நினைவில் நிறுத்துவோம்: வினா எழுப்புங்கள்! விளக்கம் பெறுங்கள்!
வெனவு தெரிந்த நாள் முதல்”, “நினைவு தெரிந்த நாள் முதல்” என்று பிறர் சொல்லக் கேள்விப்படிருப்பீர்கள். ஆனால், இந்த இரண்டு சொற்றொடரும் சரியல்ல. சரியான சொற்றொடர், “வினவத் தெரிந்த நாள் முதல்” என்பதேயாகும்.
வினவுதல் என்றால் வினா எழுப்புதல், கேள்வி கேட்டல் என்று பொருள். பிள்ளை பிறந்து பேசத் தொடங்கியதும் அது என்ன? இது என்ன? ஏன் எப்படி? அது எப்படி? என்று அடுக்கடுக்காய் கேள்விகளைக் கேட்கும்.
விவரம் தெரிந்த, பொறுப்புள்ள பெற்றோர் பிள்ளைகள் கேட்கும் கேள்விக்குப் பொறுமையாக, பிள்ளைகள் விளங்கிக் கொள்ளும்படி விளக்கம் அளிப்பர். அவ்வாறு வினா எழுப்புவதைப் பாராட்டுவர்.
பிறந்து பேசத் தெரிந்த குழந்தைக்கு உலகில் எல்லாமும் புதிது. எனவே, ஒவ்வொன்றைப் பற்றியும் தெரிந்துகொள்ள அவர்கள் ஆர்வம் காட்டுவர். அந்த ஆர்வத்தை மேலும் ஊக்குவிக்கும்படி பெரியவர்கள் பதில் தர வேண்டும்.
சில பெற்றோர் பிள்ளைகள் தொடர்ந்து கேள்விகள் கேட்கும்போது, கடுப்பாகி, “சும்மா இருக்கியா, தொண தொணன்னு அரிக்காதே! என்பர். இப்படிக் கூறுவது முற்றிலும் தவறு. இது பிள்ளைகளின் அறிவாற்றலை, அறிவு விரிவை, அறியும் ஆர்வத்தைத் தடுத்துவிடும்.
பிள்ளைகளுக்குச் சரியான விளக்கம் கிடைக்கவில்லையென்றால், அது பற்றிய குழப்பம் இருக்கும். குழப்பம் தெளிவின்மையை உருவாக்கும். தெளிவின்மை அவர்களின் சிந்தனைத் திறனைப் பாதிக்கும்.
எனவே, பெற்றோரும், பெரியவர்களும், ஆசிரியர்களும் பிள்ளைகள் எழுப்பும் வினாக்களுக்கு நிதானமாக, புரியும் படி விளக்கம் தர வேண்டும். பெறப்படும் விளக்கம் மேலும் பல கேள்விகளைப் பிள்ளைகளின் உள்ளத்தில் உருவாக்கும். எனவே, பிள்ளைகள் தொடர்ந்து வினா எழுப்புவர்.
தெரிந்தவற்றைத் தெளிவாகச் சொல்ல வேண்டும். தெரியவில்லையென்றால் தெரிந்து சொல்கிறேன் என்று உண்மையைக் கூறிவிட வேண்டும். இதில் கௌரவப் பிரச்சினை ஏதும் இல்லை. நல்ல பெற்றோரும் ஆசிரியரும் தெரியாதவற்றை, “தெரியவில்லை, தெரிந்து வந்து சொல்கிறேன்” என்பர்.
எல்லாம் தெரிந்தவர்கள் உலகில் எவரும் இல்லை. எனவே தெரியவில்லையென்பது கேவலம் அல்ல. தெரியாதவற்றைத் தப்பாகக் கூறுவது தான் கேவலம். பிள்ளைகளுக்கு விளக்கம் அளிக்கும்போது தப்பான விளக்கங்களை கூறக்கூடாது.
பிள்ளைப் பருவத்தில் ஒவ்வொன்றையும் தெரிந்து கொள்ள வினா எழுப்பும் பிள்ளைகள், வயது கூடக்கூட ஆய்வு அடிப்படையில் வினா எழுப்புவர். அப்போது கற்றவர்கள் சரியான விளக்கங்களைத் தந்தால் பிள்ளைகள் சிந்தனைத் திறனும், ஆய்வுத் திறனும் உடையவர்களாய் இருப்பர்.
படிக்கின்ற பிள்ளைகள் ஆசிரியர்களிடம் நிறைய கேள்வி கேட்க வேண்டும். ஆசிரியர்கள் மாணவர்களைப் பார்த்து கேள்வி கேட்பதற்கு மாறாய், மாணவர்கள் ஆசிரியரைப் பார்த்து அதிகம் கேள்வி கேட்கும் வாய்ப்பை உருவாக்க வேண்டும்.
வினாக்களைக் கேட்டு, விளக்கங்களைப் பெறப் பெற அறிவு வளரும், விரியும். தெளிவும், சிந்தனையும் உருவாகும். பிள்ளைகளின் படைப்பாற்றல் வளரும். வினா என்பது பசி போன்றது. பசிக்கு தீர்வு உணவு. அது போல் வினாக்களுக்கு விளக்கங்களே தீனி பசியின் பொருட்டு உண்ண உண்ண உடல் வளரும். வினாக்களுக்குப் பெறப்படும் விளக்கங்களால் ஆளுமை, தன்னம்பிக்கை, துணிவு வளரும்.
நான் புதுமுக வகுப்பு (P.U.C) படிக்கும் போது எனது பேராசிரியரிடம் ஒரு கேள்வி கேட்டேன். “அய்யா நெருப்பைப் பற்ற வைத்தால் அது ஏன் மேல் நோக்கி எரிகிறது?” என்றேன்.
பேராசிரியர் திகைத்து நின்றுவிட்டார். உடனே அவர் நிலையைப் புரிந்துக் கொண்டு, “அய்யா எனக்கு ஒரு காரணம் தோன்றுகிறது. அதைச் சொல்லட்டுமா?” என்றேன். பேராசிரியர் “சொல்லு தம்பி” என்றார். “புவி ஈர்ப்பு விசை கீழ் நோக்கி இழுப்பதால் உராய்வு அடிப்படையில் அதன் எதிர் திசையில் நெருப்பு செல்கிறது என்று எண்ணுகிறேன்” என்றேன்.
பேராசிரியருக்கு அது சரியான காரணமா? என்று தெரியவில்லை. நான் சொன்ன காரணம் சரியா என்று எனக்கு உறுதியாகவில்லை என்றாலும் என்னுள் எழுந்த வினாவையும் (அய்யத்தையும்), எனக்குத் தோன்றிய விளக்கத்தையும் கூறிவிட்டேன்.
உள்ளத்தில் எழும் அய்யங்களுக்கு விளக்கம் பெறாமல் மூடி மூடி வைத்தால், அறியாமை மிகுமே தவிர அறிவு வளராது. எனவே, நம் அறிவை வளர்க்க, பெருக்க அறிந்தவர்களிடம் வினாக்களை அதிகம் எழுப்பி விளக்கம் பெற வேண்டும். வினா எழுப்புவது படிப்பு சார்ந்தவற்றில் மட்டும் என்று இருந்து விடக் கூடாது. எல்லாவற்றிலும் வினா எழுப்ப வேண்டும் கிரேக்கத் தத்துவ ஞானி சாக்ரடீசும், தந்தை பெரியாரும் பெரிதும் வலியுறுத்தியது இதைத்தான்.
தெரியாததைத் தெரிந்து கொள்ள மட்டுமல்லாமல், உரிமைகளைப் பெறவும், உண்மைகளைக் கண்டறியவும், ஆதிக்கம் அழிக்கவும், சமத்துவம் நிலைக்கவும் கேள்விகள் கேட்கப்பட வேண்டியது கட்டாயம்.
‘நான் உயர்ந்தவன், நீ தாழ்ந்தவன்’ என்றால், ‘ஏன்? எப்படி? எதற்காக?’ என்று வினா எழுப்ப வேண்டும். காரணம் இன்றி எதையும் ஏற்கக்கூடாது.
“உனக்கு படிப்பு வராது, எனக்குத்தான் படிப்பு வரும். உன்னை விட எனக்குத்தான் அறிவு அதிகம்” என்று எவனாவது சொன்னால் அவனை “நோக்கி, ஏன்? எப்படி? எதற்காக?” என்று கேள்வி எழுப்ப வேண்டும்.
“நம் வாழ்வை, தலைவிதியைக் கடவுள் தீர்மானிக்கிறார்” என்றால், “எது கடவுள்? எங்கே இருக்கிறது? அக்கடவுளை யார் படைத்தார்?” என்று அடுக்கடுக்காய் வினா எழுப்பி விளக்கம் கேட்க வேண்டும். விளக்கம் தராமல் ‘நம்பு’ என்று கூறுவார்களானால் அதை ஏற்கக் கூடாது.
“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.”
அதற்கு வினா எழுப்புங்கள்! விளக்கம் பெறுங்கள். உரிய விளக்கமும், காரணமும், உறுதிப்பாடும் இன்றி எதையும் நம்பக் கூடாது, ஏற்கக் கூடாது. அதுவே அறிவுக்கு உகந்த வாழ்வு!