மாமா போட்ட புதிர்
முகிலின் மாமா ஊரிலிருந்து வந்திருந்தார். அந்த ஞாயிற்றுக்கிழமை தனது பிறந்த நாள் என்பதால் தனது நண்பர்கள் இலக்கியன், அன்பழகன், அன்புச் செல்வனை வீட்டிற்கு அழைத்திருந்தான் முகில். அழைப்பினை ஏற்ற நண்பர்கள் மாலையில் முகிலின் வீட்டிற்கு வந்தனர். பிறந்தநாள் கொண்டாட்டம் முடிந்ததும் முகிலின் மாமா, நண்பர்கள் மூவரிடமும் பேச்சுக் கொடுத்தார். சிறிது நேரம் பொது அறிவு பற்றி உரையாடினர். பரவாயில்லை, நிறைய விசயங்களைத் தெரிந்து வைத்துள்ளீர்களே என்று பாராட்டினார். பின்பு, குழந்தைகளா இப்போது உங்கள் மூளைக்கு வேலை கொடுத்து நான் கேட்கப்போகும் கேள்விகளுக்குச் சிந்தித்துப் பதில் சொல்வீர்களா என்று கேட்டார்.
சொல்லுங்கள் சொல்லுங்கள், உங்கள் கேள்விகளுக்குப் பதில் சொல்கிறோம் என ஆர்வமுடன் கேட்டனர் நண்பர்கள். குழந்தைகளின் ஆர்வத்தை வரவேற்ற மாமா, கண்ணுக்குத் தெரியாமல் நம் மீது வீசும் காற்றை உங்கள் கையில் பிடித்துக் கொண்டு வந்து, அதை அனைவரும் பார்க்கும்படிக் காட்ட வேண்டும். எங்கே காட்டுங்கள் பார்ப்போம் என்றார்.
நண்பர்கள் தனித்தனியாகச் சென்று சிந்தித்துக் கொண்டிருந்தபோது நான் சொல்கிறேன் என ஓடி வந்தான் அன்புச் செல்வன்.
கையில் வைத்திருந்த பலூனை உயர்த்திக் காட்டி, இந்தப் பலூனின் உள்ளே கண்ணுக்குத் தெரியாத காற்று உள்ளது. வீசும்போது நாம் உணரும் காற்றினை, தற்போது சிறைப்படுத்தி என் கையில் பிடித்து வந்துள்ளேன் பாருங்கள் என்றான். சபாஷ், சரியாகக் காட்டினாய் அன்பு. பாராட்டுகள் என்று கூறி, எழுதுகோல் ஒன்றினைக் கொடுத்தார் மாமா.
அடுத்த கேள்வி, கடந்த காலத்தையும், நிகழ்காலத்தையும் ஒரே இடத்தில் ஒரே பொருளில் ஒரே நேரத்தில் ஒன்றாகக் காட்சியளிக்கும்படிச் செய்ய வேண்டும் என்றார்.
யோசித்துக் கொண்டிருந்த நண்பர்களுள் முகில் வேகமாக வெளியில் ஓடிச்சென்று சிறிது நேரத்தில் வீட்டிற்குள் வந்தான்.
தன் கையிலிருந்த குச்சி அய்சைத் தூக்கிக் காட்டி, இதோ பாருங்கள், தண்ணீரின் இறந்த காலம் – நிகழ்காலம் என்ற இரண்டும் அய்ஸ் என்ற வடிவத்தில் உள்ளது. அது இந்தச் குச்சியில் உள்ளது. அதே நேரத்தில் குச்சியிலிருந்து தண்ணீர் வடிந்து கொண்டுள்ளது. இது நிகழ்காலம். கடந்த காலமும் நிகழ்காலமும் ஒரே சமயத்தில் ஒரே பொருளில் ஒரே நேரத்தில் ஒன்றாகக் காட்சியளிக்கும் பொருள் இதுவே என்றான். பாராட்டிய மாமா எழுதுகோலினை முகிலுக்கும் கொடுத்தார்.
ஜொலிக்கும் நெருப்பை, ஒரு காகிதத்தால் மூடிக்கொண்டு அதையும் உங்கள் உள்ளங்கையில் ஏந்திக் காட்ட வேண்டும் என்றார். உடனே இலக்கியன், பிறந்த நாள் கொண்டாடிய அறைக்குள் ஓடிச் சென்று சில வண்ணக் காகிதங்களை வெட்டி எடுத்து குடைபோலச் செய்தான். கையில் மெழுகுவர்த்தியுடன் வெளியில் வந்து இங்கே வாருங்கள், செய்து காட்டுகிறேன் என்று அனைவ ரையும் வாசலுக்கு அழைத்துச் சென்றான்.
காகிதக் குடைக்கடியில் ஒரு குழியை ஏற்படுத்தி மெழுகுவர்த்தியை ஏற்றினான். மென்மையாக ஒளியைப் பாய்ச்சியபடி எரிந்து கொண்டிருந்தது மெழுகுவர்த்தி. அந்த ஒளியில் வண்ணக் காகிதங்கள் ஜொலித்தன. அதன்மீது கையை வைத்து, இப்போது ஜொலிக்கும் நெருப்பினை என் உள்ளங்கையில் ஏந்தியுள்ளேன், காகிதத்தால் மூடியும் உள்ளேன் என்றதும், மாமா பரிசு கொடுத்துப் பாராட்டினார்.
அடுத்த கேள்வி இலக்கியனுக்கு என்று கூறி, ஆகாயத்தில் உள்ள நிலாவினை பூமியில் இருந்தபடியே – இருந்த இடத்திலிருந்தபடியே நடுநடுங்கச் செய்ய வேண்டும் என்றார் மாமா.
மாமா, விடை கண்டுபிடித்து விட்டேன். நிலா வரட்டும். நடுங்க வைக்கிறேன் என்றான் இலக்கியன். நிலவும் வந்தது. வட்ட வடிவ வெள்ளித் தட்டில் நீர் நிரப்பி வைத்தான். நிலவின் பிம்பம் அதில் தெரிந்தது. தண்ணீரைத் தனது கைகளால் துழாவினான். பிம்பம் கலங்கி அசைந்து பல கூறுகளாக மாறியது. பாராட்டிய மாமா பரிசு கொடுத்தார். – குறள்மொழி