ஞாயிற்றைக் கடந்த வெள்ளி….
பள்ளி செல்லும் நாள்களில் பிள்ளைகளை அதிகாலையில் எழுப்புவது என்பது பெற்றோர்களுக்கு பெரும் பிரச்சினை. ஆனால்… கடந்த 06-.06.2012 புதன்கிழமை அன்று அதிகாலை பல பெற்றோர்களுக்குப் பிரச்சினையே இன்றிப் பல பிள்ளைகள் எழுந்து பூமி சுழலும் வேகத்துக்கு இணையாக ஆயத்தமானார்கள்.
சூரியனுக்கு முன்னால் சின்னப் புள்ளியாய் நகர்ந்த வெள்ளியைக் காண வெவ்வேறு இடங்களில் தொலைநோக்குக் கருவி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
வெள்ளியின் நீள்வட்டப்பாதை என்பது ஏறுமுகமாகவும், இறங்குமுகமாகவும் உள்ளதால் ஒரு நூற்றாண்டில் இரண்டு முறை மட்டுமே அதுவும் எட்டு ஆண்டு இடைவெளியில் கடந்த 2004_ல் நிகழ்ந்த, பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலான வெள்ளி நகர்வு 2012_ல் நிகழ்ந்தது. இதன்பின் கி.பி.2117இல்தான் நிகழுமாம்.
அதுவும் தமிழ்நாட்டில் பார்க்க முடியாதாம். எனவே எல்லாப் பிள்ளைகளும் துள்ளியெழுந்து ஞாயிற்றைக் கடந்த வெள்ளியை புதன்கிழமை கண்டு களித்தனர்.
பெரும்பாலும் எல்லாப் பிள்ளைகளும் சூரிய ஒளியை வடிகட்டிய பாதுகாப்பான கண்ணாடியை அணிந்து பார்த்தார்கள். மற்றவர்களுக்கும் சொன்னார்கள்.
எல்லோரும் சொன்ன வார்த்தை அய்யோ சூப்பர். சூரியன் சிவப்பா அழகா நிலா மாதிரி தெரியுதே என்பதுதான். அடுத்தடுத்த மாணவர்களும் பெரியவர்களும் கூட ஆமா, ஆமா. சூரியன் செக்கச்செவேர் என்று நிலா மாதிரி தெரியுது என்றார்கள்.
குறும்புக்கார மாணவன் ஒருவன் அது நிலாமாதிரி தெரிந்தால் பாட்டி வடை சுடுறாங்களா பாரு என்றான்.
இன்னொருவனோ, டேய் அப்படியே வடை சுட்டாலும் இப்போ விலை ஏறி இருக்கும். இல்லாட்டி வடை அளவு சின்னதாயிருக்கும் என்றான். இன்னொரு மாணவி தன் தோழியை சீக்கிரம் வா கிழவி என்றாள்.
அவள் கோபித்துக்கொண்டாள். அதற்கு அந்த மாணவி ஏய் இப்ப நடக்கிற வெள்ளிப் பெயர்ச்சியை நீ உன் நோட்டில் பதிவு செய்தால் உனது மூன்றாவது தலைமுறைதான் பார்க்கும்.
அப்போது அந்த தலைமுறை உன்னை எப்படிச்சொல்லும். 2012இல் நிகழ்ந்தபோது என் பாட்டி பார்த்ததாக எழுதி வைத்திருக்கிறார் என்றுதானே சொல்லும். அப்போது நீ கிழவிதானே என்றாள். மாணவி அப்போது நீ மட்டும் என்ன குமரியாகவா இருப்பாய்? நீயும்தான் கிழவியாகி இருப்பாய் என்றாள்.
நாம் வாழும் பூமி மூன்றாம் இடத்தில் இருக்கிறது என்றால் சூரியனுக்கும் பூமிக்கும் இடையே இரண்டு கோள்கள் இருப்பதை அல்லது இப்படி கடப்பதை கண்டால்தான் பூமி 3ஆம் இடத்தில் இருப்பதை ஏற்க முடியும். அதற்கு ஆதாரமான காட்சியை, இந்த நிகழ்வை அறிவியலில் ஆர்வமுள்ளோர்கள் அனைவரும் கண்டு மகிழ்ந்து குறிப்பெடுத்தனர்.
கோள்களின் இயக்கத்தைப் போற்றுவோம். ஞாயிறு மையக் கோட்பாட்டை சிந்தித்து அளித்த நிக்கோலஸ் கோபர்நிகசைப் போற்றுவோம்! அந்தக் கோட்பாட்டை உலகெங்கும் பரப்பி மதவாதிகளால் உயிரோடு கொளுத்தப்பட்ட புருனோவின் ஈகத்தை நினைவு கூர்வோம்!
– செந்தமிழ் சேகுவேரா