லண்டன் ஒலிம்பிக் 2012
– பிஞ்சுமாமா
மனித இனம் ஒரு விதையிலிருந்து முலை விட்டிருந்தாலும் நாடு,மொழி,மதம் என பல பிரிவுகளாகத்தானே இருக்கிறது. இந்தப் பிரிவுகளை மறந்து ஒன்றிணைக்கும் கருவியாக இருப்பது விளையாட்டு.
பல்வேறு நாடுகளுக்குள் ஒவ்வொரு விளையாட்டுக்கும் ஒரு குழு இருந்தாலும் ஏறத்தாழ எல்லா நாடுகளும் பங்கேற்கும் உலகளாவிய விளையாட்டு விழா ஒலிம்பிக் மட்டும்தான்.
கி.மு.776 ஆம் ஆண்டு பண்டைய கிரேக்க நாட்டில் தொடங்கிய ஒலிம்பிக் போட்டிகள் இன்று உலகை இணைக்கும் விளையாட்டாக உலக மக்களால் கொண்டாடப்படுகிறது.
அய்ந்து வளையங்கள் ஒன்றுக்குள் ஒன்றாக இணைந்திருப்பது ஒலிம்பிக்கின் சின்னம்.5 வளையங்கள் 5 கண்டங்களைக் குறிப்பதாகும்.
இந்த ஆண்டு நடைபெறப்போவது 30 ஆவது ஒலிம்பியாட் ஒலிம்பிக் போட்டி என்று அழைக்கப்படுகிறது.இங்கிலாந்து நாட்டின் தலைநகரம் லண்டன் மாநகரில்,இந்த ஜூலை மாத 27 ஆம் நாள் தொடங்கி ஆகஸ்டு 12 ஆம் நாளன்று முடிகிறது.
இதற்கு முன் இதே லண்டன் மாநகரில் 1908 மற்றும் 1948 ஆம் ஆண்டுகளில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றுள்ளன.இம்முறை நடைபெறுவது மூன்றாம் முறையாகும்.
இந்தத் தலைமுறைக்கு ஊக்கம் அளித்தல் என்ற முழக்கத்தோடு நடக்கவுள்ள இப்போட்டி களில் 203 நாடுகள் பங்கேற்கின்றன. இந்நாடுகளில் இருந்து தோராயமாக 10,500 விளையாட்டு வீரர்கள் தங்களது திறமையைக் காட்ட இருக்கிறார்கள்.
வில்வித்தை, ஓட்டப்பந்தயம், பூப்பந்து, கூடைப்பந்து, கடற்கரைக் கைப்பந்து, குத்துச்சண்டை, படகுஓட்டுதல், சைக்கிள்பந்தயம், நீச்சல், குதிரைஓட்டுதல், கத்திச்சண்டை, கால்பந்து, ஜிம்னாஸ்டிக், கைப்பந்து, ஹாக்கி, ஜூடோ உள்ளிட்ட 36 விளையாட்டுகளில் போட்டிகள் நடைபெறவுள்ளது.
ஒலிம்பிக் என்றவுடனே எல்லோர் நினைவுக்கும் வருவது ஒலிம்பிக் சுடர்தான். மே மாத 19 ஆம் நாள் இங்கிலாந்தின் செனென் என்ற நகரிலிருந்து தொடங்கி விளையாட்டு வீரர்கள் ஒவ்வொருவராக ஏந்திய படி ஒலிம்பிக் சுடர் லண்டனை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.
ஏறத்தாழ 8 ஆயிரம் வீரர்களின் கைகளில் மாறி மாறி இந்தச் சுடர் சுமார் 1,000 நகரங்கள் மற்றும் இயற்கை அழகு கொஞ்சும் சிற்றூர்கள் வழியாக ஒலிம்பிக் போட்டிகள் நடக்கும் மைதானத்தை ஜூலை 27 அன்று வந்தடைய உள்ளது.
இந்த முறை ஒலிம்பிக் சுடர் ஓட்டத்தை இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்து அசத்திக் கொண்டிருக்கிறார்கள்.நீங்கள் இணையதளத்தில் http://www.london2012.com/torch-relay/video/live.html என்ற முகவரியில் இப்பொழுதுகூடப் பார்க்கலாம். எந்த ஊரில் சுடர் வந்துகொண்டிருக் கிறது.
அதனை யார் ஏந்தி வருகிறார்கள் என்பதை அறியமுடியும். இங்கிலாந்து மக்கள் சிறுவர்,சிறுமியர் உள்பட சாலையின் இருபுறமும் காத்திருந்து, ஒலிம்பிக் சுடர் ஏந்தி வரும் வீரருக்கு வாழ்த்துத் தெரிவித்து வரவேற்கிறார்கள்.
ஒலிம்பிக் போட்டியைக் காண வரும் உலக மக்களை வரவேற்கும் பாடல் ஒன்றைக் காட்சிப்படுத்தி காணொளியாக வெளியிட்டுள் ளார்கள். இதில் ஒரு சிறப்பு என்ன தெரியுமா? பாடலின் தொடக்கத்திலேயே ஒரு தமிழ்ச் சிறுவன் வணக்கம் என்று துள்ளிக்குதித்துக் கூறுகிறான்.அவனைத்தொடர்ந்து பல்வேறு மொழிச் சிறுவர்கள் தத்தம் தாய் மொழிகளில் வணக்கம் கூறுகிறார்கள்.
லண்டனில் உள்ள ஸ்டார்ட்போர்டில் ஒலிம்பிக் விளையாட்டு அரங்கம் ரூ3,400 கோடி செலவில் 2007 ஆம் ஆண்டு கட்டத்தொடங்கி 2011 ஆண்டில் திறக்கப்பட்டுள்ளது.
இதில் 80 ஆயிரம் பேர்வரை ஒரே நேரத்தில் அமர்ந்து போட்டிகளை ரசிக்கலாம்.இநத அரங்கம் முழுவதும் சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்காத பொருள்களால் ஆனது.
லண்டன் இப்போதே களைகட்டிவிட்டதாம். நம்மால் நேரடியாக லண்டனுக்கு சென்று பார்க்கமுடியவில்லையென்றாலும் இணையத்தின் வாயிலாகவும்.தொலைக்காட்சி வாயிலாகவும் நேரலையில் பார்த்து ரசிக்கலாமே.
ஒலிம்பிக் தூதர்கள்
உலகளாவிய ஒவ்வொரு விளையாட்டுப் போட்டிகளின் போதும் ஒரு நோக்கத்தை வலியுறுத்தும் உருவத்தை உருவாக்குவார்கள். அந்த உருவத்தை மாஸ்கட் (mascot) என்று அழைக்கிறார்கள்.
இந்த லண்டன் ஒலிம்பிக்கிலும் மாஸ்கட்கள் உருவாக்கப்பட் டுள்ளன. அவற்றின் பெயர்கள் மாண்ட்வில் (mandeville) மற்றும் வென்லாக் (wenlock).
1948 ல் நடந்த ஊனமுற்றோருக்கான ஒலிம்பிக்கில் வெற்றிபெற்ற ஒரு வீரரின் பெயர் மாண்ட்வில். அவர் நினைவாக ஒரு உருவத்திற்கு மாண்ட்வில் என்றும்,ஒலிம்பிக் வீரரான மச் வென்லாக் என்பவரின் நினைவாக மற்றொரு உருவத்திற்கு வென்லாக் என்றும் பெயரிடப்பட்டுள்ளன.
மாண்ட்வில்லின் தலை ஊனமுற்றோர் ஒலிம்பிக்கில் வீரர்கள் பயன்படுத்தும் தலைக்கவசம் போன்றும், வென்லாக்கின் தலை ஒலிம்பிக் பதக்கங்களைப் போன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இவை இரண்டிற்கு ஒவ்வொரு கண்ணே உள்ளன. இது கேமரா வைக் குறிக்கிறது. அதாவது ஒலிம்பிக் நிகழ்வு களை, விளையாட்டுகளைப் பதிவு செய்துகொள்கி றோம் என்பதை உணர்த்துகின்றன.
தலைகளில் உள்ள விளக்குகள் லண்டனில் உள்ள டாக்சிகளின் விளக்குகளைப் போன்று அமைக்கப்பட்டுள்ளன. வென்லாக்கின் கைகளில் 5 நிறங்களில் அமைந்த ஒலிம்பிக் வளையங் களை அணிந்துள்ளது.மாண்ட்வில் தனது வலது கையில் கடிகாரத்தைக் கட்டியுள்ளது. விளையாட்டில் நேரம் முக்கியமல்லவா! அதனைக் குறிக்கவே இந்த வடிவமைப்பு.
மாண்ட்வில்லும் வென்லாக்கும் இப்போது இங்கிலாந்தில் மிகப் பிரபலமான உருவங்கள். சிறுவர், சிறுமியர் அனைவரும் பள்ளிக்கூடப் பைகள், தண்ணீர்க் குடுவைகள், ஒட்டிகள், சட்டைகள், தொப்பிகள் என எல்லாவற்றிலும் மாண்ட்வில்-வென்லாக் படங்கள் பதித்தவற்றையே வாங்கிச் செல்கின்றனராம்.அந்த அளவுக்கு பிரபலமாகிவிட்டன.