பறவைகள் அறிவோம் – நெருப்புக்கோழி

இப் பூமியில் உருவான உயிரினங்களில் நாம் காணாத வண்ணங்களையெல்லாம் தமக்குள் வைத்துக் கொண்டு இனிமையான குரலால் தெம்மாங்கு பாடிக்கொண்டே நம்மைச் சுற்றிப் பறந்து செல்கின்றன பறவைகள்.
“நயனொடு நன்றி புரிந்த பயனுடையர்
பண்புபா ராட்டும் உலகு”
என்ற திருக்குறளின் பொருளுக்கு ஏற்றால் போல் பறவைகளின் உடம்பு இந்த மண்ணில் புதையும் வரை தனக்காக இல்லாமல் மற்ற உயிரினங்களுக்காகவும் விதைகளை இப்பூமிப் பந்தில் விதைத்து இயற்கையைப் பேணிப் பாதுகாப்பதோடு மட்டுமல்லாது, பிறருக்குப் பயன்படும்படியும் வாழ்கின்றன.
பறவைகளின் வாழ்க்கை கருக்கட்டிய சூல் முட்டைகளிலிருந்தே ஆரம்பமாகிவிடுகிறது. தாயின் வயிற்றிலிருந்து முட்டையாகி வெளியே வந்ததுமே அவற்றின் போராட்டமும் தொடங்கி விடுகிறது. முட்டையில் அனைத்து வகையான வைட்டமின்களும் (ஏ,பி,சி,டி,இ) இருப்பதால் பிற இனங்களைச் சார்ந்த பறவைகளிடம் இருந்தும், விலங்குகளிடமிருந்தும், ஊர்வனவற்றிடமிருந்தும் மட்டும் அல்லாமல் மனிதர்களிடமிருந்தும் முட்டைகளைக் காப்பாற்ற முடியாமல் பறவைகள் போராடுகின்றன. முட்டையின் வெளிப்புறத்தில் கடினமான சுண்ணாம்பாலான ஓடு உள்ளது. முட்டையின் நடுவில் உருண்டை வடிவத்தில் மஞ்சள் கரு உள்ளது. அதை நன்றாக உற்றுப் பார்த்தால் அதில் சிறிய அளவில் வெண்ணிற வட்டம் தெரியும். இதைக் கருவட்டு என்பர். இந்த மஞ்சள் கரு முழுவதையும் சூழ்ந்திருப்பது வெண்கரு. இதனைச் சுற்றிலும் மெல்லிய வெள்ளை நிற சவ்வு மூடியிருக்கும் முட்டையின் ஒரு பக்கத்தில் காற்றறை (காற்று அறை) உள்ளது. முட்டை அடைகாக்கும்போது வெண் கரு விரிவடைய இக்காற்றறை உதவுகிறது.
பறவைகள் பல விதங்களில் இருப்பதனால் அப் பறவைகள் இடும் முட்டைகளின் நிறம், அளவு, அமைப்பு, எடை போன்றவையும் வேறுபட்ட வகையில் உள்ளன. முட்டைகள் பொதுவாக உருண்டையாகவும், நீண்ட உருண்டையாகவும், கோள வடிவமுடையதாகவும் உள்ளன. முட்டைகள் தாயின் உடலுக்குள்ளிருந்து வெளியே வந்து உரு வளர்ச்சியடைகின்றன. முட்டை பொரிந்து குஞ்சு வெளிவரப் போதுமான வெப்பநிலை வேண்டி இருக்கிறது. இதனை நிறைவு செய்யும் விதமாக பறவைகள் முட்டையை அடைகாக்கின்றன. பெரும்பாலும் முட்டைகளைப் பெண் பறவையே அடைகாக்கிறது. இருப்பினும் ஒரு சில இனங்களில் ஆண் பறவைகளும் இந்த வேலையைச் செய்கின்றன. அடைகாப்பதற்காகவே பறவைகள் உடலின் அடிப்பகுதியில் இறகு களற்ற ஒரு பகுதியுள்ளது. அப்பகுதியில் அதிகமான வெப்பம் அடைகாக்கும் காலத்தில் நிலவுகிறது. இந்த வெப்பம் முட்டையை விட்டு வெளியே சென்று விடாதபடி சிறகுகளை நன்கு அகலவிரித்து முட்டைகளை முழுவதுமாக மூடி அடைகாக்கும். அப்பொழுதே முட்டையின் வெப்பநிலை 900 டிகிரியிலிருந்து 940 டிகிரியாக இருக்கும். வெப்பம் படப்பட முட்டையின் கரு வளர ஆரம்பிக்கும். அடைகாக்கும் காலமும் இனத்திற்கு இனம் மாறுபடுகிறது.
முட்டையின் அளவு சிறியதாக இருக்கும்போது அடைகாக்கும் காலமும் குறைவானதாகவும், முட்டையின் அளவு பெரியதாகயிருப்பின் அடைகாக்கும் காலம் அதிகமாகவும் இருக்கும். அதுபோல முட்டைகளை முதலில் வைத்த நிலையிலேயே வைத்து அடைகாப்பது இல்லை. ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று முறைகள் உருட்டி, உருட்டி அடைகாக்கும்.
குஞ்சு வெளிவருதற்கு முன் முட்டையில் சில மாற்றங்கள் தோன்ற ஆரம்பிக்கும். முட்டையில் ஆங்காங்கே விரிசல்களுள் தோன்றும். முட்டை சற்று நகரத் தொடங்கும். உள்ளேயிருந்து குஞ்சு முட்டையோட்டை உடைத்து வெளிவர, குஞ்சுப் பறவையின் அலகின் மேல் பகுதியில் கூர்மையான பல் தோன்றும். இதற்கு முட்டைப் பல் என்று பெயர். குஞ்சுப் பறவை வளர, வளர அப் பல் தானாகவே கீழே உதிர்ந்துவிடும். சில வகையான பறவையினங்களில் தாய்ப்பறவையே முட்டையைக் கொத்திக் கொத்தி குஞ்சு வெளிவர உதவுகிறது.
“முட்டையை உள்ளிருந்து உடைத்தால் ஜனனம்
முட்டையை வெளியில் இருந்து உடைத்தால் மரணம்”
ஓட்டை உடைத்து வெளியே வரும் குஞ்சு முழுமையான வளர்ச்சி அடைந்திருக்காது. அவை பெரிய கண்களுடன், மஞ்சள் கரு நிறைந்த வயிறு, மெல்லிய கால்களுடன், மிக மென்மையான தோலால் உடல் பகுதி முழுவதும் மூடப்பட்டிருக்கும். உள் உறுப்புகள் தெளிவாக வெளியே தெரியும். சில நாட்கள் பெற்றோரின் கண்காணிப்பில் வளரும். இறகுகளால் ஆன சிறகுகள் முளைத்தவுடன் வானில் வெண்மேகம் தவழ்ந்து செல்வது போல் தனக்கான பாதையை அமைத்துக் கொண்டு பரந்த வானில் பறந்து செல்லும்.
அந்த வகையில், பறவை இனங்களில் மிகப் பெரியது நெருப்புக்கோழி ஆகும். இதனை தீக்கோழி என்றும் அழைப்பர். நெருப்புக்கும் இக் கோழிக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது. வெப்பப் பிரதேசத்தில் அதிக வெப்பத்தையும் தாங்கிக் கொண்டு வாழும் வகையில் இதன் உடலமைப்பு உள்ளதால் இப்பறவைக்கு ‘நெருப்புக்கோழி’ என்று பெயர் வந்தது. இதன் சிறகுகள் கடுமையான வெப்பத்திலிருந்து காக்கும் வகையில் மென்மையான பொதிபோல் அமைந்துள்ளது. இதன் மூலம் உடல் வெப்பத்தைக் குறைத்து வெயிலில் இருந்து காத்துக் கொள்கிறது. நெருப்புக் கோழியின் தோற்றம் ஆப்பிரிக்காவாக இருந்தாலும், ஆசியா கண்டத்திலும் குறிப்பாக அரேபியாவிலும் அதிக அளவில் உள்ளன. மேலும் மாமிசத்திற்காகவும், கண்ணைக் கவரும் அதனுடைய சிறகுகளுக்காகவும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் பெரிய பண்ணைகளில் வளர்க்கின்றனர்.
கேள்விக்குறிபோல கழுத்தையுடைய நெருப்புக் கோழியின் வாழ்க்கை வியப்புக் குறியதாக உள்ளது. நெருப்புக் கோழியின் தலை சிறியதாக இருக்கும். இது கிட்டத்தட்ட 9 அடி உயரம் வரை வளரும் செவ்வாழைத் தண்டுபோல சிவந்த நீண்ட கால்களையும் கழுத்தையும் உடையது. இவற்றின் கால்கள் மிகவும் பலம் பொருந்தியவை. ‘ஓங்கி அடித்தால் 1½ டன் வெயிட்’ என்று விளையாட்டாகக் கூறுவார்கள் சிலர். ஆனால் உண்மையில் நெருப்புக்கோழி தன்னைத் தாக்க வரும் விலங்குகளைக் காலால் உதைத்தால் அவற்றின் எலும்புகள் உடைந்து போகும் அளவிற்கு காயத்தை ஏற்படுத்தி தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும். மேலும் மற்ற எந்தப் பறவைகளுக்கும் இல்லாதவாறு கால்களின் அடிப்பகுதியில் வளைவான இரண்டு விரல்கள் இருக்கின்றன. இதன் இறக்கை 2 மீட்டர் அளவு நீளம் கொண்டது. இருந்தாலும் இவற்றால் பறக்க முடியாது. பறக்க மறந்த பறவைகளின் வரிசையில் இப் பறவையும் ஒன்று. பறக்க இயலாதே தவிர மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் 45 நிமிடத்திற்கு மேல் தொடர்ந்து ஓடும் சிறப்புத் தன்மை கொண்டது.
இது தான் உலகிலேயே அதிக அளவு எடை கொண்ட பறவையினம். சுமார் 145 கிலோ வரை வளரும். நெருப்புக் கோழியின் கண்கள் இரண்டு அங்குலம் கொண்டவை. இப்பறவையின் மூளை இரண்டு அங்குலத்தை விட குறைவானது. ஆண் பறவையை விட பெண் நெருப்புக்கோழி சற்றே உயரமாகவும், அதே நேரத்தில் எடை குறைவாகவும் இருக்கும். இவற்றின் பிரதான உணவுகள் கிழங்கு, இலை, பூக்கள், புற்கள் மற்றும் கனிகள் சில நேரங்களில் புழு, பூச்சிகளையும் உண்ணுகின்றன. நெருப்புக் கோழி தண்ணீர் குடிப்பதில்லை. காரணம், தான் உண்ணும் உணவுப் பொருட்களில் இருந்து தேவையான நீர்ச் சத்தைப் பெற்றுக்கொள்கிறது. எனவே வறண்ட பகுதியிலும் இப்பறவையால் தாக்குப் பிடித்து வாழ முடிகிறது. மேலும் குறைவான எடையைக் கொண்ட மனிதர்களைக் கூட முதுகில் சுமந்து கொண்டு வேகமாக ஓடும் அளவிற்கு வலிமை பெற்றது. மேலை நாடுகளில் இப்பறவைக்குக் கடிவாளம் போட்டு வண்டி இழுக்கவும் பயன்படுத்துகிறார்கள். அரேபியாவின் சில பகுதிகளில் இப் பறவையை ஓட்டப் பந்தயங்களில் ஈடுபடுத்துகின்றனர். நெருப்புக் கோழிக்கு பற்கள் கிடையாது. உணவை அரைத்து உண்பதற்காக, உணர்வுடன் கூடவே சிறு, சிறு கற்களையும் சேர்த்து விழுங்குகிறது. இப்பறவை, கூட்டம், கூட்டமாக வாழும் தன்மையுடையது. இந்தக் கூட்டத்திற்கு பெண் பறவைதான் தலைமை தாங்கி வழிநடத்திச் செல்கிறது. ஒரு மாத வயதுள்ள குஞ்சு கூட மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் ஓடும் திறன் கொண்டது.
பருவமடைந்த ஆண் நெருப்புக்கோழி தனக்கான துணையைத் தேர்ந்தெடுக்க, பெண் பறவையின் முன் சென்று தன்னுடைய நீண்ட மிருதுவான இறக்கையை விரித்து ஆட்டிக் கொண்டு தலையை மேலும் கீழுமாக அசைத்தப்படியே நடனமாடிக் காட்டும். அந்த நடனத்தில் மயங்கிய பெண் பறவை இணைசேரும். நெருப்புக்கோழியின் முட்டையே உலகில் பெரிய முட்டையாகும். ஒரு முட்டையின் எடை சுமார் 1 கிலோ 400 கிராம் கொண்டது. பல பெண் நெருப்புக் கோழிகள் தங்கள் முட்டைகளை ஒரே கூட்டில் இடுகின்றன. இந்த முட்டைகளைப் பகல் பொழுதில் பெண் பறவையும், பணிவிழும் இரவுகளில் ஆண் பறவையும் அடைகாக்கின்றன. சுமார் 42 அல்லது 46 நாட்கள் தொடர்ந்து அடைகாக்கின்றன. நெருப்புக் கோழிகள் சுமார் 40 அல்லது 45 ஆண்டுகள் வரை உயிர் வாழும்.
சுமார் 7 கோடி முதல் 12 கோடி ஆண்டுகளுக்கு முன்பே நெருப்புக்கோழி பூமியில் தோன்றியிருக்கக் கூடும் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். அதாவது டைனோசர் காலத்திலிருந்து வாழ்ந்து வருகின்றன. இன்றும் இப்பூமியில் நம்மோடு உலாவி வருகிற அதிசயங்களில் ஒன்றாகும். ஏனெனில் டைனோசர் காலத்தில் வாழ்ந்த இதைப் போன்ற பல பறவையினங்கள் பூண்டோடு அழிந்து விட்டன.
இன்று உலகில் பருவநிலை மாற்றம் கடும் சவாலாக விளங்கி வருகிறது. காடுகள் அழியாமல் பாதுகாக்க அதிக அளவில் மரங்கள் நட வேண்டும் என்ற எண்ணமும் மக்களிடையே மேலோங்கி உள்ளது. தமிழ்நாடு அரசும் மரக்கன்றுகள் நடும் திட்டங்களை அதிகரித்து வருகிறது. அதே போன்று தன்னார்வலர்களும் மரக்கன்றுகளை நட்டுப் பராமரிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர். அரசின் கட்டளைப்படி ஒவ்வொரு தொழிற்சாலைகளிலும் அதிகப்படியான மரங்களை நட்டு பசுமைப் பரப்பை உருவாக்க வேண்டும் என்றும் விதிகளையும் வெளிடிடுள்ளது. நாம் ஒரு மரக்கன்று நட்டால் பறவைகள் பத்து மரக்கன்றுகளை நடும் என்பதில் எந்த அய்யப்பாடும் இல்லை.
“பறவைகள் மீது நாம் பாசத்தை வைத்தால்
இயற்கை நம் மீது நேசத்தை வைக்கும்”.