காட்டுவாசி – 8 : சுற்றி வளைத்த காவல்துறை

திடீர் என துப்பாக்கியுடன் வந்த முரடர்களை ரங்குவின் உதவியோடு விரட்டி அடித்து விட்டோம் ஆனால்… இனிமேல் என்ன நடக்குமோ என்று சிந்தித்தபடி திரும்பி வந்தார் காட்டுவாசி.
அமுதாவும். மாணிக்கமும் ஒரு மரத்தடியில் சோகத்தோடு, பயந்தபடி உட்கார்ந்திருந்தார்கள்.
அவர்கள் அருகில் காட்டுவாசி வந்து நின்ற உடனேயே அமுதா அழுதபடி “எங்களாலேயே தானே உங்க உயிருக்கே ஆபத்து வந்துடுச்சு”. என்றாள்.
“எங்களைக் காப்பாத்துனதுனாலேதான் உங்களுக்கு எவ்வளவு சிக்கல்?” என கண்கலங்கியபடி சொன்னான் மாணிக்கம்.
“கவலைப் படாதீங்க… பிரச்சனை, சிக்கல், சிரமம் இதெல்லாம் வரத்தான் செய்யும். அதுக்காக நாம பயந்து ஓடி ஒளியக் கூடாது. இதையெல்லாம் எதிர் கொண்டு வாழுறது தான் வாழ்க்கை.
குழந்தைகளாகிய நீங்கள் உங்களுடைய எண்ணத்துக்கு ஏத்தபடி உங்க பெற்றோர்கள் நடந்துக்கலைன்னுதானே வீட்டை விட்டு வந்தீங்க? பெற்றோர்கள் உங்க எண்ணத்தைப் புரிஞ்சு கலந்து பேசி நல்ல முடிவு எடுத்து இருந்தா நீங்க ஏன் வீட்டை விட்டு வரப் போறீங்க?
குழந்தைகளாகிய உங்களுக்கு உங்க கருத்தைச் சொல்ல கட்டாயம் உரிமை இருக்கு. அது நல்லதா… கெட்டாதான்னு தெரிஞ்சு அதுக்கு ஏத்த வழிமுறைகளைச் சொல்லி உங்களை நெறிப்படுத்த வேண்டியது பெற்றோர்களோட கடமை.
அதனாலதான் உங்களை 18 வயசு வரைக்கும் குழந்தைகள்னு அய்க்கிய நாட்டு அவை குழந்தைகள் உரிமை சாசனத்துலே சொல்லி இருக்கு. அதை நம்ம நாடும் ஏத்துக்கிட்டு கையொப்பம் போட்டு இருக்கு.”
“காட்டுவாசி! நீங்க உரிமை கடமைன்னு ஏதோ சொல்லுறீங்க… எங்களுக்கு ஒன்னும் புரியலே. இப்ப அடுத்து என்ன நடக்குமோங்கிற பயம்தான் அதிகமா இருக்கு” என்றான் மாணிக்கம். ‘ஆமாம்’ என்பது போல் தலையை ஆட்டி மாணிக்கம் சொன்னதை ஆமோதித்தாள் அமுதா.
“நான் சொன்ன விஷயம் பல பெரியவங்களுக்கே இன்னும் புரியலே. கவலைப்படாதீங்க. நீங்க வீட்டுக்குப் போக வேண்டிய நேரம் நெருங்கிடிச்சு அது மட்டும் எனக்கு நல்லா தெரியுது.”
“அப்படியா… நான் வீட்டுக்குப் போனதும் அப்பா, அம்மா, பாட்டி எல்லார்கிட்டேயும் மன்னிப்புக் கேட்டுட்டு ஒழுங்கா அப்பா சொன்னபடி பாட்டு கிளாசு, டியூஷன் கிளாசுன்னு வழக்கமா போற மாதிரி போக ஆரம்பிச்சிடுவேன்.” என்றாள் அமுதா.
“உனக்கு விருப்பம்னு சொன்ன விளையாட்டைப் பத்தி உங்க அப்பாகிட்டே பேச மாட்டியா?” என்றான் மாணிக்கம்.
“என் விருப்பத்தைச் சொல்லி மறுபடி சிக்கல் வந்துட்டா… என்ன செய்யிறது?”
“அமுதா! கவலைப்படாதே… உனக்காக நான் உங்க அப்பாகிட்டே பேசுறேன்” என்றார் காட்டுவாசி.
“நான் வீட்டுக்குப் போனதும் அம்மாகிட்டேயும், தாத்தாகிட்டேயும் நான் உங்ககிட்டச் சொல்லாமல் வீட்டைவிட்டு போனது தப்புதான். நீங்க சொன்ன மாதிரி ஒழுங்காப் படிக்கிறேன்னு சொல்லிட்டு ஜாலியா பள்ளிக்கூடம் போயிடுவேன். நல்லா படிச்சு பெரியவனா ஆகி நல்ல வேலைக்குப் போயி அம்மாவையும், தாத்தாவையும் நல்லா பாத்துக்குவேன்.” என்றான் மாணிக்கம்.
“அருமையாச் சொன்னே… மாணிக்கம்! உங்களை மாதிரி குழந்தைகள் சின்ன வயசிலேயே ஓர் இலக்கை உருவாக்கிக்கிட்டு அதை நோக்கிப் பயணம் செய்ஞ்சா நினைச்சதும் நடக்கும்; பலனும் கிடைக்கும். அதுக்கு பெற்றோர். ஆசிரியர்கள் சமூகம் எல்லாமே ஒத்துழைப்பாகவும் உதவியாகவும் இருக்கணும்.
இன்றைய சூழ்நிலையிலே விரும்பியதைப் படிக்கவும். கத்துக்கவும் குழந்தைகளுக்கு நிறைய வாய்ப்பு இருக்கு. அதே நேரத்திலே கைப்பேசி, கணினி, தொலைக்காட்சி போன்ற மின்னணு ஊடகங்களும் திரைப்படம் போன்ற பொழுதுபோக்குச் சாதனங்களும் மூடநம்பிக்கையை வளர்த்து. தவறான பாதைக்கு இழுக்கவும், செய்யுது. அதுல நீங்கள்தான் கவனமா இருக்கணும். அறிவியல் பார்வையோட எதையும் பார்க்கணும்.”
“ஏங்க காட்டுவாசி! நீங்க சொன்னதெல்லாம் சரி… எங்களை இந்த மலையாண்டியும், மாசியும் எதுக்குக் கடத்துனாங்கன்னு எனக்குப் புரியவே இல்லியே… எங்கக்கிட்ட பெருசா நகை நட்டும் இல்லே… காசு பணமும் இல்லே அப்பறம் எதுக்கு கடத்தணும்?” எனக் கேள்வி கேட்டாள் அமுதா.
“நகை நட்டு, காசு பணத்தைவிட நீங்களே நல்ல லாபம் தரக்கூடிய பொருள்னு அவங்க திட்டமிட்டு இருக்காங்க.”
“குழந்தைங்க நாங்க நல்லா லாபம் தரக்கூடிய பொருளா? என்ன சொல்றீங்க…” என்று புரியாமல் கேட்டான் மாணிக்கம்.
“உங்களை மாதிரி குழந்தைகளைக் கடத்தி பாலியல் தொழில்ல ஈடுபடுத்திப் பணம் சம்பாதிக்கலாம்; உங்களை போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தலாம்; உடலை ஊனமாக்கி பிச்சை எடுக்க வச்சு பணம் சம்பாதிக்கலாம்; கொலை, கொள்ளை போன்ற சமூக விரோதக் குற்றங்களைச் செய்ய வைக்கலாம். மேலும் வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்புறோம்னு சொல்லி உங்களை நல்ல விலைக்கு விற்கலாம்… இதையெல்லாம் தடுக்க அரசு பல வகையிலே முயற்சி எடுத்தாலும்… அதையும் மீறி இது மாதிரி ஆளுங்க தப்பு செய்யத்தான் செய்யிறாங்க. இவங்களை மாதிரி ஆளுங்களைக் கண்டா நாமதான் அரசுக்குத் தெரியப்படுத்தணும். குழந்தைகளாகிய நீங்கள்தான் எப்பவும் எங்கேயும் விழிப்போட இருக்கணும்.”
இப்படி மூவரும் பேசிக் கொண்டிருக்கும் போதே மரத்தின் மீது இங்கும் அங்கும் தாவிக் குதித்து “கீச்… கீச்” என குரல் கொடுத்தது ரங்கு.
ரங்குவைப் பார்த்த காட்டுவாசி, “யாரோ காட்டுக்குள்ள வந்துட்டாங்க… அதான் ரங்கு இப்படிக் கத்துறான்.”
“அய்யய்யோ! மறுபடி ஆபத்தா?” என அமுதாவும், மாணிக்கமும் பயந்தபடி காட்டுவாசிக்குப் பின்னால் வந்தனர்.
தட தடவென பூட்ஸ் சத்தம்.
இரும்புத் தொப்பி அணிந்து கையில் துப்பாக்கியுடன் இருபதுக்கும் மேற்பட்ட போலீசார் காட்டுவாசி இருக்கும் இடத்தைச் சுற்றி வளைத்தனர்.
காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் கையில் ஒரு சிறிய துப்பாக்கியுடன் வட்டமிட்டு நின்ற போலீசுக்கு நடுவிலிருந்து வந்து, “காட்டுவாசி! உங்களைக் கைது செய்ய வந்திருக்கோம். உம்… நடங்க.” என்றார்.
குழந்தைகள் அமுதா, மாணிக்கம் இருவரையும் திரும்பிப் பார்த்தார் காட்டுவாசி.
உயர் அதிகாரி, “கான்ஸ்டபிள்! அந்தக் குழந்தைகளைப் பத்திரமா என் ஜீப்புக்குக் கூட்டிக்கிட்டுப் போங்க” என்றார்.
மாணிக்கமும். அமுதாவும் திரும்பித் திரும்பிப் பார்த்தபடி போலீசாரோடு முன்னால் நடந்தார்கள். பின்னால் காட்டுவாசி கம்பீர நடை நடந்து காவல் வாகனம் நோக்கிச் சென்றார். பின்னால் காவலர்கள் துப்பாக்கியை நீட்டிப் பிடித்தபடி அடி மேல அடிவைத்து நடந்து வந்தனர்.
சூரியன் மேற்கில் இறங்கி வானத்தை கருப்பும், சிவப்புமாக மாற்றிக்கொண்டிருந்தது.<
(தொடரும்)