ஓவியம் வரையலாம், வாங்க! : மாம்பழம்
மாம்பழங்கள் வடகிழக்கு இந்தியப் பகுதியில் விளைந்து பரவியதாக அறியப்படுகின்றன. உலகம் முழுவதும் மா மரங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. மாம்பழங்கள் பொதுவாக வெளிர் மஞ்சள் தங்க நிறம் அல்லது பச்சை மற்றும் இளஞ்சிவப்பு கலந்த நிறத்தில் காணப்படுகின்றன.
இந்தியாவின் தேசியப் பழமாக மாம்பழம் உள்ளது. மாம்பழத்தில் வைட்டமின் ‘சி’, வைட்டமின் ‘ஏ’ சத்துகள் உள்ளதால் சிறந்த நோய் எதிர்ப்பு ஆற்றலையும், செரிமான ஆற்றலையும் கொடுக்கிறது. மா, பலா, வாழை ஆகியவை தமிழ் இலக்கியத்தில் முக் கனிகள் என அறியப்படுகின்றன.
மாம்பழம் சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி உண்ணும் பழமாகும். இத்தகைய சிறப்பு மிக்க மாங்கனியை எவ்வாறு ஆங்கில எழுத்தைக் கொண்டு வரையலாம் என்பதைக் காண்போம்.
இதற்குத் தேவையான ஆங்கில எழுத்துகள் ‘C’ மற்றும் D. இந்த இரண்டு எழுத்துகளை எழுதத் தெரிந்தாலே மிக எளிதாக மாங்கனியை வரைந்து விடலாம்.
முதலில் ‘C’ எழுத்தை எழுதவும்.
‘C’ ன் வலது புறத்தில் படத்தில் காட்டியபடி ‘D’ எழுத்தை சற்றே உயரமாக எழுதவும்.
தேவையற்ற கோட்டை அழித்துவிட்டு
‘C’ மற்றும் ‘D’யை வளைவுக்கோடு கொண்டு இணைக்கவும்.
தேவையற்ற கோட்டை அழித்துவிட்டு மாங்கனியின் மேல் பகுதியில் படத்தில் காண்பது போல் காம்பு வரைந்து கொள்ளவும்.
படத்தில் காண்பது போல் இலையை வரைந்து கொள்ளவும்.
வண்ணம் தீட்டி மகிழுங்கள்.