அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் பிறந்தநாள்: மார்ச் 10

வீராங்கனை எங்கள் அன்னை
(10.3.1920 – 16.3.1978)
அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு நாள்: மார்ச் 16
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் தொண்டிற்கு அருந் துணையாய் விளங்கியவர் அன்னை மணியம்மையார். இவர்களைப் பற்றி அறிஞர் அண்ணா, “அய்யாவைக் கடந்த முப்பது ஆண்டுகளாகக் கட்டிக் காத்து, உடல்நலத்தோடு பாதுகாத்து வரும் பெருமை, அந்த அம்மாவைச் சாரும்”என்று பாராட்டி உள்ளார்.
அன்னை நாகம்மையார் 1933 ஆம் ஆண்டு மறைந்த நிலையில் பத்தாண்டு இடைவெளிக்குப் பின் (1943) தோழர், செயலாளர், செவிலியர் என்று, பல்வேறு நிலைகளில் கடமையாற்ற முன்வந்தவர் அன்னை மணியம்மையார்,
தம் தொண்டின் மூலம் 1949 ஆம் ஆண்டு முதல் தந்தை பெரியாருக்குத் தகுந்த துணைவியாக நிலைபெற்று விட்டார்கள். அதன் மூலம் பெரியாரின் கொள்கைகளைப் பரப்பியதுடன் இயக்கத்தைக் கட்டிக் காத்து, வளர்த்துச் சென்றார்கள். இவரது வாழ்க்கை துணிச்சல் மிக்கது.
அன்னை மணியம்மையார், வேலூரில் திரு.கனகசபை, திருமதி பத்மாவதி ஆகியோரின் புதல்வியாக
10.3.1920 அன்று பிறந்தார். இவருடைய இயற்பெயர் காந்திமதி. உயர் நிலைப்பள்ளிக் கல்வியும், தமிழ்ப் புலவர் படிப்பும் படித்தார்; இவர் தந்தையார் கனகசபை, அய்யா பெரியார் மீது மிகுந்த அன்பும் மரியாதையும் உடையவர். அம்மையாரும் சிறுபருவம் முதல் பெரியார் கொள்கைகள் மீதும் சுயமரியாதை இயக்கத்தின் மீதும் ஆழ்ந்த பற்றும் பெருமதிப்பும் உடையவராய்த் தன்மானக் கொள்கைகளைப் பரப்பும் ஆர்வம் காட்டினார்.
அன்னை மணியம்மையாரின் தந்தையார் கனகசபை விருப்பப்படி பெரியாரிடம் இயக்கப் பணிகளை ஆற்ற வந்த அம்மையார், பல நிலைகளில் பெரியார் அவர்களுக்குத் துணை புரிந்து, இயக்கப் பணிகளில் செயல்பட்டு வந்தார்.
நாளடைவில் பெரியாரின் உடல், நோய்த்தொல்லைகளால் தாக்குண்ட பொழுது, அம்மையாரின் கனிவான கவனிப்பு, கண்டிப்பான உணவுக் கட்டுப்பாடு ஆகியவற்றால் நோய் குறைந்தது. பெரியாரின் துணைவி என்னும் நிலையையும் எய்தினார்.
இயக்கத் தொண்டர்களுக்கும் தந்தை பெரியாருக்கும் செய்தித் தொடர்பு ஏற்படுத்தும் செயலாளராகப் பணி புரிந்தார்! வரவு செலவுகளைக் கணக்கிடுதல், பேச்சு, எழுத்துக் குறிப்புகளைத் தொகுத்தல் போன்ற பணிகள் செய்தார்; பொதுக் கூட்டங்களிலும், மாநாடுகளிலும் ஓரிடத்தில் அமர்ந்து, இயக்க ஏடுகளை விற்ற காட்சி, அவருடைய எளிமையையும் அடக்கத்தையும் புலப்படுத்தியது. அன்னை நாகம்மையைப் போன்று, இயக்கத் தொண்டர்கட்குப் பரிவோடு உணவளித்து, அவர்களை ஊக்கப் படுத்தி வந்தார்.
9.4.1949 அன்று பெரியார் அவர்கள் திருமணப் பதிவின் மூலம் வாழ்க்கை இணையராக்கினார். இதன் மூலம் சொத்துகளுக்கும் இயக்கப் பொதுமக்கள் நன்கொடைக்கும் அம்மையார் அவர்கள் பாதுகாவலரானார். இதன் காரணமாக எந்தப் பெண்ணும் அடைய விரும்பாத ஏச்சுப் பேச்சு எள்ளல்களை அம்மையார் அடைந்தார்; அவற்றை எல்லாம் தம் பொறுமையால் வென்றார். அவர் ஒரு சிறந்த பேச்சாளராகவும் எழுத்தாளராகவும் திகழ்ந்தார். இவருடைய எழுத்து வன்மைக்குக் ‘குடி அரசு’ இதழில் 1944 எழுதிய கந்தபுராண, இராமாயண ஆராய்ச்சிக் கட்டுரையே நல்ல சான்றாகும். 1948 ஆம் ஆண்டு கும்பகோணத்தில் சட்டத்தை மீறி போராட்டம் நடத்தி மூன்று திங்கள் (மாதங்கள்) சிறைசென்றார்; 1949 ஆம் ஆண்டு சென்னையில் இந்தி எதிர்ப்பு மறியலை முன்னின்று நடத்தினார்.
1957ஆம் ஆண்டு நடைபெற்ற ஜாதி ஒழிப்புப் போராட்டத்தில் ஏராளமான தொண்டர்கள் சிறைசென்றனர். அதில் காலமான இருவரில் மணல்மேடு வெள்ளைச்சாமியின் சடலத்தைக் கொடுக்கச் சிறை அலுவலர்கள் மறுத்தனர். அம்மையார் அவர்கள் அமைச்சர்களிடம் சென்று சந்தித்து, உடலைப் பெறுவற்கான ஆணை பெற்று விரைந்தார். சிறை அதிகாரிகள் புதைத்து விட்ட சடலத்தைத் தோண்டி எடுத்துத் தந்தனர். பின்னரே அம்மையார் அவர்கள் – அச்சடலத்தை ஊர்வலமாக எடுத்துச் சென்று, வீரவணக்கத்துடன் அடக்கம் செய்தார்.
19.01.1958 அன்று விடுதலையில் வெளிவந்த ‘இளம் தமிழா புறப்படு போருக்கு’ என்ற கட்டுரைக்காக அம்மையார் ஒருமாத சிறைத் தண்டனை பெற்றார்.
25.12.1974 வடக்கே நடைபெறும் இராமலீலா விழாவுக்கு எதிர்ப்பாக இராவண லீலா விழாவை ஏற்படுத்திப் பல்லாயிரக் கணக்கான மக்கள் சூழ, இராமன் உருவத்தைக் கொளுத்தித் தமிழர்களின் வெறுப்புணர்ச்சியை வடவருக்கு அறிவித்தார். இதன் காரணமாக அன்னை மணியம்மையார் தொண்டர்களுடன் சிறை புகுந்தார்.
ஏற்கெனவே பிரதமர் இந்திராகாந்தியால் நெருக்கடி நிலை பிறப்பிக்கப்பட்ட நிலையில் 31.01.1976 அன்று தமிழ்நாடு அரசு கலைக்கப்பட்டதும். இயக்கத் தொண்டர்கள் சிறை செய்யப்பட்டனர். அப்போது அம்மையார் திருமண நிகழ்ச்சிகள், கலந்துரையாடல்கள் என்னும் பெயரில் சுற்றுப் பயணம் செய்து, மக்களுக்கு விளக்க உரைகள் அளித்தார். சிறை சென்ற தோழர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதலும் ஊக்கமும் அளித்தார்.
30.10.1977 அன்று இந்திராகாந்தி சென்னைக்கு வருகைதந்தார். அவருக்குக் கருப்புக் கொடி காட்டி ஆர்ப்பாட்டம் செய்த போது மணியம்மையார் கைது செய்யப்பட்டுச் சிறை சென்றார். இவ்வாறு வீரமும், துணிச்சலும் உடைய அம்மையார் அஞ்சாமல், தந்தை பெரியாருக்குப்பின் இயக்கப் பணிகளை இடை விடாது ஆற்றி, அமைப்பை நிலைகுலையாமல் இயக்கத்தைக் கட்டிக் காத்து வந்த அம்மையார் அவர்கள் 16.03.1978 அன்று மறைவுற்றார்.
தமிழ்நாட்டு வரலாற்றில் தந்தை பெரியாரின் பகுத்தறிவு தொண்டறப் பணிகளால் வியப்புக்குரிய செயல்களை ஆற்றியவர் மணியம்மையார் ஆவர். சமுதாய இழிவுகள் நீங்க மூச்சு உள்ள வரை தளராமல் பணி செய்த பெருமை இவருக்கு உண்டு.<