பறவைகள் அறிவோம் – 13 : வரி வாலாட்டிக் குருவி (WHITE BROWED WAGTAIL)

இயற்கையில் உருவான உயிரினங்களில் மிகவும் அழகானவை பறவைகள். வண்ண இறகுகளைச் சிறகுகளாய்க் கொண்ட பறவைகளைக் காணும்போது ஆனந்தம் மேலிட இமை கொட்டாமல் பார்த்து அதன் கூடவே பறந்து செல்கின்றது நம் மனது. அவை இலைகளிலும், கிளைகளிலும் தாவித் தாவிச் செல்லும் அழகே அழகுதான். பறவைகள் இசைக்கும் மெட்டுகளையும், கட்டும் கூடுகளையும் காணும் போது கண்ணுக்குள்ளே கூடுகட்டி, காதுக்குள்ளே இசைப்பது போல் இருக்கிறது. அதுமட்டுமின்றி தாவரங்களின் மகரந்தச் சேர்க்கைக்கும், பயிர்களைத் தாக்கும் பூச்சி – புழுக்களைக் கட்டுப்படுத்தவும் விவசாயிகளின் நண்பர்களாகப் பறவைகள் இருக்கின்றன.
பனியில் நனையும் பறவையின் உடல் குளிர் எடுக்காமல் இருக்கவும், மழையிலிருந்து காக்கவும், சுட்டெரிக்கும் சூரியனின் வெப்பத்திலிருந்து பாதுகாக்கவும் சிறகுகள் உதவுகின்றன. பெரும்பாலும் பறவைகள் அமைதியான சூழல்களில் தான் சுதந்திரமாகப் பறக்கின்றன. இந்த அமைதி ஒரு காலத்தில் சிற்றூர்களில் இருந்தது அப்பொழுது பல விதமான பறவைகளைக் கண்டோம். இப்போதெல்லாம் அங்கும் ஒலி மாசு ஏற்படுகிறது.
பறவைகளின் உடலமைப்பை ஆராய்வதும் ஒவ்வொரு பகுதியின் பயனைத் தெரிந்து கொள்வதும் பறவைகளைப் பாதுகாப்பதற்கு உதவியாக இருக்கும். பொதுவாகவே, தலையின் அளவில் 15-30% என்ற அளவை விடக் கூடுதலான அளவில் (volume) கண் இருந்தால், அவற்றை பெரிய கண்கள் கொண்ட பறவைகள் என்கிறோம். அப்படி பெரிய கண்களைக் கொண்ட பறவையினங்கள் கூர்மையான பார்வைத் திறனைக் கொண்டவை. பெரிய கண்களைக் கொண்டுள்ளதால் பெரிய பிம்பத்தை அதன் கண்கள் அனுமதிக்கின்றன.
மேலும் பெரிதாக்கப்பட்ட கண்மணி அதிக ஒளியை உள்ளே செல்ல அனுமதிக்கிறது. இதனால் மங்கலான வெளிச்சத்தில் கூட பறவைகளால் தெளிவாகப் பார்க்க முடிகிறது. மேலும் பறந்து கொண்டே இரையைப் பிடிக்க அதன் பெரிய கண்கள் உதவுகின்றன. மனிதனைப் போன்று விலங்குகளின் கண்களும் சிவப்பு, பச்சை, நீல நிறங்களை உணரும் ஒளி உணர்வுத் தன்மை கொண்டுள்ளன. பறவைகளைப் பொறுத்தவரை கூடுதலாக புற ஊதா நிறத்தை அறிய நான்காம் ஒளி உணர்விப்பான் உதவி செய்கிறது. எனவேதான் நம் கண்களுக்குப் புலப்படாதவற்றையும் பறவைகளால் காணமுடிகிறது. மேலும் நமது விழிலென்ஸ் குவி ஆடி வடிவில் இருக்கும்.
பறவைகளின் விழி லென்ஸ் சற்றே தட்டையாக இருக்கும். மனிதக் கண்களில் சதுர மில்லி மீட்டருக்கு இரண்டு இலட்சம் ஒளி உணர்வுகள் உள்ளன. ஆனால் பகலில் வேட்டையாடும் பறவைகளுக்கு சதுர மில்லி மீட்டருக்கு நான்கு லட்சம் ஒளி உணர்வும், இரவில் வேட்டையாடும் பறவைகளுக்கு சதுர மில்லி மீட்டருக்குப் பத்து லட்சத்திற்கும் அதிகமான ஒளி உணர்வுகள் உள்ளன. மேலும் ஒரு பறவைக்குக் கண்களைப் பாதுகாக்க மூன்று வகையான இமைகள் உள்ளன. மேல் இமை மனிதர்களின் இமையைப் போன்றது, கீழ் இமை தூங்கும் போது மூடிக்கொள்ளும். மூன்றாம் இமை ஒளி ஊடுருவலைக் கட்டுப்படுத்தி கண்களைப் பாதுகாக்கவும், அதன் ஈரத்தன்மையைக் காக்கவும் உதவுகிறது. சில பறவைகள் அரிதாகவே கண்களைச் சிமிட்டுகின்றன. பறவைகளின் கண்களில் உள்ள லென்ஸ் பகுதியில் கண் பார்வையைச் சுற்றி எலும்பு போன்ற “ஸ்கரோடிக்” வளையம் உள்ளது இந்த வளையம் கண்பார்வையை அதிகரிக்கச் செய்கிறது.
வரி வாலாட்டிக் குருவி
இந்த இதழில் நாம் பார்க்க விருக்கும் இப்பறவையை ஆங்கிலத்தில் ஒயிட் பிரோவ்டு வாக்டெயில் (WHITE – BROWED WAGTAIL)
என்றும் வெள்ளைப் புருவ வாலாட்டி என்றும் அழைப்பர். தமிழில் வரி வாலாட்டிக் குருவி என்று அழைக்கப்படும் இப்பறவைக்குக் கண்ணைக் கவரும் வண்ணமயமான இறகுகள் இல்லாவிட்டாலும் கருப்பு, வெள்ளை நிறங்களைச் சுமந்து கொண்டு எட்டுத் திசையிலும் மேலும் கீழுமாக, கீழும் மேலுமாக தாழ்ந்தெழுந்து பறக்கும் அழகை நம்மால் காண முடியும், இதன் உடலின் மேற்பகுதியில் கருப்பு நிறமும் அடிப்பகுதியில் வெள்ளை நிறமும் காணப் படுகிறது. அதன் கருத்த முகத்தில் கண்கவர் வெண்புருவங்களும், தோளிலும் வாலின் இறகுகளிலும் பளிச்சிடும் வெண்பனியைப் போன்ற வெண் கோடுகளும் காணப்படும். இப் பறவையின் பூர்வீகம் தெற்காசியாவாக இருந்தாலும் இந்தியா முழுவதும் பரவலாகக் காணப்படுகிறது. நம் நாட்டில் ஏழு வகையான வாலாட்டிக் குருவி இனங்கள் உள்ளன. இது நீர்நிலைகளைச் சார்ந்து வாழும் பறவையினமாகும். வரி வாலாட்டிக் குருவி நீர் நிலைகளுக்கு அருகில் இணைப் பறவையுடன் சேர்ந்தோ அல்லது ஒரு குழுவாகவோ காணப்படுகின்றன. இப்பறவையை நகர்ப்புறங்களில் உயரமான கட்டடங்களின் மேல் பகுதியிலுள்ள நீர் சேமிக்கும் தொட்டியின் அருகேயும் காணலாம். இவற்றின் தனிச்சிறப்பு என்னவென்றால் இவை இடம் பெயராத ஒரே இந்தியப் பறவையினமாகும்.
இதன் உடலின் நீளம் சுமார் 21 செ.மீ. வரை இருக்கும். நீண்ட வாலிறகை நொடிக்கு ஒரு முறை ஆட்டும் பண்பினைக் கொண்டது. இப்பறவை ஏன் இவ்வாறு தொடர்ந்து வாலை ஆட்டுகிறதென்றால் மறைந்துள்ள பூச்சிகளை வெளிக்கொண்டு வருவதற்காகத் தான். மேலும் வரி வாலாட்டிக் குருவி அதிகாலை நேரங்களில் சத்தமாகவும், நெடிதாகவும் வெவ்வேறு ராகத்தில் பாடக்கூடிய வல்லமை பெற்றது. இது சீரான இடைவெளியில் வீச், வீச், வீச் என்று ஓசை எழுப்பும். இப்பறவை சுமார் 40 கி.மீ. வேகத்தில் நீண்ட தூரங்களுக்குப் பறந்து செல்லும் ஆற்றல் கொண்டது. இதன் இனப்பெருக்கக் காலம் பின்பனிக் காலம் தொடங்கி கூதிர் காலம் வரையாகும். ஆறுகளின் நீர்மட்டம் குறைந்து பருவமழை பெய்யும் வரை கூடு கட்டும் காலமாகும். இது அருகருகே கிடைக்கும் புல், வேர், மெல்லிய குச்சிகள், துணித் துண்டுகள் ஆகியவற்றைக் கொண்டு மிக அழகான கிண்ண வடிவில் கூடுகட்டும். அக் கூட்டில் 3 முதல் 5 முட்டைகள் வரை இட்டு அடைகாத்துக் குஞ்சு பொரிக்கும். குஞ்சுகள் நன்றாக வளரும் வரை சாம்பல் நிறத்தில் காணப்படும். பெண் குருவிகளை விட ஆண் குருவிகள் அடர்ந்த கருப்பு நிறத்தில் காணப்படும். பொதுவாக இப்பறவை புழுக்களையும், பூச்சிகளையும் உணவாக உட்கொள்ளும். ஆனால், குஞ்சுகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த கம்பளிப்பூச்சிகளையும் சிலந்திகளையும் உணவாக கொடுக்கிறது.
பறவையினங்கள் ஒரு நாட்டின் சுற்றுலாத்துறை வளர்ச்சிக்குப் பெரும் உதவியாக அமைகின்றன. பசுமைக் காடுகளில் வாழும் பெரிய பறவைகள் முதல் சிறிய பறவைகள் வரை மூலிகை விதைகளை விதைப்பதனால் இந்தியாவின் முக்கியமான தாவர இனங்கள் அழியாமல் பாதுகாக்கப்படுகின்றன. பறவைகள் அழிவது அல்லது குறைவது என்பது சுற்றுச் சூழல் மண்டலங்களில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே பறவைகளின் எண்ணிக்கை குறையக் காரணமாக இருக்கும் அனைத்துக் காரணிகளையும் நாம் கட்டுப்படுத்த வேண்டும்.
மனிதர்களின் அலட்சியப் போக்கால் பூமி நாளுக்குநாள் மாசடைந்து வருகிறது. நமக்கு வாழ இடம் கொடுத்த இந்தப் பூமியில் நம் வருங்காலத் தலைமுறைகளுக்கும் ஆரோக்கியமான வாழ்விடச் சூழல் அமைந்திட பறவையினங்களைப் பாதுகாக்க வேண்டும்; அதன் மூலமாகப் பூமியையும் காக்க முடியும்.
பறவைகளைக் காப்போம்!
பருவநிலை மீட்போம்!