அடேயப்பா…! – 13 : வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட வித்தியாசமான வாகனங்கள்

நம்ம வீட்டுல சில பேருக்கு மெக்கானிக் மூளை இருக்கும்னு சொல்லுவோம். கையில கிடைக்கிற எதையாவது வச்சு, மோட்டார் ஓட்டுறது, ரிப்பேர் பண்றது, பேட்டரியை வைச்சு எதையாவது செஞ்சு பார்க்கிறது, கெட்டுப் போன பொம்மைகளை எடுத்து செயல்பட வைக்கிறதுன்னு எதையாவது செஞ்சுக்கிட்டே இருப்பாங்க. அப்படி. வீட்டிலேயே உருவாக்கப்பட்ட சூப்பரான வாகனங்களைப் பற்றித் தான் இந்த இதழ்ல பார்க்கவிருக்கிறோம்.
இந்த வகையான வாகனங்களை விட, அவற்றைத் தயாரிக்கப் பயன்படுத்தி இருக்கும் பொருட்களைப் பார்த்தால் மிகவும் சுவாரசியமானதாக இருக்கும்.
முதலாவது, ஒரு மனிதரை மட்டும் சுமந்து செல்லும் வகையிலான ‘Human Drone’ எனப்படும் ஒருவகையான வானூர்தி. துபாயில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘Flying Car’ஆன இதன் விலை சுமார் 2 கோடி இருக்கும். ஆனால், இதனை மார்ஸிலோ லாவரேடர் என்பவர் வீட்டிலேயே தயாரித்துள்ளார். அதுவும் மிகவும் குறைந்த செலவில் அலுமினியக் கம்பிகளையும், 4 மோட்டார்களையும் கொண்டே தயாரித்துள்ளார்.
அடுத்தது, ‘Crazy Car.’ இப்படி ஒரு காரை இதுவரை நாம் எங்குமே பார்த்திருக்க மாட்டோம். அன்சின் பில்ட்ஸ் என்பவர் பழைய மாடல் ஃபோர்டு காரை மூன்று சக்கரங்கள் கொண்ட வித்தியாசமான காராக மாற்றி வைத்துள்ளார். இதற்கு “டேஞ்சர் ரேஞ்சர்” என்ற பெயரும் வைத்துள்ளார். ஆனால், சரியாக யோசித்து இதனை வடிவமைக்காததால் இதனை இயக்குவது கடினம்.
அடுத்தது, ‘Jet Car.’ ரேஸ் கார்களுடைய விலை ஏறிக்கொண்டே இருக்கின்றது. அதனால் ஜெட் என்ஜினைப் பயன்படுத்தி கார்ட்ஸ் கிரேசி ஃபீல் என்பவர் இந்த ஜெட் காரை உருவாக்கி இருக்கின்றார். 4 பூஸ்டர்களுடைய ஜெட்டின் என்ஜினைக் காருக்கு ஏற்றாற்போல மாற்றி இந்த வாகனத்தை உருவாக்கி இருக்கின்றார். இந்த என்ஜினையும் அவரே தான் உருவாக்கியுள்ளார். இந்த வண்டியை அவர் அதிகபட்சமாக மணிக்கு 180 கிலோமீட்டர் வேகம் வரை ஓட்டி இருக்கின்றாராம்.
கடைசியாக, ‘Shark Boat.’ ஸுபர் போட்ஸ் என்பவர் அச்சு அசலாக சுறா மீனைப் போலவே தோற்றமளிக்கும் இந்த வாகனத்தை உருவாக்கியிருக்கிறார். இது தண்ணீரில் மிகவும் வேகமாகப் பயணம் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதைத் தயாரிப்பதற்காக ஆற்றோரங்களில் வீணாகக் கிடந்த படகுகளின் பாகங்களை மாற்றி பழைய என்ஜினைப் பழுது பார்த்து புதிய என்ஜின் போல மாற்றி அதன் மேல் சுறா வடிவமைப்பைப் பொருத்தி இதைத் தயாரித்துள்ளார். இதே போல நீரில் பயணம் செய்யக் கூடிய வகையில் பல வித்தியாசமான வாகனங்களை இவர் உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வாகனங்களையே விநோதமாகப் பார்த்த காலம் போய், இப்போது விலையேற்றத்தின் காரணமாகவும், எரிபொருள் விலை கட்டுக்கடங்காமல் இருப்பதாலும். நாமே விநோதமான வாகனங்கள் தயாரிக்கும் அளவு வளர்ந்திருக்கின்றோம்.
அடுத்தது, ‘Mono Bike.’ கேஜி கரேன்ஜ் என்பவர் தனது வழக்கமான பைக்கை தனித்தனியாகப் பிரித்து ஒற்றைச் சக்கரம் கொண்ட வித்தியாசமான பைக்காக மாற்றி வைத்துள்ளார். இந்த வகையான வாகனம் தற்போது பலரால் விரும்பப்படுகிறது.
நம்மூரிலும் இவர்களைப் போல நிறைய கண்டுபிடிப்பாளர்கள், மெக்கானிக் மூளைக்காரர்கள் இருப்பார்கள் அல்லவா? நீங்கள் யாரையாவது பார்த்திருக்கிறீர்களா? அல்லது நீங்கள் இப்படி ஏதாவது செய்திருக்கிறீர்களா? எங்களுக்கு விவரமாக எழுதுங்கள்!