சிறார் கதை : வெண்பாவின் டெல்லி அப்பளம்

ஒரு குட்டி ஊரில் ஒரு குட்டி வெண்பா இருந்தாளாம். ஒரு முறை அவர்கள் ஊரில் ஒரு பொருட்காட்சி நடைபெற்றது. ஊருக்கு வெளியே இருந்த ஒரு பெரிய மைதானத்தில் தான் அந்தப் பொருட்காட்சி இருந்தது. ஒரு மாலை வேளையில் அப்பாவும் அம்மாவும் வெண்பாவை அங்கே கூட்டிப் போனார்கள். அவள் இப்போது தான் முதல் முறையாக ஒரு பொருட்காட்சிக்குப் போகிறாள். வாயில் முகப்பில் தோரணம் எல்லாம் கட்டி மிகவும் அழகாக இருந்தது. கண்ணைப் பறிக்கும் வண்ண விளக்குகளால் மைதானமே ஜொலித்தது. பெரிய பெரிய ராட்டினங்கள் இருந்தன, அவ்வளவு பெரிய ராட்டினத்தை அவள் இதுவரை பார்த்ததே இல்லை. கப்பல் போல், விமானம் போல் என விதவிதமாக இருந்தன. வெண்பா அங்கே இருந்த ஒரு டிராகன் ராட்டினத்திலும் குதிரை ராட்டினத்திலும் ஏறி மகிழ்ந்தாள்.
மேலும் அங்கே ஏராளமாய் பல்வேறு பொருள்கள் விற்கும் கடைகள் இருந்தன. அப்பா அவளுக்கு ஒரு யானை வடிவிலான உண்டியல் ஒன்றை வாங்கி கொடுத்தார். வெண்பா அதை ஆசையாக வாங்கிப் பத்திரமாகக் கையில் வைத்துக்கொண்டாள்.
“வெண்பா நீ பெரிய சைஸ் அப்பளம் பார்த்திருக்கியா?” அம்மா கேட்டபடி அவளை ஒரு டெல்லி அப்பள கடைக்குக் கூட்டிப்போனார்.
அங்கே பெரி…ய்ய்ய… அப்பளம் விற்றுக்கொண்டிருந்தார்கள். அவள் உணவு சாப்பிடும் தட்டை விட மிகவும் பெரிதாக இருந்த அந்த அப்பளத்தை வாயைப் பிளந்து, கண்களை விரித்து, கன்னங்களில் கை வைத்து வெண்பா ஆச்சரியத்தோடு பார்த்தாள்.
அப்பா வெண்பாவிற்கும் ஒன்று வாங்கினார்.
ஒரு சிறிய பேப்பரின் மேல் அந்த டெல்லி அப்பளத்தை வைத்து, அதன் மீது சிறிது மிளகாய்ப் பொடியைத் தூவி கடைக்காரர் அதை குட்டி வெண்பாவிடம் கொடுக்க, அப்பா அவளிடம் இருந்த யானை உண்டியலை வாங்கிக்கொண்டார்.
வெண்பா அந்த அப்பளத்தைத் தன் குட்டிக்கைகளால் சிறிய துண்டு பிட்டு அம்மா அப்பா இருவருக்கும் முதலில் ஊட்டி விட்டாள். பின்னர் அவளும் அதைச் சுவைத்தாள். மொறு மொறுவென இருந்த அந்த அப்பளம் வாய்க்குள் போட்டதும் அப்படியே கரைந்து தொண்டைக்குள் இறங்கியது. அதைச் சாப்பிட்டு முடித்த பிறகும் நீண்ட நேரத்திற்கு அதன் சுவை வெண்பாவின் நாவில் இருந்தது.
வீட்டிடுகுப் போன பிறகும் வெண்பா அந்த டெல்லி அப்பளத்தைப் பற்றியே நினைத்துக்கொண்டிருந்தாள். “அப்பா அந்த அப்பளம் சுவையா இருந்தது. இன்னொரு அப்பளம் வாங்கித் தருவீர்களா?” என்றாள்.
“பொருட்காட்சி இன்னையோட முடிஞ்சு போச்சுடா. அடுத்த ஆண்டு தான் திரும்பி வரும். அப்ப கண்டிப்பா வாங்கித் தரேன்” என்றார் அப்பா.
ஒரு நாள் அவள் வீட்டுக்கு அவளுடைய தாத்தா பாட்டி வந்திருந்தார்கள். வெண்பா அவர்களிடம் பொருட்காட்சிக்குப் போன கதையை விலாவாரியாகக் கூறினாள். முக்கியமாக அவள் சாப்பிட்ட பெரிய அப்பளத்தைப் பற்றியும் சொன்னாள்.
ஊருக்குக் கிளம்பும் போது பாட்டி சுருக்குப் பையில் இருந்து ஒரு பத்து ரூபாயை எடுத்து வெண்பாவிடம் கொடுத்தார். “இந்தாடா குட்டி, உனக்கு பிடித்த தின்பண்டம் ஏதாவது வாங்கிச் சாப்பிடு” என்றார்.
அப்பாவும் அம்மாவும் வீட்டில் ஒரு உண்டியலில் காசு சேர்த்து வைப்பதை வெண்பா கவனித்து இருக்கிறாள். தன்னிடம் இருந்த யானை உண்டியலில் பாட்டி கொடுத்த காசைப் பத்திரமாகப் போட்டாள். “இதில் கொஞ்சம் கொஞ்சமாக நாமும் காசு சேர்த்து அடுத்த ஆண்டு அந்த பெரிய அப்பளம் வாங்கிச் சாப்பிடலாம்” மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.
“இந்த ஆண்டு உன் பிறந்த நாளுக்கு என்ன பொம்மை வேணும் வெண்பா” அம்மா கேட்ட போது, “என்கிட்டே நெறய பொம்மை இருக்கே, எனக்குக் காசு கொடுங்க, நான் யானை உண்டியலில் சேர்த்து வச்சுக்கறேன்” என அவள் சொன்னதைக் கேட்டு அம்மா வியந்தார். பிறந்த நாள் அன்று அவள் உண்டியலுக்குக் காசும், ஒரு குட்டி மிட்டாயும் கூடவே நிறைய முத்தங்களும் அப்பாவும் அம்மாவும் பரிசாகக் கொடுத்தார்கள். வெண்பா அந்தக் காசைப் பத்திரமாக உண்டியலுக்குள் சேர்த்தாள்.
வெண்பாவின் இந்த சேமிப்புப் பழக்கத்தைப் பார்த்த அம்மாவும் அப்பாவும் அவ்வப்போது சில சில்லறைக் காசுகளை அவள் உண்டியலுக்குக் கொடுத்தார்கள். அது போக அத்தை கொடுத்தது, மாமா கொடுத்தது, பெரியப்பா குடுத்தது என வெண்பாவுக்கு எப்போதெல்லாம் காசு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் அதை உண்டியலில் சேமித்தாள்.
ஓர் ஆண்டு ஓடி விட்டது. வெண்பா பொருட்காட்சிக்காகக் காத்திருந்தாள். ஒரு நாள் அவள் பள்ளி முடிந்து வரும் போது ஆட்டோவில் மைக் வைத்து ஏதோ அறிவித்துக் கொண்டே போனார்கள். அடுத்த நாள் அவர்கள் ஊரில் பொருட்காட்சி துவங்கப் போகிறது என்பது தான் அது.
வெண்பாவிற்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. ஓடிச் சென்று அவள் யானை உண்டியலை எடுத்து, அதைத் திறந்து, ஒரு செய்தித்தாளைத் தரையில் பரப்பி, இருந்த காசை எல்லாம் அந்தக் செய்தித்தாள் மீது கொட்டினாள். சில்லரையும் நோட்டுமாக இருந்ததை ஒன்று சேர்த்து எண்ணினாள். டெல்லி அப்பளம் வாங்குவதற்குத் தேவையானதை விட கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.
தேவையான அளவு மட்டும் எடுத்துக்கொண்டு, மீதியை உண்டியலிலேயே வைத்தாள். அந்தக் காசை எடுத்துக்கொண்டு போய் அப்பாவிடம் நீட்டினாள்.
“என்னடா இது?” அப்பா ஆச்சரியத்தோடு கேட்டார்.
“பொருட்காட்சி நாளைக்கு ஆரம்பிக்கறாங் களாம்பா, அப்பளம் வாங்கக் காசு சேர்த்து வெச்சிருக்கேன். கூட்டிட்டுப் போறீங்களா?” என கேட்ட நீனாவை “குட்டிப்பிள்ளை இதுக்குத் தான் பிறந்த நாளுக்குப் பொம்மை வேணாம்னு சொன்னீங்களா? ஒண்ணு என்ன, ரெண்டு அப்பளம் வாங்கித் தரேன். நாளைக்கே பொருட்காட்சிக்குப் போறோம்” என்றார் பாசமிகு அப்பா.
அந்த நொடியில் இருந்து மனதில் அப்பளம் வந்து வந்து போனது. உறக்கத்தில் கனவில் கூட அவள் அப்பளம் சாப்பிடுவதைப் போல கனவு வந்தது. பள்ளியில் வகுப்பில் ஆசிரியர் பேசுவது எதுவுமே காதில் விழவில்லை. அவர் நீட்டிய நோட்டுப்புத்தகம் அப்பளக் கடைக்காரர் அப்பளம் கொடுப்பது போலவே அவளுக்கு தோன்றியது.
வாயெல்லாம் பல்லாக அந்த நோட்டை அவள் வாங்கியபோது ஆசிரியர் விநோதமாகப் பார்த்தார். வெண்பாவின் மனதில் இருக்கும் அப்பளம் அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப் பில்லை, இல்லையா?
அன்று மாலை பள்ளி விட்டவுடன் ஓட்டமாக வீடு போய்ச் சேர்ந்தாள். பொருட்காட்சிக்கு “லாலால லாலா.. லாலால லாலா..” என பாட்டுப் பாடியபடியே துள்ளலுடன் நடந்தாள்.
“முதலில் ராட்டினம் போலாமா வெண்பா?” அம்மா கேட்க, “இல்ல இல்ல, முதல்ல அப்பளம். அப்புறம் தான் ராட்டினம்” என்றாள் வெண்பா.
அம்மா கையைப் பிடித்தபடி வேடிக்கை பார்த்துக்கொண்டே நடந்த வெண்பா, ஓரிடத்தில் நின்றாள்.
“அம்மா, இது என்ன கடை? போன ஆண்டு இந்தக் கடை இருந்த மாதிரி தெரியலையே” என்றாள்.
“ஓ.. இது புத்தகக் கடை. இந்த ஆண்டு தான் புதுசா வந்துருக்கு போல” அம்மா சொன்னார்.
உள்ளே கலர் கலராக நிறைய புத்தகங்கள் இருந்தன.
“இந்த கடைக்குள்ள போலாமா?” வெண்பா கேட்டாள்.
“அப்பளம் கேட்டியே” என அப்பா சொல்ல, “இங்க போய்ப் பாத்துட்டு அப்புறம் அப்பளக் கடைக்குப் போலாம்ப்பா” – வெண்பா சொன்னாள்.
புத்தகக் கடைக்கும் வெண்பா அப்போது தான் முதல் முறையாகப் போகிறாள். ஒரே இடத்தில் இவ்வளவு புத்தகங்களா? நடனம் ஆடும் மயில், பறக்கும் யானை, பேசும் டால்பின், மேஜிக் செய்யும் குரங்கு என ஒவ்வொரு புத்தகத்திலும் வித்தியாசமான படங்கள். கண்கள் விரிய ஒவ்வொன்றையும் வெண்பா எடுத்துப் பார்த்தாள். ஒவ்வொரு பக்கமாகத் திருப்பினாள், படங்களைக் கையால் தடவிப் பார்த்தாள்.
பின்னர் அம்மாவை நிமிர்ந்து பார்த்து “எனக்கு அப்பளத்துக்குப் பதில் இந்தப் புத்தகங்கள் வாங்கித் தருவீர்களா?” என்றாள்.
“எத்தனை புத்தகம் வேணும்?” அம்மா சிரித்தபடி கேட்டார்.
“எல்லாமே அழகா இருக்கும்மா. நிறைய வேணும்” என்றாள் வெண்பா, குரலைத் தாழ்த்திக் கொண்டு. அம்மா ஏதும் திட்டிவிடுவாரோ என்ற பயம் அவளுக்கு.
“உனக்கு எத்தனை வேணுமோ எடுத்துக்கோ வெண்பா. புத்தகங்கள் உனக்கு நிறைய கத்துக்கொடுக்கும்” என அப்பா சொல்ல, வெண்பா ஓடிச்சென்று அவளுக்குப் பிடித்த புத்தகங்களை எல்லாம் கைநிறைய அள்ளிக்கொண்டு வந்தாள்.
அவள் எடுத்த புத்தகங்கள் எல்லாம் அவள் வயதுக்கு ஏற்புடையதா எனச் சரி பார்த்த பிறகு அதற்கான காசை அப்பா கடைக்காரரிடம் கொடுத்தார். கடைக்காரர் ஒரு பையில் அந்தப் புத்தகங்களை வைத்து அதை வெண்பாவிடம் கொடுத்தார். கடையை விட்டு வெளியே வந்தபோது வெண்பா அப்பளத்தைச் சுத்தமாக மறந்தே போய் இருந்தாள்.
ஆனால், அப்பா அம்மா அவளை அப்பளக் கடைக்கும் கூட்டிப் போனார்கள் எனச் சொல்ல வேண்டுமா என்ன? ஒவ்வொரு நாளும் வெண்பா ஒவ்வொரு புத்தகமாகப் படித்து ரசித்தாள். தான் படித்த கதைகளை எல்லோரிடமும் பகிர்ந்து கொண்டாள். நீங்களும் இந்தக் கதையை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வீர்கள் தானே?