ஏப்ரல் 2: உலக மதியிறுக்க விழிப்புணர்வு நாள் (World Autism Day): மதியிறுக்கம் உடையோரின் உரிமைக்குரலை எதிரொலிப்போம்!

மதியிறுக்கம் என்பது நோயல்ல! அது ஒரு நரம்பியல் குறைபாடு. மதியிறுக்கம் என்னும் பரப்பில் ஒருவர் எங்கேயும் இருக்கலாம். மிகக் குறைவான அளவிலிருந்து மிக அதிகமான அளவு வரை குறைபாடு உடையோரை வகைமைப்படுத்தி உள்ளனர். இத்தகைய பரப்பில் உள்ளவர்களும் மனிதர்களே எனும் புரிதல் நம்மிடையே வர வேண்டும். நாம் பேசுவதைத் தொடர்புமுறையாக வைத்திருப்பது போல, இத்தகைய பரப்பில் உள்ளவர்கள் எத்தகைய முறையைத் தொடர்புமுறையாக வைத்திருக்கிறார்கள் என்பதைக் கண்டறிந்து, அவ்வழியிலே பேசும் திறனுடையோரும் தொடர்புகொள்ள வேண்டும்.
நம்முடைய தொடர்புமுறை போல அவர்களது தொடர்புமுறை இல்லாததால், அவர்களை நம்முடைய தொடர்புமுறைக்கு கட்டாயப்படுத்ததல் கூடாது. எடுத்துக்காட்டாக, நாம் பேசுவது போல அவர்கள் பேச வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது.
கருவில் இருப்பதிலிருந்தே குழந்தைக்கு நரம்பியல் குறைபாடு தொடர்பான பரிசோதனைகளை மருத்துவர் பரிந்துரையின் படி மேற்கொள்ளல் வேண்டும். எவ்வளவு குறுகிய காலத்தில் குழந்தைகளுக்கு இருக்கும் குறைபாடுகளைக் கண்டறிகிறோமோ, அவ்வளவு விரைவாக அவர்களுக்கான சிகிச்சைகளும், பயிற்சிகளும், நமக்கான பயிற்சிகளும் மேற்கொள்ள ஏதுவாக இருக்கும்.
இக்கட்டுரையில், எழுத்தாலும், தொழில்நுட்பத்தாலும் தொடர்புகொள்ளும் 13 வயது மதியிறுக்கக் குறைபாடு உடைய குழந்தை ஸ்வரித் கோபாலன் எழுதிய கவிதைகள் குறித்தும் அதன் உள்ளடக்கக் கருத்துகள் குறித்தும் அறிந்து கொள்ள இருக்கிறோம்.
அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் குடும்பத்துடன் வாழ்ந்து வரும் ஸ்வரித் கோபாலன் இசையையும், எழுத்தையும் விரும்பி அதையே தொழில்நுட்ப வாயிலாக தன்னுடைய தொடர்புமுறையாக வைத்திருக்கிறார்.
தனது கவிதைகள் மூலம் அவரது கோணங்களையும், வாழ்க்கை அனுபவங்களையும் மக்களுக்குக் கடத்துவதோடு, தன்னைப் போன்று பேச்சால் தொடர்புகொள்ள முடியாதவர்களுக்குத் தனது எழுத்துகளால் உரிமைக் குரல் எழுப்பும் ஓர் உரிமைப் போராளியாக இருக்கிறார்.
மதியிறுக்கமுடையவர்களை மற்றவர்கள் (பேச்சினைத் தொடர்பு முறையாக வைத்திருக்கும் நம்மைப் போன்றவர்கள்) இரக்கத்துடனும், பரிதாபத்துடனும் அணுகாமல், நல்ல ஆழ்ந்த புரிதல்களுடன் அவர்களின் உரிமைகளை உறுதி செய்யும் நண்பர்களாக மாற்ற, தனது எழுத்துகள் உதவும் என நம்பிக்கையுடன் இயங்குகிறார் ஸ்வரித். அண்மையில் அவரது ஆழ்மனதின் அதிரும் எதிரொலிகளாய் விளங்கும் ‘Loud Echoes of the Soul’ எனும் கவிதைத் தொகுப்பினை படிக்கும் வாய்ப்பினைப் பெற்றேன்.
பேசமுடியாத மதியிறுக்கக் குறைபாடு உடையோரைப் (Non speaking Autistic person) பொதுவாகவே சிந்திக்கும் திறனற்றோர் எனும் கோணத்திலேயே அவர்களை நாம் அணுகுகிறோம். அந்தக் கோணம் எவ்வளவு பிழையானது என்பதைச் சுட்டிக் காட்டும் கவிதை தான் My Body, Not My Mind எனும் தலைப்பில் அவர் எழுதியிருப்பது.
தன் உள்ளத்திற்கும், உடலுக்கும் இடையே நடக்கும் மோதல்களை விளக்கும் கவிதை தான் இது. மதியிறுக்கமுடையோர் ஏன் எல்லா நேரங்களிலும் நம்மைப் போல இருப்பதில்லை என்பதைப் புரிந்துகொள்ளவும், உணர்ந்து கொள்ளவும் இந்தக் கவிதை உதவும். அவர்களே நினைத்தாலும், அவர்களது உடல் ஒத்துழைப்பது இல்லை என்பதனை உணர்ந்து கொண்டு பொதுவெளியில் மதியிறுக்கம் கொண்டோரைக் காண நேர்கையில் அவர்களைப் புரிந்துகொண்டு பழகுங்கள், பரிதாபத்துடன் பார்க்காதீர்கள் என ஸ்வரித்தின் குரலை நானும் எதிரொலிக்கிறேன்.
மதியிறுக்கம் உடையவர்களை அவர்கள் நிலையிலிருந்து, அவர்களின் புரிதல்களுடன் அணுகுவதே சமத்துவமாகும். பேச்சைத் தொடர்புமுறையாக கொண்டிராத மதியிறுக்கம் உடையவர்களுக்கு, அவர்களது தொடர்புமுறையை அறிந்து அம்முறையிலே தொடர்பு கொள்வதே அறிவுடைமையாகும். அவர்களின் உரிமைக்கு அவர்களுடன் இணைந்து குரல்கொடுப்பதே சமூகநீதியாகும்.
My Body, Not My Mind
Mind creates the perfect script
The body ruins with a meandering monologue
Nothing rolls as planned
For the body has a mind of it’s own
Go, I say; Freeze, it screams
No more, I command; Very yummy, It retorts
Forward, I plead; Just chill, it moans
Hurry up, I rush; Pipe down, it mulls
Try harder, I negotiate; Next time, it mellows
Cease, I nudge; Keep monkeying, it convinces
One is constantly fighting the other
Confusing spectacle for me, no chance for others
Not asking them to be best friends
Can they at least move to talking terms?
– Swarit Gopalan.
தமிழாக்கம்:
எனது உள்ளமல்ல, எனது உடல்
“நேர்த்தியான நாடகத்தை உருவாக்குகிறது எனது உள்ளம்
அதை எனக்குள்ளேயே பேசிக் கொள்ளும்
குழம்பிய உரையாடலாகச் சிதைக்கிறது எனது உடல்
எதுவும் நடக்கவில்லை திட்டமிட்டபடி
உடல் தனக்கென கொண்டிருக்கிறது ஓர் உள்ளத்தை!
போ, என நான் கூறுகிறேன்; உறைந்து நில் என அது கதறுகிறது
இனியும் முடியாது என கட்டளையிடுகிறேன் நான்;
அருமையாக இருக்கிறது என பதிலடி தருகிறது
முன்னேறு, என இறைஞ்சுகிறேன் நான்;
அமைதியாக இரு என முனகுகிறது.
வேகமாக என விரட்டுகிறேன்;
கூச்சலிடாதே பார்க்கலாம் என்கிறது
கடினமாக முயற்சி செய், பேச்சுவார்த்தை நடத்துகிறேன் நான்;
அடுத்த முறை என துருத்துகிறது
நிறத்து, எனத் தள்ளுகிறேன் நான்;
ஊசலாடிக் கொண்டே இரு என சமாதனப்படுத்துகிறது
ஒன்று மற்றொன்றுடன் தொடர்ந்து போராடிக் கொண்டே இருக்கிறது
குழப்பும் காட்சியாக எனக்கே இருக்கிறது,
மற்றவர்களுக்குப் புரிய வாய்ப்பே இல்லை
அவை உற்ற நண்பர்களாக இருக்க வேண்டுமென கேட்கவில்லை
குறைந்தபட்சம் பேச்சுவார்த்தைகாவது வரலாம் அல்லவா?”
– ஸ்வரித் கோபாலன்