அறிவின் விரிவு – AI Vs மனிதன்

அண்மையில் ஒரு பேட்டியில் இசையமைப்பாளர் இளையராஜாவிடம் ஒரு கேள்வி – AI தொடர்பாக!
“இசைத் துறையில் AI வருகிறதே, அதை எப்படிப் பார்க்கிறீர்கள்?”
அதற்கு இளையராஜா, “இசையில் எல்லா வேலைகளையும் AI செய்து விடுகிறது, அப்படி என்றால் அதனுடன்தான் என் போட்டி” என்றார்.
புதியதாக வரும் ஒரு தொழில்நுட்பத்தைத் தனக்குப் போட்டியாளராக வைத்து போட்டிபோடத் தயாராகிறார் அந்த 81 வயது இளைஞர். ஆனால் உண்மையில் AI வருகைக்குப் பின் மனித சமூகம் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெளிவாகச் சுட்டிக் காட்டிவிட்டார் இளையராஜா.
“AI வருகிறது, அதனால் வேலை வாய்ப்புப் போய்விடும், ரோபோக்கள் மனிதர்களைக் கொன்று விடும், மனிதர்களை ஆளப்போகிறது, மனிதர்களை அழித்துவிடப் போகிறது என்ற பயம் இப்போது அனைவரையும் பிடித்து ஆட்டுகிறது. ஆனால் உண்மையில் நாம் செய்யறிவை அப்படி பார்க்கத் தேவை இல்லை.
விலங்குகள் தங்களின் அன்றாட வாழ்க்கையிலேயே பல நுட்பங்களைப் பயன்படுத்தும். அதிலிருந்து பரிணமித்த மனிதன் அந்த நுட்பங்களைப் பயன்படுத்தவும், அதன் தொடர்ச்சியாகக் கருவிகளைக் கண்டுபிடிக்கவும், கருவிகளின் உதவியுடனான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தவும் செய்தான். உண்மையில் மனிதனுக்குப் பாதுகாப்பையும், இயற்கை பற்றிய புரிதலையும், நேரத்தையும் தொழில்நுட்பம் தந்தது.
ஒவ்வொரு தொழில்நுட்ப வளர்ச்சியும் மனிதன் தனக்குத் தேவையானதை உற்பத்தி செய்வதில் அவனுக்கு உதவியாக இருந்தது. தொழில்நுட்பத்தை உற்பத்திக்காக, பாதுகாப்பிற்காக, நேரத்தை மிச்சப்படுத்த மட்டும் மனிதன் பயன்படுத்தவில்லை. இயற்கையைப் புரிந்துகொள்ளவும் பயன்படுத்தினான்.
மனித சமூகத்திற்கு நேரம் மிச்சமானால் அந்தச் சமூகம் அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி நகரும். அதே நேரம் அச்சமூகத்தில் இயற்கையைப் புரிந்துகொள்ளவும் செய்திருக்கிறார்கள்.
அண்மைய செய்யறிவு வளர்ச்சி என்பது மனிதனுக்கு அதிகப்படியான நேரத்தைக் கொடுக்கும். இயற்கையைப் புரிந்துகொள்வதற்கான ஆராய்ச்சிகளைச் செய்யவும், அதற்கான கருவிகள் செய்யவும் வாய்ப்புகள் கிடைக்கும்.
செய்யறிவு தரப்போகும் இந்த நேரத்தையும், கருவிகளையும் கொண்டு மேலும் இயற்கையைப் புரிந்துகொள்ளுமா இந்த மனித சமூகம்?
அடுத்து முக்கியமானது – இளையராஜா அவர்கள் சொல்வது போல் செய்யறிவுடன் போட்டி போடுவது! நாம் உயிர் வாழ்வதை எடுத்துக்கொண்டால் அது இயற்கையுடனான ஒரு போட்டிப் போராட்டம் தான். இயற்கை உண்மையில் நம் உயிரைச் சிதைக்கவும், அழிக்கவும் செய்கிறது. அந்த உயிர் அதை எதிர்த்துப் போராடி, தன்னை மேம்படுத்திக்கொள்கிறது.
இளையராஜா அவர்கள் சொல்வது போல் என் வேலையைச் செய்ய செய்யறிவு வந்துவிட்டால் அதனுடன் போட்டி போட்டு, அதை விட நான் தான் சிறந்தவன் எனக் காட்ட விழைவேன். அப்படி ஒரு போட்டி போடும் மனிதன் தன்னை மேம்படுத்திக்கொள்கிறான். இப்போதுள்ள மனித இனத்தை விட மேம்பட்ட ஒரு மனித இனமாக மாறுவான். மாறித் தீர வேண்டும். மாற்றம் ஒன்று தானே உலகில் மாறாத ஒன்று. போராட்டம் தானே நம்மை உயிர் வாழ வைக்கிறது.
(தொடரும்)