கலைவாணரும் கலைஞரும்
மணமகள் படத்துக்கு கதை வசனம் எழுத வேண்டும் என்று என்னைக் கேட்பதற்காக சேலத்துக்கு வந்துவிட்டார் என்.எஸ்.கிருஷ்ணன். திரைக்கதை வசனத்திற்கு எவ்வளவு தரவேண்டும் என்று கேட்டார். நீங்களே முடிவு செய்யுங்கள் என்றேன். ஒரு அட்டையில் 00001 என்று எழுதிக் காட்டினார் கலைவாணர், நான் அந்த அட்டையைத் தலைகீழாகக் காட்டினேன். அதாவது பத்தாயிரம் அந்த நகைச்சுவையை அவரே ரசித்து முன் பணத்தைக் கொடுத்தார்.
கலைவாணர் வீட்டு மாடியில் நான் தனியாக அமர்ந்து மணமகள் படத்துக்குத் திரைக்கதை வசனம் எழுதிக் கொண்டிருக்கிறேன். எழுதுகிற வேகத்தில் எழுதப்பட்ட தாள்களை ஒழுங்காக அடுக்கி வைக்காமல் அவை காற்றில் பறந்து மாடி முழுவதும் சிதறிக்கிடக்கின்றன. அந்தத் தாள்களை கலைவாணரே அடுக்கி வைக்கிறார். என்ன நீங்களா? என்று கேட்கிறேன் ஆம், கம்பன் எழுதியபோது இப்படித்தான் சோழமன்னன் பின்னால் இருந்து அடப்பக்காரன் போல் தாம்பூலம் கொடுத்தான் என்று கூறுகிறார் கலைவாணர்.
நீங்கள் சோழ மன்னனாக இருக்கலாம். ஆனால் நான் கம்பன் அல்ல என்று பதிலளித்தவாறு அவரைத் தழுவிக் கொள்கிறேன் நான்! -_ டாக்டர் கலைஞர். (டாக்டர் கலைஞர் புகைப்பட ஆல்பம் நூலிலிருந்து… மு.அன்புக்கரசன், பெரியகுளம்)