நினைவில் நிறுத்துவோம்: பாலின சமத்துவத்தை பள்ளிப் பருவத்திலேயே வளர்ப்போம்!

உலகில் உயர்வு தாழ்வு பல வகையில் கற்பிக்கப்பட்டு, நடைமுறையில் பின்பற்றப்பட்டு வருகிறது. செல்வத்தால் வேறுபாடு எல்லா நாடுகளிலும் காணப் படுகிறது. பெரும் பணக்காரர்கள் உயர்ந்தவர்களாகவும், கூலி வேலை செய்யும் ஏழைகள் தாழ்த்தப்பட்டவர்களாகவும் கருதப்படுகின்றனர். நிறத்தால் வெள்ளையாக இருப்பவர்கள் உயர்ந்தவர் களாகவும் கருப்பாக இருப்பவர்கள் தாழ்ந்தவர்களாகவும் எண்ணப்படுகின்றனர். நிறைய படித்தவர்கள் உயர்ந்தவர்களாகவும் படிக்காதவர்கள் தாழ்ந்தவர்களாகவும் மதிக்கப்படுகின்றனர். உலக அளவில் இப் பாகுபாடும் உயர்வு தாழ்வும் இருப்பினும், இந்தியாவில் நிலவும் மிகக் கொடுமையான பாகுபாடு என்பது பிறப்பால் உயர்வு தாழ்வு கற்பிக்கப்படும் அவலம் ஆகும்.
பெண்ணாகப் பிறந்தால் தாழ்வு, பெண்ணைவிட ஆண் உயர்வு. பிறக்கின்ற ஜாதியைப் பொறுத்து உயர்வு, தாழ்வு என்பது அதைவிட மிகவும் கொடியது ஆகும். காரணம் தீண்டாமை, காணாமை, மணவுறவு கொள்ளாமை போன்றவை ஜாதி அடிப்படையில்தான் நிலவுகின்றன.
பெண்ணைத் தாழ்வாக நினைப்பதும், ஜாதியால் பெரும்பான்மை மக்களை இழிவாகக் கருதுவதும், அயல்நாட்டிலிருந்து வந்த ஆரியர்கள் உருவாக்கியவையாகும். இந்தக் கொடுமையான பிறப்பினால் கற்பிக்கப்படும் ஏற்றத்தாழ்வுகளை நியாயப்படுத்த கடவுள்களையும், சாஸ்திரங்களையும் காரணங்களாய்க் காட்டும் மோசடியும் இதில் அடங்கியுள்ளது.
புத்தர், பெம்மான் பசவர், ஜோதிராவ்பூலே, சாகுமகராஜ், அயோத்திதாசப் பண்டிதர் போன்றவர்கள் இக் கொடுமைகளுக்கும், ஏற்றத்தாழ்வுகளுக்கும் எதிராய் கருத்துகள் கூறியிருந்தாலும், அண்ணல் அம்பேத்கரும், தந்தை பெரியாரும் தீவிரமாகப் போராடிய பின்தான் இந்த ஏற்றத்தாழ்வுகள் குறையத் தொடங்கின. அண்ணல் அம்பேத்கர் சட்ட ரீதியாக இதற்காக முயன்றார்; தந்தை பெரியார் இயக்கம் உருவாக்கிப் போராடினார்; பிரச்சாரங்கள் செய்தார்.
பெண்களை உரிமைகள் அற்றவர்களாய், அதிகாரம் அற்றவர்களாய் ஆணைச் சார்ந்து வாழ வேண்டியவர்களாய், ஆணின் தேவையை நிறைவு செய்யும் அடிமைகளாய் நடத்தினர். கணவனை இழந்தால் அவனை எரிக்கும் நெருப்பிலே மனைவியை எரிக்கும் கொடுமையையும் செய்தனர். மனைவியை இழந்த ஆண் மறுமணம் செய்யலாம் என்று அனுமதித்தவர்கள், பெண்ணுக்கு மறுமண உரிமையை மறுத்தனர்.
ஒரே தாய், தந்தையருக்குப் பிறந்தாலும் பெற்றோரின் சொத்தில் ஆண்களுக்கு மட்டுமே உரிமை என்றும், பெண்களுக்கு உரிமை இல்லை என்றும் மறுத்தனர். வீட்டில் சமையல் செய்தல், குழந்தை பெற்று வளர்த்தல், கணவனுக்குத் தேவையான வேலைகளைச் செய்தல் போன்ற பொறுப்புகளைப் பெண்ணுக்குக் கட்டாயமாக்கினர்.
பெண்கள் படிக்கக் கூடாது; வேலைக்குச் செல்லக் கூடாது என்று கட்டாயப்படுத்தினர். இதனால், பெண்கள் தங்களது வாழ்வுக்கும், சாப்பாட்டிற்கும், செலவிற்கும் ஆண்களையே நம்பியிருக்க வேண்டிய அவல நிலை இருந்தது.
பெண்கள் வீட்டை விட்டு வெளியில் செல்லக் கூடாது, ஆண் துணையின்றி தனிமையில் செல்லக் கூடாது, பிற ஆண்களுடன் பழகக் கூடாது என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. சற்றேறக் குறைய 60 ஆண்டுகளுக்கு முன் வரை இந்நிலையே நிலவியது.
தந்தை பெரியாரின் போராட்டங்களும், பிரச்சாரங்களும் இந்த நிலையைத் தகர்த்து, பெண்களுக்கு ஆண்களைப் போலவே அனைத்து உரிமைகளும் கிடைக்கும்படி செய்தன. பெரியாரின் பெரும் முயற்சியால் பெண்களுக்குக் கல்வி கிடைத்தது; கல்வி பெற்றதால் வேலை கிடைத்தது; வருவாய் கிடைத்தது; பெரியாரின் மாணவரான கலைஞர் முதல்வராக இருந்த போது பெண்களுக்குச் சொத்துரிமையும் சட்டப்படி அளித்தார்.
இன்று ஆண்களைப் போல பெண்கள் எல்லாத் துறைகளிலும், உயர்நிலையில் பொறுப்புகள் வகித்துச் சாதிக்கின்றனர். அதிகாரங்களையும் பெற்று ஆட்சி புரிகின்றனர். விளையாட்டு, இராணுவம் என்று உடல் திறன் காட்டுவதிலும் சிறந்து விளங்குகின்றனர். விண்வெளிக்குச் சென்றும் சாதனை படைக்கின்றனர்.
இவ்வளவு மாற்றங்களும் ஏற்றங்களும் உருவாக்கப்பட்ட பின்பும், இன்னும் உள்ளத்தால் முழு மாற்றம் ஏற்பட்டுவிட்டதா என்றால், இல்லை யென்பதே உண்மையான நிலையாகும்.
பிறந்த வீட்டிலும், பிற இடங்களிலும் பணிபுரியும் இடங்களிலும் பெண்கள் ஆண்களை விட தாழ்வாகவே கருதப்படுகின்றனர்.
ஒரே தாய் தந்தைக்குப் பிறந்தாலும் ஆண்கள் பெறும் உயர்வையும், சிறப்பையும் பெண்கள் பெறுவதில்லை. ஆண் உயர்வு, பெண் தாழ்வு என்ற பேத உளநிலை இன்னும் பல நிலைகளில் நிலவுவது உண்மை. ஆண் பிள்ளைகளுக்கு அளிக்கப்படும் உணவு, உடை, சுதந்திரம் ஆகியவை பெண் பிள்ளைகளுக்கு அளிக்கப்படுவதில்லை.
ஆண்தான் குடும்பத்தின் வாரிசு, பெண் பிறர் வீட்டில் சென்று வாழ வேண்டியவள் என்ற சமூக நிலையே இன்றும் ஆண் தனிச் சிறப்பும், உயர்வும் பெறுவதற்கான முதன்மைக் காரணம். எனவே, பெண் என்றால் அவள் திருமணம் செய்து கொண்ட பிறகு பிறர் வீட்டிற்கு உரியவள் என்ற வாழ்வியல் முறையும் மாற்றப்பட்டாக வேண்டும். ஆணோ பெண்ணோ விரும்பும் இடத்தில் வாழ அனுமதிக்கப்பட வேண்டும்; வாழ வேண்டும்.
பெண்ணின் உடல் அமைப்பு அவளின் சுதந்திர வாழ்வுக்குத் தடையாகக் கொள்ளப்பட்டது. ஆணை விட வலுவற்றவள்; பாலுறவு வன் செயலால் பாதிக்கப்பட அதிகம் வாய்ப்பு உள்ளது; கருவுறுதல் பெண்ணுக்கு மட்டுமே இருப்பதால் அவள் பாதுகாப்பாக வீட்டிலே இருக்க வேண்டும் என்ற மரபுவழி எண்ணங்கள் இந்த அறிவியல் உலகிலும் ஆழமாய் இருக்கிறது.
ஆணைப் போலவே பெண்ணும் பயிற்சியால் வலுப்பெற முடியும்; தற்காப்புக் கலைகள் மூலம் ஆணை எதிர் கொள்ள முடியும்; கருவுறுதல் என்ற காரணத்தால் பெண்ணை வீட்டுக்குள் முடக்காது, அவளை வல்லுறவை செய்கின்றவர்களுக்கு கடும் தண்டனை வழங்குதல் மூலம் பெண்ணுக்கு நேரும் பாதிப்பைத் தவிர்க்க முடியும்; தவிர்க்க வேண்டும். பாலியல் வல்லுறவை ஒரு விபத்தாகக் கொள்ளும் மனநிலை வேண்டும். கருவை எளிதில் அகற்ற முடியும் என்ற தெளிவை, துணிவை வளர்க்க வேண்டும்.
பெண்ணுக்குப் பெண்களே பெரும் தடையாக இருப்பது நடைமுறையில் உள்ளது. பெண்ணை வீட்டுக்குள் முடக்குவதிலும், தாழ்வாக எண்ணுவதிலும், ஆணுக்கு உயர்வளிப்பதிலும் பெண்களே முதலில் நிற்கின்றனர். எனவே பாலியல் சமத்துவத்திற்கு அதிகம் பெண்களுக்கு விழிப்புணர்வு ஊட்ட வேண்டும்.
குடும்பத்தில், பள்ளியில், பொது இடங்களில் பெண் ஆணைவிட தாழ்வானவள் என்ற அடிப்படையில் கருத்துக் கூறுதல், நடத்துதல், வாய்ப்பளித்தல் அறவே தவிர்க்கப்பட வேண்டும். பெண்கள் தாங்கள் ஆண்களைவிட தாழ்வானவர்கள் அல்ல என்ற உண்மையை முதலில் உணர்ந்து, உள்வாங்கிச் செயல்பட வேண்டும்.
உடல் உறுப்புகளால் ஓரிரு வேறுபாடுகள் தவிர பெண் உணர்வாலும், உள்ளத்தாலும், சிந்தனையாலும், திறமையாலும், ஆளுமைத் திறமையாலும், உறுதியுடன் நிற்பதாலும் ஆணுக்கு நிகரானவள் என்ற உடற்கூறு உண்மையை அனைவருக்கும் விளக்கி விழிப்பூட்ட வேண்டியது அரசின், தொண்டு அமைப்புகளின், ஆசிரியர்களின் கட்டாயக் கடமையாகும். மருத்துவர்கள், சமூகத் தொண்டர்கள் மூலம் கல்வி நிறுவனங்களில் விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்த வேண்டும். பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தனியே விழிப்பு உருவாக்கும் விளக்கங்கள் அளிக்கப்படுதல் வேண்டும். மாணவர்கள் தங்களுக்குள் ஆண், பெண் என்ற அடிப்படையில் உயர்வு தாழ்வு கொள்ளக்கூடாது. அதன் அடிப்படையில் பேசுதல், செயல்படுதல் கூடாது என்றும் உறுதி கொண்டு நடத்தல் வேண்டும்.