துணுக்குச் சீட்டு – 25 : கருவிழி என்ன நிறம்?

கண்ணாடியில் தெளிவாக நின்று பார்த்தால், உங்களோட கருவிழி கருப்பா இருக்கா? ஓடிப்போய் பார்த்துட்டு வந்தீங்களா? கருப்பா இல்லையா? வேற நிறத்துல இருந்ததா? அது எப்படி கருவிழி வேற வேற நிறங்களில் இருக்கு?
கருவிழியின் நிறத்தைப் பற்றி தெரிஞ்சிக் குறதுக்கு முன்னாடி, வாங்க நாம கருவிழியைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.
கருவிழி என்பது, கண்ணின் மய்யப் பகுதியில் வட்ட வடிவத்துல இருக்குற ஒரு சவ்வுப் படலம் ஆகும். நம்மளோட கண்களுக்குள்ள எவ்வளவு வெளிச்சம் போகணும் என மூளை சொல்லுதோ அதுக்கு ஏற்றாற்போல கருவிழியோட அளவை, அதாவது இந்தச் சவ்வோட அளவைச் சுருக்கியோ அல்லது பெருசு படுத்தியோ கண்களுக்குள்ள போகும் வெளிச்சத்தின் அளவைக் கட்டுபடுத்தும். இன்னும் சுலபமா சொல்லணும்னா, இருட்டு அறையில் இருந்து திடீர் என வெயிலில் போய் நின்றால், கண்களை சுருக்கிக்கொள்வோம்.
அப்படி திடீரென வரும் வெளிச்சத்தால நம்மளோட கண்கள் பாதிச்சிடக்கூடாது என உதவுவதுதான் இந்தக் கருவிழி. கருவிழி எனும் சவ்வு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நிறத்துல இருக்கும் அல்லவா? அதைத்தான் நாம கருவிழியின் நிறம் என்று சொல்கிறோம்? அந்த நிறம் வருவதற்குக் காரணம் ‘melanocytes’ எனும் செல்கள் தான்.
நம்ம தோலில் பல வகையான செல்கள் இருக்கு. அதுல ஒன்றுதான் ‘melanocytes.’ இந்த செல்கள் ‘melanin’ எனும் நிறமியைச் சுரக்குது. இந்த நிறமியின் அளவைப் பொருத்து நம்மளோட நிறம் மாறுபடும். இந்த melanin இல் Eumelanin, pheomelanin என்று இரண்டு வகை இருக்கு. ‘Eumelanin’ எனும் நிறமி பழுப்பு நிறத்தைக் கொடுக்கும். ‘Pheomelanin’ சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தைக் கொடுக்கும். தோல் போலவே, கருவிழியிலும் இந்தச் செல்கள் இருக்கு. நம்ம எல்லாருடைய கருவிழியிலும், ‘melanocytes’ செல்களின் எண்ணிக்கை ஒரே அளவு தான். ஆனால், நிறத்தைக் கொடுக்கும் ‘eumelanin’ மற்றும் ‘pheomelanin’ நிறமிகளின் அளவு தான் வேறுபடும்.
கண்களில் இருக்கும் இந்தச் சவ்வைக் காற்றடைத்த பலூன் போலக் கொள்ளலாம். இப்போ, உதாரணத்துக்கு, இந்த பலூனின் முன்புறத்தில், ஒரு பொம்மை போட்டு இருக்கு, பின்புறத்தில், பொம்மை இல்லை என்று வச்சிக்குவோம். நடுவில், காற்று இருக்கு. இதே போலத்தான், பலூனுக்குப் பதிலாக கருவிழியை எடுத்துகிட்டோம் என்றால், கருவிழியின் பின்புறத்தில் ‘melanocytes’ செல்கள் இருக்கு.முன்புறத்தில், கருவிழியின் நிறம் இருக்கு.நடுவில் திசுக்கள் மற்றும் eumelanin/ pheomelanin நிறமிகள் இருக்கும்.
உங்களோட கருவிழியில் ‘eumelanin’ அதிகமா இருக்கு என்று வச்சுக்குவோம்.
வெளியில் இருக்கும் ஒளியில் மொத்தமா ஏழு நிறங்கள் இருக்கு என்று நமக்குத் தெரியும். ஒரு பொருள் உங்க கண்களுக்கு மஞ்சளாகத் தெரிந்தால், அப்போ, அந்தப் பொருள், ஒளியில் இருக்கும் மஞ்சளைத் தவிர மற்ற நிறங்கள் எல்லாவற்றையும் உள்ளிழுத்துக்கொண்டு மஞ்சளை மட்டும், “நீ வேண்டாம் போ” என்று வெளியேற்றும்.(மஞ்சள் பாவம் அல்லவா?!) அதனால தான் அந்தப் பொருள் மஞ்சளாக நம்ம கண்களுக்குத் தெரியுது. இதேதான் கருவிழியிலும் நடக்குது.
கண்களுக்கு உள்ளே வரும் ஒளி, திசுக்களில் உள்ள ‘eumelanin’ நிறமியில் படும்போது, அந்த நிறமி, பழுப்பு நிறத்தை வெளியேற்றும். வெளியேறிய பழுப்பு நிறம் தான், கருவிழியின் முன்பகுதில் வந்து சேரும். அப்படித் தான் கருவிழியோட நிறம் பழுப்பு (Brown) ஆக மாறுது.
‘Eumelanin’ மற்றும் ‘pheomelanin’இல் நீல நிறம் தரும் நிறமியே இல்லையே, அப்புறம் எப்படி சிலருக்கு மட்டும் கண்கள் நீலறமா இருக்கு? யோசிச்சிட்டு இருங்க. பதில் தெரிஞ்சா அனுப்புங்க!