதைப் பரிமாறிக் கொள்கிறோம். அப்புறம் உன் உணவு பரிமாறலாம்.
தமிழ்: செயற்கைக்கோளை வானில் செலுத்தும் இராக்கெட்டை அய்.சி.பி.எம். போன்ற இராட்சத போர் ஆயுதமாக மாற்றமுடியுமா?
தந்தை: அவ்வாறு போர் ஆயுதமாக நீ சொல்லும்படி மாற்ற அதிக நுட்பம் தேவை. அப்படி மாற்றுவதானால் ஏவுகணையின் முகப்பில் வைக்கப்படும் குண்டு, குறிப்பிட்ட இலக்கில் போய் விழும்படிச் செய்வதற்கான வழி அறியும் ஏற்பாடு Guide and System அந்த ஏவுகணையில் இடம் பெற்றாக வேண்டும். அய்.சி.பி.எம். ஏவுகணையால் உயரே கொண்டு செல்லப்படும் குண்டு அணு ஆயுதமாகவும் இருக்கலாம், நாம் உயரே தூக்கி எறிந்த கல் கீழே விழுவதைப்போல் கீழ்நோக்கி விழுகிறது.
தமிழ்: ஏவுகணையிலிருந்து பிரியும் குண்டைப் பற்றிச் சொல்லுங்கப்பா. தந்தை: பூமியிலிருந்து சுமார் 100 மைல்களுக்கு அதிகமான உயரத்தை எட்டியதும், ஏவுகணையின் முனையிலிருந்து பிரியும் குண்டானது மணிக்குச் சுமார் 16,000 மைல் வேகத்தில் தரை இலக்கை நோக்கிப் பாய்கையில் அது காற்று மண்டல உராய்வு காரணமாக ஏற்படும் மிகுந்த வெப்பத்தைத் தாங்கி நிற்கும் வகையில் இருக்க வேண்டும். இவ்வாறு அய்.சி.பி.எம்., அய்.ஆர்.பி.எம். ஆகிய ஏவுகணைத் தயாரிப்பதில் பல நுட்பப் பிரச்சினைகள் உள்ளன. சிறிய ஏவுகணைகள் முற்றிலும் வேறுபட்டவை. போதுமா ஏவுகணைகள் பற்றிய தகவல்கள்.
அம்மா: பரவாயில்லையே. உங்களை என்னமோ சாதாரணமா நினைச்சேன். ஏவுகணை பற்றி இவ்வளவு விவரம் ஞாபக சக்தியோடு சொல்வீர்களென்று நினைக்கலே. உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.
தந்தை: பரவாயில்லையே, நல்லதைப் பாராட்டுகிற நல்ல மனம் உன் அம்மாவிடம் இருக்கிறதே. இதுதான் நாகரிகம். சரி, பசிக்குது உன் உணவு இராக்கெட்டுகள், ஏவுகணைகள் தட்டில் வந்து விழட்டும்.
தமிழ்: ஏவுகணை பற்றி விளக்கிச் சொன்னதுக்கு நல்லதுப்பா. ஆனா, எனக்கென்னமோ இந்த ஏவுகணைகளைப் பயன்படுத்தி போர் செய்யவேண்டாமேன்னு தோணுது. போர்னாலே மனிதர்களைக் கொல்றது தானே…அது வேண்டாமே…
– பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன்