’கெத்து’ சிம்சி!

சிம்சி பாம்பு அந்தக் காட்டில் மிகப் பிரபலம். காட்டிலேயே அட்டகாசமாகக் கணக்குப் போடும் ஒரே உயிரினம் சிம்சிதான். எல்லா வகையான கணக்குகளையும் போட்டுவிடும். காட்டில் யாருக்கு கணித உதவி என்றாலும் சிம்சியிடம்தான் போய் நிற்பார்கள். மான்கள் கூட்டமாக வந்து “சிம்சி, நாங்க குஞ்சனூர் போகணும். எந்தெந்தக் காட்டு வழியாகப் போனால் சீக்கிரம் போய்ச் சேரலாம்” எனக் கேட்பார்கள். சிம்சி சில நொடிகள் சிந்தித்து வரைபடத்தைப் பார்க்கும். உச் உச் உச்…“நேரா கஞ்சனூர் போய் இடது பக்கமா விஞ்சனூர் போய் அப்படியே நேரா போனால் ஆலமரம் வரும் அங்க வலது பக்கம் போனால் மஞ்சனூர் வரும். அங்கே தோப்புல கொஞ்சம் ஓய்வு எடுத்துட்டு நேரா போனால் குஞ்சனூர் வந்துவிடும்” எனச் சொல்லும்.
சிம்சியிடம் வழிகேட்காத மான்கூட்டம் இவர்களைவிட ஒரு நாள் தாமதமாகப் போய்ச் சேரும். சிம்சிக்குக் குறைந்த தூரக் கணக்குப் போட நன்றாகத் தெரியும். புறாக்கள் கூட்டமாக வரும். வலையில் மாட்டிக்கொண்டால் எந்தக் கோணத்தில் பறந்தால் தப்பிக்கலாம் எனக் கேட்டுச் செல்லும். காட்டில் எந்தப் பகுதியில் விருந்து என்றாலும் சிம்சிதான் பட்ஜெட் மற்றும் உணவுப் பொருட்களின் அளவுகளைப் போட்டுக் கொடுக்கும்.
எல்லாம் நன்றாகவே இருந்தது. ஒரு நாள் பலத்த மழை. காட்டிற்கு நடுவே ஓர் ஆறு ஓடுகின்றது. இந்தக் கரையில் இருந்து அந்தக் கரைக்குச் செல்ல ஒரு பெரிய மரப் பாலத்தை விலங்குகள் கட்டி இருந்தன. மழைக்கு ஆற்றில் நீர் பெருகி பாலம் உடைந்துவிட்டது. பிள்ளை விலங்குகளுக்கு உணவு தேட வந்த பெற்றோர் விலங்குகள் இந்தக் கரையில் இருந்தனர். குழந்தை விலங்குகள் அந்தக் கரையில் இருந்தனர். சிம்சியின் உதவியைக் கேட்டு வந்தனர். “சிம்சி, இங்கிருந்து அக்கரைக்குச் செல்ல எளிமையான பாதுகாப்பான வழியைச் சொல்! குழந்தைகள் பசியால் தவிக்கின்றனர்” என புலம்பினார்கள். எல்லாமே குட்டிக் குட்டி உயிரினங்கள்தாம். வரைபடத்தினை வைத்து எங்கே எளிதாகக் கடக்க இயலும் என்று யோசித்தது சிம்சி. யோசிக்கும்போது உச் உச் உச் என்ற சத்தம் வரும். ஆனால் எதுவும் சரியான வழியாக இல்லை. மழை அதிகரித்தது.
அந்தக் கரையில் இருந்து குழந்தை விலங்குகள் அழுகின்றன. அந்தச் சத்தம் இந்தப் பக்கம் கேட்டது. உடனே சிம்சி, “உணவுப் பொருட்களைத் தாங்க, நானே நீந்திக்கொண்டு எடுத்துச் செல்கின்றேன்” எனச் சொன்னது. முதலில் எல்லாப் பெற்றோர் உயிரினங்களும் தயங்கின. ஆபத்தில் சிக்கிக்க வேண்டாம் என எச்சரித்தன. சிம்சி முதுகில் பொருட்களைச் சுமந்து கொண்டு ஆற்றில் இறங்கியது. கொஞ்ச தூரம் சென்றதும் திடீர் என நடுவழியில் ஒரு சுழல் உருவானது. அதில் சிம்சி சிக்கிக்கொண்டது. எவ்வளவோ போராடியது. இரு பக்கம் இருந்தும் உயிரினங்களின் கூச்சல். முதலை ஒன்று சிம்சியைக் காப்பாற்றி மறுகரையில் இறக்கிவிட்டது. சிம்சி மயக்க நிலையில் கரையில் இறங்கியது. உணவுப் பொருட்களைக் கொடுத்தும் மயக்க நிலையிலேயே இருந்தது.
அன்றிலிருந்து சிம்சிக்கு நீர் என்றால் பயம் வந்துவிட்டது. அதனைவிடக் கொடுமை என்னவென்றால் அதற்குக் கணிதம் மறந்துவிட்டது. தன் இரையைப் பிடிக்கவும் முடியவில்லை. பாலர் பள்ளியில் படிக்கும் எறும்பு ஒன்று, 1 + 1 = எவ்வளவு என்று கேட்டதற்கு சிம்சி நீண்ட நேரம் யோசித்தது. உச் உச் உச்… கொஞ்ச நேரம் கழித்து “ஆமாம் ஒன்று என்றால் எவ்வளவு?” என்றது. நாளடைவில் சிம்சி சோர்ந்துவிட்டது. சில நண்பர்கள் அவ்வப்போது உணவு வழங்குவார்கள். சிலர் கணிதம் சொல்லித்தரவும் முயன்றனர்.
அப்போது வலசைக்கு வந்த பறவை சிம்சி பாம்பினைப் பார்த்தது. சிம்சியின் கதையைக் கேட்டது. “எதைக் கண்டு பயப்படுகின்றாயோ அதை திரும்பத் திரும்பச் செய்’ என்று மக்கள் சொல்லுவார்கள். நீ முதலில் நீரில் நீச்சலடி எல்லாம் சரியாகும்” என்றது.
சிம்சி அடுத்த நாள் ஒரு சிறிய நீர்த் தேக்கத்தில் மெதுவாகத் தலையைவிட்டு சில அடி தூரம் நீந்த முயன்றது. ஆனால், முன்பு உருவான அந்தச் சுழல் நினைவிற்கு வர பயந்தது.
“எனக்குத் தைரியம் உண்டு. என்னால் முடியும்” என மனதிற்குள்ளேயே சொல்லிக் கொண்டது. முதல் நாள் 11 அடிக்கு நீந்தியது. அடுத்த நாள் 23 அடிக்கு நீந்தியது. அடுத்து 29, 43, 47 என அதிகப்படுத்தியது. பெரும் உற்சாகம் பொங்கியது.
இம்முறை மாமழையுடன் புயலும் சேர்ந்து காட்டினைத் தாக்கியது. புதிதாகப் போடப்பட்ட பாலம் மீண்டும் உடைந்தது. பிள்ளை விலங்குகள் சில பெற்றோர் விலங்குகளும் அந்தக் கரையில் இருந்தனர். பெருவாரியான பெற்றோர் விலங்குகள் உணவு தேடத் தூரமாகச் சென்றுவிட்டனர். குறைந்த தூர வழி சொல்ல சிம்சி இல்லாததால் மிகவும் சிரமப்பட்டனர். “நாம சிம்சிகிட்ட கணக்குக் கத்திருக்கணும்” என்றும் புலம்பினார்கள். அவர்கள் எப்போது திரும்பி வருவார்கள் என தெரியவில்லை. ஆனால், குழந்தை விலங்குகள் பயத்தில் கத்தின.
சிம்சி எதிர்முனைக்குச் சென்று ஆறுதலும் நம்பிக்கையும் கொடுக்க ஆற்றில் இறங்கியது. யாரும் எதிர்பார்க்காத வகையில் சர்ர்ர்ரென மறுமுனைக்குச் சென்றது. முன்பைவிட வேகமாகச் சென்றடைந்தது. “யாரும் பயப்பட வேண்டாம். நான் இருக்கேன். அந்தப் பக்கம் செல்ல வழி செய்யலாம்” என நம்பிக்கை கொடுத்தது.
திடீரென உச் உச் உச்… உச் உச் உச் என்று சத்தம் எழுப்பியது. கொஞ்ச நேரம் யோசித்தது. “எல்லோரும் நகருங்க, அந்தப் பெரிய மரம் சாய்ஞ்சு இந்தப் பக்கமா விழப்போகுது; நாம அந்தப் பக்கமா நகருவோம்” என்று எச்சரித்தது. சொன்னது போலவே வேகமாக வீசிய காற்றுக்கு மரம் ஆடி அசைந்து விழுந்தது. ஆனாலும் முழுவதுமாகச் சாயவில்லை. மீண்டும் உச் உச் உச் உச் என்ற சத்தம்.
“மரத்தின் மேல ஏற முடிகிற உயிரினம் எல்லாம் ஏறி இதோ தாழ்வாகத் தொங்குதே இந்தக் கிளை மீது அழுத்தம் தந்தால் மரம் விழும் கோணம் மாறும். அது விழுந்தால் மறுமுனைக்கு இதில் ஏறிச் சென்றிடலாம்” என்றது சிம்சி.
எல்லாக் குட்டி உயிரினங்களும் மரத்தின் மேலே ஏறின.
“அப்கேளா அப்கேளா அப்கேளா” என்று பாடியபடியே அழுத்தம் கொடுத்தன.
மரம் திட்டமிட்டபடியே சரிந்து விழுந்தது. அதன் மறுமுனை அக்கரை வரை சென்றது. ஒவ்வொருவராகக் கைபிடித்துக்கொண்டு மறுகரைக்கு வந்து சேர்ந்தனர். சிம்சி மட்டும் மரத்தின் வழியே வராமல் ஆற்றில் நீந்தியபடி வந்தது.
அதற்குள் எல்லா விலங்குகளும் ஒன்று சேர்ந்துவிட்டனர். “குஞ்சனூரில் இருந்து வர தாமதமாகிவிட்டது” என்றனர்.
“எந்த வழியில் வந்தீங்க?” என சிம்சி கேட்க,
அடடா, சிம்சி பழைய நிலைக்கு வந்துவிட்டது என அறிந்து எல்லோரும் ஆனந்தக் கூச்சலிட்டனர்.
“முதல்ல எங்களுக்கும் கணக்குச் சொல்லிக் கொடு; நீதான் காட்டிலேயே ‘கெத்து’ சிம்சி” என்றனர் எல்லோரும்.