அன்பாய் வாழ்வோம்!

அன்பாய் வாழக் கற்றிடுவோம் — பேர்
ஆசையைத் தூக்கி எறிந்திடுவோம்!
துன்பம் கண்ட மனிதருக்கு — நாம்
துணையாய் என்றும் உடனிருப்போம்!
சண்டை வேண்டாம் நமக்குள்ளே — என்றும்
சமரசம் வாழ்வின் உயர்வாகும்!
கண்ணியம் காப்போம் உயிராக — உயர்
கடமை நமக்குக் கண்ணாகும்!
தொண்டு செய்யக் கற்றிடுவோம் — ஏழை
துயரம் நீங்கக் கை கொடுப்போம்!
உண்டு நமக்குக் காலமென்றே — நெஞ்சில்
உறுதி கொண்டே உழைத்திடுவோம்!
மடமை நீக்கும் பகுத்தறிவை — நம்
மக்கள் அறிந்தால் பொற்காலம்!
புதுமைத் தொண்டை நாம் செய்தால் – நாளை
புதிய உலகம் படைத்திடலாம்!
அன்னையைப் போற்றி வாழ்ந்திடுவோம் – கல்வி
அய்யம் நீக்கிப் பயின்றிடுவோம்!
குன்றினில் இட்ட விளக்கெனவே – நாம்
குவலயம் புகழ வாழ்ந்திருப்போம்!!
– ஆ.சு.மாரியப்பன்,
புதுக்கோட்டை