நினைவில் நிறுத்துவோம் : சிறப்பான வாழ்வுக்கு சிக்கனம் அடித்தளம்

சிக்கனம் – தந்தை பெரியார் கடைப்பிடித்த வாழ்க்கை முறையில் முதன்மையானது. நேர்மையான முறையில் சிறுகச் சிறுகச் சேர்த்தவர் பெரியார். எனவே, செலவையும் திட்டமிட்டு, தேவைக்கு ஏற்பச் சிக்கனமாகவே செலவிட்டார். அதே நேரத்தில் கட்டாயத் தேவைக்கு தாராளமாகச் செலவிட்டார்.
ஒவ்வொரு பைசாவையும் யோசித்துச் செலவிட்ட பெரியார், அண்ணா உடல் நலம் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்காக அமெரிக்காவிற்குச் சென்றபோது, அவர் பிழைத்து நலமுடன் வரவேண்டும் என்பதற்காக எத்தனை லட்சம் வேண்டுமானாலும் செலவிடத் தயாராக இருந்தார்.
கொள்கை பரப்ப, பத்திரிகைகள் நடத்துவதில் இழப்பு ஏற்பட்டாலும் பரவாயில்லை, தொடர்ந்து நடத்த வேண்டும் என்று முடிவு செய்தார்.
ஆதரவற்ற, எளிய பிரிவுப் பிள்ளைகளுக்குக் கல்வியும், உணவும், இருப்பிடமும் கிடைக்க லட்சக்கணக்கான ரூபாய் செலவிட்டுக் கல்வி நிலையங்களும், விடுதிகளும் அமைத்தார்.
இங்குதான் பிஞ்சுகள் சிக்கனம் என்றால் என்ன என்பதை மிகச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். தேவைக்குச் செலவு செய்ய வேண்டும். அதைத் திட்டமிட்டுச் செலவு செய்ய வேண்டும். தேவைக்குக் கூட செலவு செய்யாமல் முடிந்து (சேமித்து) வைத்தால் அதற்கு கஞ்சத்தனம், கருமித்தனம் என்று பெயர்.
சிக்கனம் வேறு; கருமித்தனம் அல்லது கஞ்சத்தனம் வேறு. தேவைக்குச் செலவு செய்ய வேண்டும் என்னும் போது நாம் விருப்பப்படுவதற்கெல்லாம் செலவு செய்தல் என்று பொருள் அல்ல. ஒரு மனிதனின் ஆசை, விருப்பங்கள் அளவற்றவை. ஒன்று நிறைவேறினால் இன்னொன்று வரும். அதுவும் நிறைவேற்றப்பட்டால் மற்றொன்று வரும். ஆசைக்கு அளவில்லை; விருப்பங்கள் எல்லையற்றவை.
சரியானதைத் தேர்வு செய்தல்:
எண்ணற்ற விருப்பங்கள், தேவைகள் நமக்கு இருப்பினும் அதில் எது சரியானது, எது தப்பானது என்று முதலில் முடிவு செய்ய வேண்டும். பழம் சாப்பிட வேண்டும் என்ற விருப்பம் சரியானது, உடலுக்கு நலம் தருவது. புகைபிடித்தல், போதைப் பொருள்களைப் பயன்படுத்துதல் தப்பானது, தீயது, உடலுக்குக் கேடு தரக் கூடியது. எனவே, நல்லதைத் தேர்வு செய்தால் நமக்கு நன்மை கிடைப்பதோடு செலவும் குறையும். இது சிக்கனத்தைக் கடைப்பிடிக்கப் பின்பற்றும் வழிகளில் ஒன்று.
விரயம் (வீண்) செய்யாமல் இருத்தல்:
உணவு, உடை, நீர், இயற்கை வளங்கள் எதுவாயினும் அவற்றை ஒரு சிறு அளவு கூட வீணடித்தல் கூடாது. தண்ணீர்தானே என்று அதைக் கண்டபடி, தேவைக்கும் அதிகமாகச் செலவிடுவது குற்றம்; இந்தச் சமுதாயத்திற்கு நாம் செய்யும் கேடு.
திட்டமிடல்:
திட்டமிட்டுச் செய்தால் எதுவும் வீணாவதைத் தடுக்க முடியும். எந்தவொரு பொருளையும் பயன்படுத்துவதற்கு முன், அதை எந்த அளவிற்குப் பயன்படுத்தப் போகிறோம் என்று திட்டமிட்டுப் பயன்படுத்தினால் அது வீண் ஆகாது. திட்டமிடாமல் பயன்படுத்தினால் வீண் ஆகும். 5 பேருக்குச் சமைக்கிறோம் என்றால் அதற்கு ஒவ்வொரு பொருளையும் எவ்வளவு பயன்படுத்த வேண்டும் என்று கணக்கிட்டுப் பயன்படுத்தினால் வீணாகாது. கணக்கிடாமல் பொருளைப் பயன்படுத்தினால் சமைத்தவை மிகுந்து பாழாகும்.
நேரச் சிக்கனம்:
பொருள்களைச் சிக்கனமாகச் செலவிடுவது போலவே நேரத்தையும் சிக்கனமாகச் செலவிட வேண்டும். அதற்கு நேர மேலாண்மையும், திட்டமிடலும் கட்டாயம். படிக்கின்ற மாணவர்களுக்கு நேரச் சிக்கனம் கட்டாயம்.
ஒவ்வொரு பாடத்திற்கும் ஒவ்வொரு நாளைக்கு எவ்வளவு நேரம் செலவிட வேண்டும் என்று முன்கூட்டியே திட்டமிட்டு நேர ஒதுக்கீடு செய்ய வேண்டும். விளையாடுவதற்கு எவ்வளவு நேரம், தொலைக்காட்சி பார்க்க எவ்வளவு நேரம், குடும்பத்தில் உள்ளவர்களுடன் பேசி மகிழ எவ்வளவு நேரம், உறங்க எவ்வளவு நேரம் என்று கணக்கிட்டு நேர ஒதுக்கீடு செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் நேர வீணடிப்பு நிகழாது. இல்லையென்றால் நேரம் பற்றா நிலை ஏற்படும். விளையாட்டிலும், தொலைக்காட்சி பார்ப்பதிலும் அதிக நேரம் செலவிட்டு விட்டு, படிக்க நேரம் கிடைக்கவில்லை என்று கவலைப்படுவது நேரக் கணக்கீடும், ஒதுக்கீடும் செய்யாததால் வரும் விளைவாகும்.
எழுத்திலும் பேச்சிலும் சிக்கனம்:
எந்தவொன்றையும் எவ்வளவு சுருக்கமாகவும் விளக்கமாகவும், ஆழமாகவும், செறிவாகவும் சொல்ல முடியுமோ அவ்வளவு சுருக்கமாகச் சொல்ல வேண்டும், எழுத வேண்டும். மாறாக, தேவையற்ற பேச்சும் எழுத்தும் சலிப்பை ஏற்படுத்துவது போலவே, வெறுப்பையும் ஏற்படுத்தும். இன்றைக்குச் சமூக ஊடகங்களில் கூட இரண்டு நிமிடம், அய்ந்து நிமிடங்களில் சுருக்கமாகச் சொல்வது – பின்பற்றப்படுவது இந்த உண்மை அறிந்து தான். வள்ளுவர் அறிவார்ந்த, ஆழமான, செறிவான கருத்துகளை இரண்டு அடிகளில் கொடுத்துள்ளதைப் பிஞ்சுகள் நெஞ்சில் நிறுத்த வேண்டும். சொற்சிக்கனத்தில் உலகிலேயே சிறந்தவர் வள்ளுவர் தான். அவரை மாணவர்கள் வழிகாட்டியாகக் கொள்ள வேண்டும்.
சிக்கனமின்மையின் பாதிப்பு:
திட்டமின்றி, சிக்கனமின்றிச் செலவு செய்வதால் இழப்பு மட்டும் அல்ல; பாதிப்பும் ஏற்படும். அய்ந்து வரிகளில் பதில் எழுத வேண்டிய வினாவிற்கு 20 வரிகளில் பதில் எழுதினால் நேர வீணடிப்பு, உழைப்பு வீணடிப்பு மட்டுமல்ல, தேர்வு எழுதும் மாணவனுக்குப் பாதிப்பு ஏற்படும். அய்ந்து வரியில் எழுத வேண்டிய பதிலுக்கு அதிக நேரத்தைச் செலவிட்டு விட்டதால், விரிவான விடை எழுத வேண்டிய கேள்விகளுக்கு நேரம் போதாமல் போகும். அதனால் மதிப்பெண் இழப்பு ஏற்படும். எனவே சிக்கனமின்மை இழப்பை மட்டும் தராது, பாதிப்பையும் தரும்.
எனவே, எந்தவொன்றிலும் சிக்கனமாக (தேவையான அளவு) பயன்பாடு இருக்க வேண்டியது கட்டாயம். இதைப் பிஞ்சுகள் இளம் வயதில் இருந்தே கடைப்பிடிக்க வேண்டும்.
வருவாய் அறிந்து செலவு
சிக்கனம் பற்றி நாம் அறியும்போது இக்கருத்தையும் ஆழமாகக் கவனத்தில் கொள்ள வேண்டும். பணக்கார வீட்டுக் குழந்தை அதிகம் செலவிடுவதைப் பார்த்து, ஏழை வீட்டுக் குழந்தை அதிகம் செலவு செய்யக் கூடாது.
பணக்காரப் பையன் மாதுளை, ஆப்பிள் சாப்பிடுகிறான் என்றால், ஏழையும் செலவு செய்ய முடியாது. அப்போது கீரை, நெல்லிக்காய், சப்போட்டா, கம்பு, கேழ்வரகு போன்ற விலை மலிவான, ஆனால் சத்தான உணவுகளைப் பயன்படுத்துவதன் மூலம் அதிக நன்மை பெற முடியும்.
சிக்கனம் செய்வதே பின்னாளில் எந்த அவசியத் தேவைக்கும் நாம் பயன்படுத்திக் கொள்ளத்தான்.
சிக்கனத்தில் மிக முதன்மையாக நாம் சிந்தனையில் கொள்ள வேண்டியது, வருவாய் குறைவு என்று கவலைப்படாது, செலவை வருவாய்க்குள் செய்யத் திட்டமிட வேண்டும் என்பது தான். இதையே வள்ளுவர்,
“ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை
போகாறு அகலாக் கடை”
என்றார். சிந்தையில் கொள்ளுங்கள்.