தகுதி-திறமை-மோசடி:தகர்த்த மாணவன்
-சிகரம்
தகுதியும், திறமையும் பிறப்பால் தீர்மானிக்கப்படுவதாக ஒரு மோசடியான கருத்து மக்களிடம் திணிக்கப்பட்டு அது நீண்ட நெடுங்காலமாக நடைமுறைப்படுத்தப்பட்டும் வந்தது.
ஜாதி என்பது பிறப்பின் அடிப்படையில் பிரிக்கப்பட்டு, உயர்ஜாதி, தாழ்ஜாதி என்று தரம் நிர்ணயிக்கப்பட்டு, உயர்ஜாதிக்கு திறமையும், தகுதியும் அதிகம், தாழ்ஜாதிக்கு அது குறைவு அல்லது இல்லை என்று கூறப்பட்டது.
உடல் உழைப்பு வேலைகளை மட்டுமே செய்ய தாழ்ந்த ஜாதிக்காரனால் முடியும், அவனால் அறிவுசார், நுட்பம்சார், திறமைசார் வேலைகளை, பணிகளைச் செய்ய இயலாது என்று முடிவு கட்டினர். பிரம்மாவே அப்படித்தான் படைக்கிறேன் என்று இக்கருத்தைக் கடவுளோடு முடிச்சுப் போட்டு, வலுவாக்கினர்.
இதன் நீட்சியால் அப்பன் தொழிலையே பிள்ளை செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்தினர். இதன்வழி கற்றல் என்பது ஒர குறிப்பிட்ட ஜாதிக்கு என்று ஒதுக்கிவிட்டு, மற்ற ஜாதியினர் கற்கக் கூடாது என்று கல்வி மறுக்கப்பட்டனர்.
இதன் விளைவு மிகமிகப் பெரும்பான்மை மக்கள் (90%) கல்வி அறிவு பெறமுடியாமல், விழிப்பும், பகுத்தறிவும் பெறாது காலம் தள்ளினர். இதை எதிர்த்து குரல் கொடுக்கவும், போராடவும் அடித்தட்டு மக்களுக்கு விழிப்பும் இல்லை; துணிவும் இல்லை.
இந்தியாவில் இதை எதிர்த்து குரல்கொடுக்கும் துணிவும், இந்த நிலைக்குக் காரணமானவர்களை அடையாளம் கண்டு (மூலம் அறிந்து) அவர்களை எதிர்க்கும் நுட்பமும் தந்தை பெரியாருக்கு வந்தது. அவருக்குமுன் இந்த எண்ணமும், துணிவும் சிலருக்கு இருந்தபோதிலும், அதைச் செயல் வடிவமாக்கி, இயக்கமாக்கி, போராடியவர் பெரியார் என்பது வரலாற்று உண்மை.
பிறப்பால் ஜாதியைப்பிரித்து ஒதுக்கி, கல்வி மறுத்ததுபோல, பிறப்பால் பெண்ணாய்ப் பிறந்தவர்களுக்கும் கல்வி மறுத்தனர். இதன் வழி மக்களில் 50% பேருக்கு கல்வி மறுக்கப்பட்டு, அவர்கள் சமையலறைக்குள் ஒடுக்கப்பட்டனர்.
பெரியார் அப்படிப்பட்ட பெண்களும் விழிப்பு பெற, உரிமை பெற, ஆணுக்கு நிகராய் அனைத்தும் பெற முதன்முதலில் போராட்டம் நடத்தினார், பரப்புரையாற்றினார், விழிப்புண்டாக்கினார். இதனால் பயன்பெற்ற பெண்கள்தான் பெரியார் என்ற பட்டத்தையே அவருக்குக் கொடுத்தனர்.
ஆக, ஆரியப் பார்ப்பனர்களைத்தவிர மற்ற ஜாதியினருக்கும், ஒட்டுமொத்த பெண்களுக்கும் கல்வி அறிவு பெறவும், உயர்பதவி பெறவும் தகுதியில்லை என்று சாத்திரப்படியும், சட்டப்படியும் கட்டாயக் கருத்துத் திணிப்புச் செய்தனர் ஆரியப் பார்ப்பனர்கள்.
கல்வியளித்து, இடஒதுக்கிடு கொடுத்தால் ஒடுக்கப்பட்ட ஜாதிமக்களும், பெண்களும் உயர் ஜாதியினரைவிடப் பெரும் சாதனைப் புரிவர் என்று எடுத்து விளக்கினார் பெரியார். அதற்காக பெரும் போராட்டங்களையும், பெரும் மாநாடுகளையும் நடத்தினார். மக்கள் எழுச்சியை வைத்து சட்டத்திருத்தம் செய்ய வைத்தார். எல்லோருக்கும் கல்வி என்பதும் இடஒதுக்கீடு என்பதும் நடப்புக்கு வந்தது.
இதன் விளைவாய் படிப்பு வராது என்று ஒதுக்கப்பட்ட மக்களெல்லாம் நன்றாகப் படிக்கின்றனர்; நிறைய படிக்கின்றனர். திறமை இல்லா ஜாதியினர் என்று ஒதுக்கப்பட்டவர்கள் எல்லாம் இன்று எண்ணற்ற சாதனைகள் புரிந்து வருகின்றனர்.
அடுப்பூதும் வேலையே பெண்களுக்கு என்று அடைக்கப்பட்ட நிலைமாற்றி, ஆண்களுக்கு நிகராய் இன்று பெண்கள் அனைத்துத் துறையிலும் சாதிக்கின்றனர்.
கடந்த 30 ஆண்டுகளை கணக்கில் கொண்டு ஆய்வு செய்தால் கல்வியிலும், மற்ற வேலைவாய்ப்புகளிலும், ஆட்சிப்பணிகளிலும் ஆரியப் பார்ப்பனர்களைவிட அதிகம் சாதிக்கின்றவர்கள் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களேயாவர். அதேபோல் ஆண்களைவிட பெண்களே பெரிதும் சாதிக்கின்றனர்.
மாநில அளவில் முதல் மதிப்பெண் ஆரிய பார்ப்பன மாணவர்கள் பெறவில்லை. மற்ற ஜாதி மாணவர்களே பெறுகின்றனர். அதிலும் ஆண்களைவிட பெண்களே பெறுகின்றனர். தொடர்ந்து பல ஆண்டுகளாய் பெண்களே முதல் மதிப்பெண் பெறுகின்றனர். ஆண்களின் தேர்ச்சி விழுக்காட்டைவிட பெண்களின் தேர்ச்சி விழுக்காடே அதிகம் உள்ளது.
பிஞ்சுகளுக்கு இவற்றையெல்லாம் ஏன் குறிப்பிடுகிறோம் என்றால், பிறப்பால் நாம் தாழ்ந்தவர் என்று எந்தப் பிள்ளையும் தாழ்வு மனப்பான்மை கொள்ளக்கூடாது. பிறப்பால் அறிவும், திறமையும் தீர்மானிக்கப்படுவதில்லை. வாய்ப்பாலும், உழைப்பாலுமே தீர்மானிக்கப் படுகிறது. எனவே, கிடைக்கும் வாய்ப்பை, திறமையாகப் பயன்படுத்தி வாழ்வில் உயர வேண்டும்.
இந்த ஆண்டு தேர்வு முடிவுகளையும், இந்த ஆண்டு நீதித்துறை தேர்வு முடிவுகளையும் கணக்கில் கொண்டு பார்த்தால் இந்த உண்மையை எல்லோரும் அறியலாம்.
பிஞ்சுப் பிள்ளைகளுக்கு இந்த நம்பிக்கையை ஊட்ட வேண்டியது பெரியவர்கள் கடமையாகும். பெரியவர்கள் விடுதலை போன்ற ஏடுகளைப் படித்து, அவற்றை பிள்ளைகளும் படிக்கச் செய்து, பிஞ்சு உள்ளத்திலே அஞ்சா நிலையையும், குலையா நம்பிக்கையையும், தெளிவான விழிப்பையும் உண்டாக்க வேண்டும். வருங்கால பெரியார் பிஞ்சுகள் உயர்ந்து சாதிக்க வேண்டும். ஆதிக்கம் அழிக்க வேண்டும்.
ராஜாபாண்டியின் சாதனை
தகுதியும் திறமையும் பிறப்பால் வருவதல்ல என்பதை நிரூபிக்கும் இந்த ஆண்டு மாணவனாக ராஜபாண்டி உயர்ந்து நிற்கிறார். ஊர் ஊராய்ச் சுற்றும் நரிக்குறவர் சமுதாயத்தில் பிறந்தவர் இந்த ராஜபாண்டி.கிருஷ்ணகிரி அருகே உள்ள வெள்ளிமலையில் தன் தாய் வெள்ளச்சியுடன் வாழ்கிறார்.
ஊசிமணி பாசிமணி விற்பது, 100 நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றி அன்றாடம் வயிற்றுப்பாட்டுக்கே போராடும் தாய் வளர்த்த ராஜபாண்டி இந்த ஆண்டு ப்ளஸ் 2 தேர்வில் பெறற மதிப்பெண் 1200 க்கு 1167.(தமிழ் 190, இங்கிலீஷ் 186, கணிதம் 200, இயற்பியல் 196, வேதியியல் 195,உயிரியல் 200) கல்வி கற்பது குறிப்பிட்ட ஜாதிக்கே உரியது என்ற வன்மம் நிறைந்த பொய்யை உடைத்தெரிந்து சாதித்திருக்கும் மாணவன் ராஜபாண்டியை பெரியார் பிஞ்சுகள் சார்பில் வாழ்த்துவோம்; பாராட்டுவோம்.